21வது திருத்தச் சட்டம்; மொட்டுக் கட்சிக்குள் விரிசல்! - Sri Lanka Muslim

21வது திருத்தச் சட்டம்; மொட்டுக் கட்சிக்குள் விரிசல்!

Contributors

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டாக பிரியும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் மேலும் சிலர் எதிர்ப்புகளை முன்வைத்துள்ளதால், இந்த சூழல் உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது.

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்படுவது மற்றும் ஜனாதிபதி அதிகாரங்களில் ஒரு பகுதியை பிரதமருக்கு பகிர்வது சம்பந்தமாக பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை தடுக்கும் ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் எதிர்க்கின்றனர்.

ஒரு சிலரை குறி வைக்கும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை கொண்டு வரக் கூடாது என அவர்கள் கூறி வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில், புதிய திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பெரும்பாலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தாலும் மேலும் சிலர் எதிராக வாக்களிக்கலாம் அல்லது வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாது தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக அந்த கட்சிக்குள் முரண்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், அது கட்சி பிளவுப்படும் அளவுக்கு செல்லக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாட எதிர்வரும் திங்கள் கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team