69 இலட்சம் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு உள்ளது என கூறும் தரப்பினரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும்..! - Sri Lanka Muslim

69 இலட்சம் மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு உள்ளது என கூறும் தரப்பினரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும்..!

Contributors
author image

Editorial Team

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிபீடமேற்றிய 69 இலட்ச மக்கள் தான் இன்று அவரையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு ஒன்றிணைந்து வலியுறுத்துகிறார்கள்.

69 இலட்ச மக்களின் ஆதரவு இன்றும் உள்ளது என குறிப்பிடும் தரப்பினரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும்.

மக்களின் போராட்டத்தை முடக்க அரசாங்கம் ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் அது அரசாங்கத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரச தலைவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

69 இலட்ச மக்களின் ஆதரவு இன்னும் அரசாங்கத்திற்கு உள்ளது என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. மக்களாணையை மதிப்பிட தேர்தலை நடத்த வேண்டிய தேவை கிடையாது. அறிவார்ந்தவர்கள் அதனை நன்கு அறிவார்கள். அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் சரி,பிரமாதம் என குறிப்பிட்டவர்கள் தான் இன்றும் 69 இலட்ச மக்கள் குறித்து கருத்துரைக்கிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிபீடமேற்றிய 69 இலட்ச மக்கள் தான் அவரையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி நீங்குமாறு ஒன்றினைந்து வலியுறுத்துகிறார்கள். அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கிடையாது.

மக்களின் விருப்பத்திற்கு முரணாக அரசாங்கம் தொடர்ந்து பதவி வகித்தால் மக்களின் போராட்டம் தீவிரமடையுமே தவிர குறைவடையாது.நாட்டு மக்களின் போராட்டத்தை முடக்க அரசாங்கம் ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டால் அது அரசாங்கத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாட்டு மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது. தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய மக்களுக்கு இடமளிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு 5 வருடகால பதவி காலம் உள்ளது ஆனால் மக்களாதரவு இல்லை. பாராளுமன்றில் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதால் மாத்திரம் மக்களாதரவை பெற்று விட முடியாது.

அரசாங்கத்தின் பெரும்பான்மையை பலத்தை இனி பாராளுமன்றில் பார்த்துக்கொள்ளலாம். புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வு காண முடியுமே தவிர நீண்டகால தீர்வு காண முடியாது. பொதுத்தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாக உள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team