நீர்கொழும்பில் முப்பெரும் விழா!

கொழும்பு – தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின், நீர்கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளை மற்றும் நீர்கொழும்பு – பெரியமுல்லை அஹதிய்யாப் பாடசாலை இணைந்து நடாத்திய மீலாத் விழா, பரிசளிப்பு விழா, வாழ்வோரை வாழ்த்தும் விழா ஆகியன உள்ளடங்கிய முப்பெரும் சிறப்பு விழா நிகழ்வுகள், நீர்கொழும்பு – மாரிஸ்டலா உள்ளரங்கில்  அண்மையில் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில், அகில இலங்கை கல்வி மாநாட்டின் பதில் தலைவரும், கல்வி அமைச்சின் இஸ்லாம் பாட ஆலோசனை சபை உறுப்பினரும், ஓய்வு நிலை அதிபருமான எம்.எம்.எம். றிழ்வான் பிரதம அதிதியாகவும், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீட், இலங்கை அஹதிய்யாப் பாடசாலை மத்திய

சம்மேளனத்தின் தேசியத் தலைவர் எம்.ஆர்.எம். ஸரூக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பேருவளை – ஜாமிஆ நழீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ் ஷேய்க் எஸ்.எச்.எம். பழீல் விசேட பேச்சாளராகவும்கலந்து சிறப்பித்தனர்.கம்பஹா மாவட்டப் பாடசாலைகள், அரபு மத்ரஸாக்கள், அஹதிய்யாப் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் ஆகியவற்றிற்கிடையே தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் நடைபெற்ற பல்வேறு இஸ்லாமியப் போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வெற்றிபெற்ற மாணவர்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
வை.எம்.எம்.ஏ. யின் முன்னாள் தலைவர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபாடுள்ள பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வுகளின்போது பதக்கம் வழங்கி கெளரவிக்கப்படனர்.
இம்முப்பெரும் சிறப்பு நிகழ்வுகளில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்ட பணிப்பாளர் நஸாரி காமில், பேரவையின் உறுப்பினர்கள், நீர்கொழும்பு கிளை உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். 

கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து நடந்த 2,500 மாணவ மாணவிகள் பங்குபற்றிய இப்போட்டி நிகழ்வுகளில், நீர்கொழும்பு – விஸ்டம் சர்வதேச பாடசாலை முதலாம் இடத்தையும், சீதுவ – செய்லான் சர்வதேச பாடசாலை இரண்டாம் இடத்தையும், நீர்கொழும்பு – அல் ஹிலால் தேசிய பாடசாலை மூன்றாம் இடத்தையும் சுவீகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Previous post காஸாவில் சிக்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்!
Next post ’’ரணிலை பாம்பு எனக் கூறவில்லை” – நாமல் பல்டி!