‘திருடனை வெளிப்படுத்தியவர் உதைத்து வெளியேற்றி, ஊழல் செய்த குழு பாதுகாக்கப்பட்டுள்ளது’ – சஜித்!

கிட்டிய காலத்தில் பாராளுமன்றத்தில் 225 பேரும் ஊழலுக்கு எதிராக ஒன்று சேர்ந்த ஒரு சந்தர்ப்பமாக, கிரிக்கட் நிர்வாகத்திற்கு எதிராக பாராளுமன்றத்தின் தீர்மானம்  நிறைவேற்றியதை குறிப்பிட முடியுமாக இருந்தாலும், இன்றளவில் இந்த தீர்மானத்திற்கு முரனாக திருடனை வெளிப்படுத்திய நபர் உதைத்து வெளியேற்றி, ஊழல் செய்த குழு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

“திருட்டில் ஈடுபட்டால் பரவாயில்லை,ஆனால் திருடர்களைப் பிடிக்க வேண்டாம்” என்றும், “Yes sir, Yes Sir” (ஆம் சேர்,ஆம் சேர்)என கூறிக்கொண்டு பதவிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றும்,இல்லையேல் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவிற்கு நடந்தது போன்று நடக்கலாம் என்ற சிவப்பு எச்சரிக்கை ஜனாதிபதி அவர்களால் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவை அப்பதவிகளில் இருந்து நீக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் ஜனாதிபதி தவறான வழியில் செயற்பட்டார் என்றும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி,

இறுதியாக பாராளுமன்றத்தை கிடப்பில் போட்டுள்ளார் என்றும்,தேர்தலை நடத்துவது தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பைக்கூட அவர் புறக்கணித்தார் என்றும்,அவரை வழிநடத்த மறைகரம் ஒன்று பின்னால் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சீனி,மருந்து,கிரிக்கெட் போன்ற மாபியாக்களினால் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் கூட தீர்மானங்கள் எடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருடன் இணைந்து தான் கிரிக்கெட் மீதான தடையை நீக்க பணியாற்றியதே தவிர,தான் ஒருபோதும் அரசியல் சதி செய்ய முயற்சிக்கவில்லை என்றும், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க மட்டுமன்றி தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பலர் தம்மை சந்திக்க வருகிறார்கள் என்றும், எனவே நீங்கள் கூறும் வாதத்தின் அடிப்படையில் அவர்களையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்தை பெறுவது நபர்கள் மாற்றத்தால் அல்லாது மக்கள் ஆணையாலயே என்றும்,எனவே,சதிகளுக்கு எதிர்க்கட்சி தயாராக இல்லை என்றும்,வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் ஆணை கிடைக்காத ஜனாதிபதியால், மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெளியேற்றம் செய்யப்பட்டார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Previous post பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நெருக்கடியான நிலை!
Next post முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!