பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து நியமனம்!

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கலந்துரையாடியுள்ளதாகவும், விரைவில் இந்த பதவி நியமனம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

அரசியலமைப்பின் படி,  பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி..விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். 

அடுத்த பொலிஸ் மா அதிபராக முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஜனாதிபதி இந்த நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். 

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். அத்துடன், சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்களைக் கொண்டதாக அரசியலமைப்பு சபை காணப்படுகின்றது.

இந்த நிலையில், உத்தேச நியமனத்துக்கு ஜனாதிபதியும் அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

அத்துடன், அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் ஊகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous post யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு இலவச தங்குமிட வசதி!
Next post பள்ளிவாசல்களில் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரி மனு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!