இம்ரான்கானின் மனைவிக்கும் 14 ஆண்டுகள் சிறை – இம்ரான்கானுக்கு மொத்தம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று, சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பரிசுப்பொருட்களை அரசு கருவூலமான தோஷகானா என்ற துறையில் ஒப்படைக்காமல் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல், அரசின் இரகசியங்களை கசியவிட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, வன்முறையை தூண்டியதாகவும் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், இம்ரான்கான் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரதமராக இருந்தபோது அரசின் இரகசியங்களை கசியவிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை (30)  நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு எதிரான தோஷகானா பரிசுப்பொருள் ஊழல் வழக்கு நீதிமன்றில் இன்று புதன்கிழமை (31) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் இம்ரான்கானும் அவரது மனைவி புஷ்ரா பிபியும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான்கான் அவரது மனைவி, 10 ஆண்டுகளுக்கு அரசு பதவிகள் வகிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் 787 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கு தொடர்பாக இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பிபி புதன்கிழமை (31)  ஆஜராகவில்லை.

அரசு இரகசியங்களை கசியவிட்டதாக இம்ரான்கான் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது பரிசுப்பொருள் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வரும் 8ம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு வழக்குகளில் இம்ரான்கானுக்கு மொத்தம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous post ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு புதிய அமைச்சு!
Next post சவூதியின் திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவர் வபாத்!