யாப்பு மாற்ற முயற்சி சொல்லும் ரணிலின் பாதை என்ன..?

ஒரு நாட்டின் யாப்பு மிக முக்கியமானது. அதுவே ஒரு நாட்டை சீரிய பாதையில் வழி நடாத்தி செல்ல தேவையான முக்கிய வழிகாட்டியாகும். இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள், தங்களுக்கு சாதகமான விதத்தில் யாப்பை மாற்ற முனைவது மிகவும் கவலையான ஒன்று. மீண்டும் யாப்பு மாற்றமொன்றுக்கு ஜனாதிபதி ரணில் தயாராகி வருகிறார். அவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதை அரசியல் களத்தில் அவதானிக்க முடிகிறது. இவ் விடயத்தை வைத்து எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பல விடயங்களை எம்மால் சாதாரணமாகவே ஊகிக்க முடியும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவாரா என்ற வினாவை பலரிடத்திலும் அவதானிக்க முடியும். தன்னால் ஜனாதிபதியாக முடியும் என்றால், ஒருபோதும் நிறைவேற்றதிகார ஒழிப்புக்கு செல்ல முனைய மாட்டார் ரணில். இதனை வைத்து நோக்கும் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் ஜனாதிபதி வேட்பாளாராக போட்டியிட மாட்டார் என்பதை திடமாக கூற முடியும். தான் ஜனாதிபதியாக உள்ள நிலையில், அவ் அதிகாரத்தின் பெரும் பகுதியை குறைத்த ஜனாதிபதியாக மைத்திரி மாத்திரம் சுட்டிக்காட்ட முடியும்.

ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் நீக்கப்பட்டால் அதிகாரமனைத்தும் பிரதமரிடம் செல்லும். இதன் மூலம் ரணில் பிரதமர் பதவியையே குறி வைப்பதை சாதாரணமாக ஊகிக்க முடிகிறது. அப்படியானால், இன்று அவர், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளாரே எனலாம். இவ்வாறான அறிவிப்பின் மூலம், தனது மறைமுக திட்டத்தை தந்திரமாக மறைக்க முனைவதாகவே நோக்க முடிகிறது.

இத் திட்டம் ரணில் செய்யாத புதிய ஒன்றுமல்ல. இது போன்ற திட்டங்களையே 2010, 2015 ஜனாதிபதி தேர்தல்களில் பொது வேட்பாளர்களை களமிறக்கி ரணில் செய்திருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் கருவை பொது வேட்பாளராக்கி செய்ய முனைந்தார். இருந்தும் அது அவருக்கு கை கூடவில்லை. இம் முறையும் இது போன்ற ஒன்றை செய்யப் போவதையே இவ் விடயம் எமக்கு துல்லியமாக்கின்றது.

ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை.

Previous post மீகொடயில் துப்பாக்கிச் சூடு – சிறுமி காயம்!
Next post அனுரகுமாரவின் சவால்!