மனிதாபிமானமற்ற பகிடி வதையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் இணைந்த பொது வேலைத்திட்டம் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும். – ஜனாதிபதி - Sri Lanka Muslim

மனிதாபிமானமற்ற பகிடி வதையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் இணைந்த பொது வேலைத்திட்டம் குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும். – ஜனாதிபதி

Contributors
author image

Presidential Media Division

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து பொது வேலைத்திட்டம் ஒன்று குறித்து உடனடியாக சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். இன்று (08) முற்பகல் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பண்பாடற்ற முறையில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதை காரணமாக கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு விரும்பத்தகாத விடயங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்க உள்ள மாணவர் தலைமுறைக்கு ஏற்பட்டுள்ள இந்த சவாலுக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகளின் பின்னால் சில அதிகார மோகம் பிடித்த அரசியல் அமைப்புக்கள் செயற்படுவதாகவும் நாட்டின் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் இந்த பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கு அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கனணி மற்றும கைத்தொலைபேசியின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த விரும்பத்தகாத நிலைமைகள் குறித்து அரசாங்கம் விரிவாக கவனம் செலுத்தியிருப்பதாக தெரிவித்தார்.

பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மகிழ்ச்சியடைவதைப்போன்று சிறந்ததோர் சமூகத்தில் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் சமூகப் பொறுப்புக்கள் குறித்து தெளிவுடன் செயற்படும் பரீட்சை போன்று வாழ்க்கையிலும் சித்திபெறும் எதிர்கால தலைமுறையை நாட்டில் உருவாக்குவதற்கு தமது பொறுப்புக்களை அனைவரும் நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தின் நெத்மின வித்யானி லியனேகே என்ற மாணவியின் அழைப்பின்பேரில் இன்று அக்கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாடசாலை வளாகத்தில் உள்ள ரணவிரு நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளித்தார். ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூரும் முகமாக பாடசாலை வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்று நடப்பட்டது.

அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்றுக்கொண்ட பாடசாலை சாரணர் குழுவிற்கான சான்றிதழ்களும் 2018 அகில இலங்கை நடனப் போட்டியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டன.

நெத்மின வித்யானி லியனேகே என்ற மாணவிக்கு ஜனாதிபதி அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலை அதிபர் டி.எம்.ரணதுங்கவினால் ஜனாதிபதி அவர்களுக்கும் விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, டிலான் பெரேரா, ஊவா மாகாண ஆளுநர் ஆரிய பி.ரெக்கவ, முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன புஸ்பகுமார, மாவட்ட செயலாளர் எம்.பி.புஸ்பகுமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team