இளவரசரை நீக்குவதா? சாத்தியமே இல்லை’ செளதி அமைச்சர் கண்டிப்பு - Sri Lanka Muslim

இளவரசரை நீக்குவதா? சாத்தியமே இல்லை’ செளதி அமைச்சர் கண்டிப்பு

Contributors
author image

BBC

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு குரல்கள் மற்றும் கண்டனங்கள் உள்ள நிலையில், செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை நீக்க வேண்டும் என்ற அறைகூவல்கள் அபாயகரமானவை என்றும், அவை நடப்பதற்கு சாத்தியமேயில்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கஷோக்ஜியின் கொலையில் செளதி இளவரசருக்கு எந்த பங்கும் இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் குறிப்பிட்டார்.

கஷோக்ஜியின் கொலையில் சல்மானுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கோரிக்கை விடுத்தற்கு அடுத்த நாளில் செளதி அமைச்சரின் இந்த மறுப்பு வெளிவந்துள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் ஜமால் கஷோக்ஜி மிருகத்தனமாக கொல்லப்பட்டது குறித்து சௌதியின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு ‘தெரிந்திருக்கும் அல்லது தெரியாமல் கூட இருக்கலாம்’ என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

கஷோக்ஜி கொலை: 'இளவரசரை நீக்குவதா? சாத்தியமே இல்லை' செளதி அமைச்சர் கண்டிப்பு

ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்களை சௌதி அரேபியா பெற்றபோதும், அந்நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.

அடேல் அல்-ஜுபேர் கூறியது என்ன?

பிபிசியின் தலைமை சர்வதேச செய்தியாளரான லீஸ் டூஸேட்டுடன் பேசிய அடேல் அல்-ஜுபேர், ”செளதி அரேபியாவில் எங்கள் தலைமை யாராலும் நீக்கி முடியாத உயரத்தில் உள்ளது. மன்னர் சல்மானும், இளவரசர் முகமது பின் சல்மானும் அவ்வாறான நிலையில் உள்ளவர்கள்” என்று தெரிவித்தார்.

”அவர்கள் இருவரும் செளதியின் ஓவ்வொரு குடிமகனின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர். நாட்டின் மக்களும் இவர்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அதனால் எங்கள் மன்னர் அல்லது பட்டத்து இளவரசரை இகழ்வது போன்ற எந்த விவாதத்தையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.Presentational grey line

Presentational grey line

ஜமால் கஷோக்ஜியின் கொலையில் இளவரசருக்கு எந்த பங்கும் இல்லை என்று அடேல் அல்-ஜுபேர் மீண்டும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.

”நாங்கள் இது குறித்து மிகவும் தெளிவாக கூறிவிட்டோம். இந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை நாங்கள் தண்டிப்போம்” என்று அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் அளித்தார் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி ஐ ஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இது தொடர்பான ஆதாரங்களின் விரிவான மதிப்பீட்டை சி ஐ ஏ செய்துள்ளதாகவும் அதன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

கஷோக்ஜிபடத்தின் காப்புரிமைEPA

முன்னதாக, பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையை விசாரிப்பதில் அதிபர் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, வெள்ளை மாளிகைக்கு வர அமெரிக்க அதிபர் தனக்கு விடுத்த அழைப்பை கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் நிராகரித்தார்.

டிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல கருத்தை தோற்றுவிப்பதற்கு என எண்ணுவதாக ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறினார்.

முன்னதாக, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி, சௌதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்.

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

இந்த சம்பவத்தால் சௌதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team