கலாவெவ சப்ரியின் "சுவனத்து தென்றல்" கவிதை நூல் வெளியீடு. - Sri Lanka Muslim

கலாவெவ சப்ரியின் “சுவனத்து தென்றல்” கவிதை நூல் வெளியீடு.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் கலாவெவ சப்ரியின் “சுவனத்து தென்றல்” கவிதை நூல் வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் சனிக்கிழமை (01) முதலாம் திகதி கலாவெவ மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் எழுத்தாளர் கெக்கிராவை சுலைஹாவின் தலைமையில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கெக்கிராவ வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.வேகொள்ளவும், சிறப்பு அதிதியாக கெகிராவ கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.இ.ராஜ் ரெனுசியாசும் கலந்து கொள்ளவுள்ளனர், நூலின் முதற்பிரதியை சட்டத்தரணி திரு நூர்தீன் சவாஹிர் பெற்றுக்கொள்வார். நூல் அறிமுகத்தை யூ டிவியின் பிரதான நிகழ்ச்சி தொகுப்பாளர் பிஸ்ரின் மொஹமட் நிகழ்த்தவுள்ளார்.

நூல் தொடர்பிலான உரைகளை நாச்சியாதீவு பர்வீன் மற்றும் நேகம ஸியாத் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர். கவிவாழ்த்தினை சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி பாடவுள்ளார். ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் கலாவெவ சப்ரி மேற்கொள்வதோடு நிகழ்ச்சி தொகுப்பினை கவிஞர் நேகம பசான் மேற்கொள்வார்.

அனுராதபுர தமிழ் கவிதைப்புலத்திற்கு புதியவரான சப்ரி கலாவெவ எனும் புராதன முஸ்லிம் கிராமத்தை சேர்ந்தவராவார். ஆன்மீகத்துறையில் ஈடுபாடுகொண்ட இவரின் கவிதைகளும் ஆன்மீகத்தை பேசிவருவது பரவலாக இவரது கவிதைகளை வாசிக்கும் போது புலப்படும். இவரது கவிதை தொகுப்பின் வரவானது அனுராதபுர மாவட்டத்து தமிழ் இலக்கியப்பரப்பின் வளர்ச்சியில் இன்னொரு பரிணாமத்தை அடையாளப்படுத்தும் வகையில் அமையலாம். இது கவிஞரின் கன்னிக்கவிதை நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2018-11-23 at 17.52.50

Web Design by Srilanka Muslims Web Team