இலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி - Sri Lanka Muslim

இலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சவூதி அரேபியாவில் அமைந்துள்ள மதீனா-இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கலாநி பட்டப்படிப்புக்கான போட்டிப் பரீட்சையில் சர்வதே நாடுகளை பிரிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட பல நூற்றுக்கணக்கான மாணவர்களுள் இலங்கையைச் சேர்ந்த முதுமாணி கற்கை மாணவன் அஷ்ஷைக் அப்துல்லாஹ் அகீல் அப்பாஸீ-மதனீ அவர்கள் இஸ்லாமிய பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக தகுதி பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.

இவர் இலங்கை, அவிஸ்ஸாவலை – தெகியோவிட்ட நகரைப் பிறப்பிடமாகக் கொண்டதோடு மார்க்கப் பற்றுள்ள ஓர் அழகிய குடும்பப் பின்னணியைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தனது ஆரம்பக் கல்வியை மேற்குறித்த தனது ஊரில் கற்ற அதேவேளை புனித அல்குர்ஆனை திறம்பட மனனமிட்டு சிறந்த ஹாபிழாக திகழ வேண்டும் எனும் நோக்கில் அகுரனை மீஸானிய்யா அரபுக் கல்லூரியில் சேர்ந்து தனது உயரிய நோக்கத்தை அடைந்து ஹாபிழாக பட்டம் பெற்று வெளியேறினார்.

பின்னர் மார்க்கக் கல்வியை முறையாக கற்கும் பொருட்டு கல்வியில் பல உயர் அடைவுகளை அடைந்து சிறந்து விளங்கும் கல்லூரியாகிய காலி-இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இணைந்து ஆலிம் கற்கைநெறியைப் பூர்த்தி செய்து விஷேட சித்தி பெற்று சிறந்த ஆலிமாக பட்டம் பெற்றார். தொடர்ந்து கற்ற கல்வியை கற்பிக்கும் பேரவாவுடன் தான் கற்ற அதே கல்லூரியில் சில வருடங்கள் விரிவுரையாளராக பணிபுரிந்தோடு கொழும்பிலுள்ள தாருல் ஹதீஸ் நிலையத்திலும் சிறிது காலம் கடமையாற்றியது மாத்திரமன்றி, கல்விப் பயணத் தொடரில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி அங்கு கற்றுக் கொண்டிருந்த போது மதீனா பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகி அங்கு இஸ்லாமிய சட்ட பீடத்தில் கற்பதற்குத் தகுதி பெற்றார்.

இஸ்லாமிய சட்ட பீடத்தில் சிறப்பாகக் கற்று தனது இளமாணி பட்டப்படிப்பை முதல் தர விஷேட சித்தியில் நிறைவு செய்து, மேற்குறித்த பீடத்தில் கற்கும் பல்லாயிரக்கணக்கான சர்வதேச நாட்டு மாணவர்களுள் அதிகூடிய முதல் தர புள்ளிகளில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்களுள் ஒரவராக தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இளமாணி பட்டப்படிப்பை பூர்த்தி செய்த ஷைக் அப்துல்லாஹ் அகீல் அப்பாஸீ-மதனீ அவர்களது கல்வித் தாகம் மேற்படிப்பை நோக்கி நகர ஆரம்பித்ததையடுத்து பல நூறு மாணவர்களுக்கு மத்தியில் இஸ்லாமிய பொருளாதார துறையில் நடைபெற்ற முதுமாணி போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து முதுமாணி கற்கைக்குத் தகுதியாகி இறுதி ஆய்வை சமர்ப்பிக்க இருக்கும் வேளையில் தற்பொழுது அதே துறையில் கலாநிதி பட்டப்படிப்புக்காக நடாத்தப்பட்ட தகுதிகாண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த ஒரேயொரு இலங்கை மாணவன் இவர் எனில் ஒரு போதும் மிகையாகாது.

இவர் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் போற்றுமளவு அனைவருடனும் பண்பாக பழகும் வண்ணம் அழகிய குணங்களை தன்னகத்தே கொண்ட பல திறமைகளுள்ள ஒரு சிறந்த ஆளுமை மட்டுமல்லாது அல்குர்ஆனை அழகிய குரலில் ஓதும் காரீ என்பதும் மெச்சத்தக்கதொன்றாகும்.

இலங்கைக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்த்து தன்னை இறைக் கல்விக்காக அர்ப்பணித்துள்ள அஷ்ஷைக் அப்துல்லாஹ் அகீல் அப்பாஸீ- மதனீ அவர்களை போற்றி எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இதே வேளை வல்லவன் அல்லாஹ்விடம் இவரது கல்விப் பாதை மென்மேலும் சிறக்கவும், இவரது கல்விக் கடலிலிருந்து ஏனைய மக்களும் பயனைய பிரார்த்திக்கிறோம்.

الحمد لله الذي بنعمته تتم الصالحات أولا وآخرا
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா மதனீ BA hons, PGD in Guidance and Counselling at Madeena
03/01/2019

Web Design by Srilanka Muslims Web Team