றியாஸ் குரானாவுடன் பின் நவீன கவிதை – நேர்காணல்

0 0
Read Time:7 Minute, 15 Second

கேள்வி – ஒரு பார்வையில் பார்த்தால் , கவிதை எளிமை படுத்துவது தவறு என நீங்கள் வாதிடுவதாக தோன்றுகிறதே?

றியாஸ் குரானா

நவீன கவிதையை எப்படி கடக்கிறோம் என்பதை சொல்கிறேன். அதுபோல, கவிதை எப்படி நகர்ந்து வந்திருக்கிறது என்பதையும் சொல்கிறேன். எளிமை என்பது வாசிப்பு பயிர்ச்சியை பொறுத்து உருவாகுவது. ஒரு தமிழ் பாட மாணவனுக்கு திருக்குறள் புதுக்கவிதையைவிட எளிமையானதுதான்.

கேள்வி – நினைவு வைத்து கொள்ள எளிதான வடிவில் , சந்தத்தில் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எழுதினார்கள்…அது ஓர் அழகுதானே?

றியாஸ் குரானா

அந்தத்தேவை இப்போது இருப்பவர்களுக்கு அதை பரிந்துரைப்போம். ஆனால், கவிதை ஒரு கற்பனையான சிந்தனை முறை என யோசிப்பவர்களுக்கு வேறு தேர்வு அவசியம்தானே இல்லையா?

கேள்வி – நவீன கவிதை காலாவதி ஆவது ஓகே..ஆனால் நவீன கவிதையின் எல்லா சாத்தியங்களையும் தமிழ் முயன்று பார்த்து விட்டு , பின் நவீனத்துவத்துக்கு தயாராகி விட்டதா? நாவலை பொறுத்தவரை , பின் நவீனத்துவத்துக்கு இன்னும் தயாராகவில்லை என்பது பலர் கருத்து

றியாஸ் குரானா

நாவல் சிறுகதை எல்லாம் மிக முந்தியே அதைச் செய்துவிட்டன. எதுவும் அதன் அனைத்துச் சாத்தியங்களையும் நிகழ்த்திவிட்ட பிறகுதான் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பது ஒருவகை எதிர்பார்ப்பு . ஆனால், அது அப்படியல்ல. எந்தக் கருத்துநிலையும் முழுமையாக செயற்படுத்தப்படுவதோ, முழுமையாக நிராகரிக்கப்படுவதோ இல்லை. அதன் முக்கியமான சரடு கேள்விக்குள்ளாகும் புலத்திலிருந்து அது உடைத்துக்கொண்டு போய்விடுகிறது

கேள்வி – பின்நவீன கவிதை சாத்தியங்களை மாத்திரமே கருத்திற்கொள்கிறது- இதுதான் பின் நவீனத்துவத்தின் வரையறையா

றியாஸ் குரானா

நவீன கவிதை அதை எப்படிக் கடக்கிறது என்பதும், கடந்த நிலையில் அதற்கு என்ன பெயரிடுவது என்பதும் முக்கியமான ஒன்று. அதை பின்நவீன அம்சங்களோடு பொருத்தி பேசுவது என்பது ஒரு ஆரம்ப நிலை. இது பின்நவீனத்துவத்தின் கருத்துநிலையை முற்றாக எடுத்துக்கொள்வதல்ல. நவீனத்துவத்தின் தொடர்ச்சியுடன் கடந்து நிற்பது.

நான் தௌவிவான ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பேன். தமிழின் பின்நவீன கவிதை என்று. ஆகவே, பின்நவீனம் என்ற கருத்தாக்கத்தை முற்றாக இங்கு கையேற்காமல், தமிழ் கவிதையின் தொடர்ச்சியை வாசிப்பதினுாடாக, நவீன கவிதையை எப்படிக் கடக்கிறது என்றுதான் முன்வைத்திருப்பேன்.

கேள்வி – பின்நவீனத்துவம் வாழ்வை முழுமையாகச் சரிசெய்ய முடியாது என அறிவித்தது. – அப்படி என்றால் ஈழம் சார்ந்த லட்சியவாத கவிதைகள் எல்லாம்?

றியாஸ் குரானா

அவை குறித்து கட்டுரையில் பேசியிருக்கிறேன். இதற்கு முன்பும், கற்பனை என்பது மேலதிகச் சிந்தனை என்ற கட்டுரையிலும் பேசியிருக்கிறேன். அரசியலை தனித்துறையாகவே கவிதை பார்க்கிறது. அரசியலுக்கு கவிதை கடமைப்பட்டது என்ற எந்த பிடிவாதத்தையும் அது நிராகரித்துவிடும்.

கேள்வி – ஈழ அரசியல் போன்றவற்றுக்கு இடம் இல்லையா?

றியாஸ் குரானா

அரசியல் ரீதியான பார்வைக்கு இங்கு பின்நவீனத்துவம் முக்கிய இடந்தருகிறது. சிறுபான்மைக் கதையாடலாக ஈழத்து அரசியல் நிலவரத்தை அனுகுகிறது. அதற்கான வாய்ப்பு அதற்குள் உண்டு.

கேள்வி – விளிம்பு நிலை மக்களின் எழுத்துகள் , பெண்ணீய பார்வைகள் போன்றவை குறித்து ?

றியாஸ் குரானா

அவை குறித்து பேசியிருக்கிறேன். பின்நவீனம் தமிழைச் சந்தித்ததும் ஏற்பட்ட மாற்றங்கள். அரசியல் ரீதியிலான அதன் பயன்பாடே தமிழில் மேலெழுந்தது. விளிம்பு நிலையில் வைக்கப்பட்டவர்கள், சிறுகதையாடல்கள் என்பன மேல்நிலைக்கு வந்தன. அதன் வரவுதான், தலித் இலக்கியம், பெண் எழுத்துக்கள் என்பது முன்னிலைக்கு வரவேண்டிவந்தது. இது முற்றிலும் அரசியல் சார்ந்த பார்வையினுாடாக இலக்கியம் அனுகப்பட்டதற்கு உதாரணம். ஆனால், நான் சொல்வது, புனைவுசார்ந்த செயல்களால் கவிதை நவீன வெளியிலிருந்து கடந்துவிடுவதைத்தான்.

கேள்வி – மனிதனை மகத்தானவனா மாற்றுவதே கலை என்பதை பின் நவீனத்துவம் மறுக்கிறது என்கிறீர்களா?

றியாஸ் குரானா

மனிதனை எந்த தத்துவங்களும், அறங்களும், கலைகளும் மகத்தானவனவர்களாக மாற்றவில்லை என்கிறது என உடனடியாகச் சொல்லலாம். இப்படிச் சொல்லுவதுதான் அனைவருக்கும் புரியவும்கூடும்.

கேள்வி – அப்படி என்றால் கலைகளின் நோக்கம் அல்லது பணி என்ன?

றியாஸ் குரானா

அனைத்திற்கும் நோக்கமும், பணியும் தேவை என்பது ஒரு மதம் சார்ந்த பார்வை. ஆனால், இந்தக் கேள்வியை தொடர்ச்சியாக கேட்டால் அதற்கு ஏதோவொரு வகையில் பதிலொன்றை உருவாக்கிவிட முடியும். கலை என்பது ஒருவகை மனிதச் செயல். அது நிகழ்த்தப்பட்ட பிறகு அதன் பயன் மற்றும் நோக்கம் குறித்து பல விசயங்களை உருவாக்கிவிட முடியும். ஏலவே நோக்கதையும் பயனையும் விளைவாக வைத்து செயற்பட்டால் அது கலையில்லை என்று மட்டும் தெளிவாக சொல்லலாம்.

நன்றி – பிச்சைக்காரன்

IMG_6028

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %