கிண்ணியா கல்வி வலயம் சில வருடங்களாக கல்வியில் பின்னடைந்த நிலையில் » Sri Lanka Muslim

கிண்ணியா கல்வி வலயம் சில வருடங்களாக கல்வியில் பின்னடைந்த நிலையில்

edu99

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கிண்ணியா கல்வி வலயம் கடந்த சில வருடங்களாக கல்வியில் பின்னடைந்த நிலையில் இருந்து வருகின்றது. இதனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் முன்னெடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

இலங்கையில் 99 கல்வி வலயங்கள் இருக்கின்றன. பரீட்சைத்திணைக்களம் வெளியிடும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் கடந்த 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த. (சா.த) பெறுபேறுகளில் கிண்ணியா 98 வது இடத்திலேயே இருக்கின்றது. முன்னேற்றம் எதுவும் காணப் படவில்லை.

பிரதானமாக கிண்ணியாவின் பின்னடைவே கிழக்கு மாகணத்தை பின்னிலைக்கு தள்ளி வருகின்றது. கிண்ணியாவை முன்னேற்ற நடவடிக்கை எடுக்காதவிடத்து கிழக்கு மாகாணத்தை எவ்விதத்திலும் முன்னேற்ற முடியாது.

நிருவாக ரீதியான பலவீனங்களே கிண்ணியாவின் கல்வி பின்னடைவுக்கு பிரதான காரணம் என பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாக பாடசாலை உள்ளக மேற்பார்வைக் குறைபாடுகள், வலய மட்ட தொடர் கண்காணிப்பும் தொடர் நடவடிக்கையும் இன்மை, பதில் ஏற்பாடின்றி ஆசிரியர்கள் அதிக அளவில் லீவு பெறுகின்றமை, பாடசாலை மட்டத்தில் பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படாமை, மிகவும் பலவீனமான அடைவு மட்டங்களுக்கு காரணமான ஆசிரியர்களுக்கும் வருடாந்த சம்பள ஏற்றங்களை வழங்குகின்றமை போன்ற நிர்வாக ரீதியான பலவீனங்களை பெற்றோர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்த விடயங்களில் கவனம் செலுத்தப் பட்டு பரிகாரம் காணப் படுமிடத்து கிண்ணியாவின் கல்வி பெறுபேறுகளில் முன்னேற்றத்தைக் காண முடியும் என்று பெற்றோர் கருதுகின்றனர். ஏனெனில் ஏனைய சில கல்வி வலயங்களோடு ஒப்பிடுகையில் கிண்ணியாவில் இருக்கின்ற வளங்களுக்கேற்ப பெறுபேறுகள் இல்லை என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எனவே மாகாணக் கல்வித்திணைக்களம் இந்த நிலைமைகள் கவனத்தில் கிண்ணியா விடயத்தில் விசேட கண்காணிப்புகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், நிர்வாகத்தில் பலவீனமாக இருக்கும் அதிபர், அதிகாரிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Web Design by The Design Lanka