ஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்?

0 0
Read Time:37 Minute, 2 Second

நேர்காணல்: மேனகா மூக்காண்டி

படப்பிடிப்பு: வருண வன்னியாரச்சி

(Tamil Mirror)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, பலிப்பூஜையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதனால், அந்தப் பலிபூஜையை நடத்தியவர்கள் தொடர்பில் கண்டறிவதிலும் பார்க்க, பலிபூஜைக்கான தயார்ப்படுத்தல்கள் அல்லது அவ்வாறானதொரு பிரிவினைவாதத்தை விதை எங்கிருந்து விதைக்கப்படுகிறது என்பதைப்பற்றி கண்டறிவது தான் முக்கியமாகும். அவ்வாறான இடத்தை அல்லது அவ்வாறு விதைப்பவர்களைக் கண்டறிந்து அழிப்பதுதான் முக்கியமாகிறதென, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தமிழ்மிரருக்கு அவர் அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே, தேரர் மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கே: ஞானசாரர் தேரர் என்பவர் யார், அவர் எப்படிப்பட்டவர்?

ஞானசார தேரர் என்பவர், இந்நாட்டு சங்க சபையின் மதச் சம்பிரதாயங்களுக்கு அமைய, துறவரம் பூண்ட தேரரொருவரவார். 2004ஆம் ஆண்டு வரையில், ஆசிரியராகப் பணியாற்றியவர். அதேபோன்று, அதிபராகவும் கடமையாற்றியவர். 1998 முதல் இன்று வரையில், ஒரே நோக்கத்துக்காகச் செயலாற்றும் தேரராக இருக்கிறார். அவரைப் பற்றி மிகச் சரலமாகக் கூறுவதாயின், இந்நாட்டில் கஷ்டப்படும், நசுக்கி ஒடுக்கப்படும் அப்பாவி மக்களை, நல்லபடியாகக் கரையேற்றுவதற்காகப் பாடுபடும் தேரராவார். அவருடைய கருணை உள்ளம் எவ்வளவென்பது, பலருக்கும் விளங்காதிருக்கலாம்.

அதேபோன்று, மதப் பிரிவினைவாதம், கடும்போக்குவாத என்பவற்றுடன் போராடிக்கொண்டு இருப்பவர். இது, இன்று நேற்று அல்ல. ஆரம்பத்தில், கிறிஸ்தவ கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகளுடன் முரண்பட்டேன். இவ்வாறான 445 கிறிஸ்தவ கடும்போக்குவாத அமைப்புகள், இலங்கையில் செயற்பட்டன, செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நூற்றுக்கும் அதிகமான, இஸ்லாமியப் பிரிவினைவாத அமைப்புகள், இந்நாட்டில் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த வகையில், யட்டியாந்தோட்டையிலிருந்து கொட்டகலை வரையிலும் வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும், நாட்டுக்கு மத்தியிலுமென அனைத்திடங்களிலும், சிங்கள பௌத்தர்கள் மாத்திரமன்றி, விசேடமாக தமிழ் இந்துக்கள், இந்த மதக் கடும்போக்குவாதிகள், பிரிவினைவாதிகளின் இரையாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு இரையாகியுள்ள, சிங்களம், தமிழ் என்ற பேதமின்றி, அனைவரதும் கலாசார ரீதியிலான பாதுகாப்புக்காக முன்னிலையாகும் ஒருவர்தான், இந்த ஞானசார தேரர். காரணம், இந்தக் கலாசாரப் பன்முகத்தன்மை அழிவதை நாங்கள் விரும்பவில்லை. இங்கு, கிறிஸ்தவ கடும்போக்குவாதிகளும் இஸ்லாமிய பிரிவினைவாதிகளும், ஒரே நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், ஒரேயொரு கலாசாரத்துக்குள், அனைத்தின மக்களையும் ஒன்றுதிரட்டும் முயற்சியிலேயே, இவ்விரு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான பிரிவினரை, கலாசாரப் பன்முகத்தன்மையை அழிக்கும் பிரினராகவே பார்க்கவேண்டி இருக்கிறது. அதனால்தான், அவர்களுக்கு எதிராகச் செயற்படவேண்டி இருக்கிறது.

கே: ஞானசார தேரர் என்பவர், சில வருடங்களுக்கு முன்னர், திடீரென வெளித்தோன்றக் காரணமென்ன?

என்னுடைய பிரவேசத்தை, திடீரெனக் கூற முடியாது. ஒரு செடியை நடுகின்றோம். அதற்குத் தேவையான சத்துக்கள் கிடைத்து வளர்ந்து, சில காலத்துக்குப் பின்னர், பெரும் விருட்சமாகிறது. அதுபோலத்தான் நாங்களும். நாங்கள் நம்பிய தேசிய வேலைத்திட்டங்களின் தலைவர்கள் இருந்தார்கள். அரசியல் தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருடனும் நாம் பணியாற்றி உள்ளோம்.

அனுபவம்தான், ஒரு மனிதனை உயர்ந்த இடத்துக்கு இட்டுச்செல்லும். அந்த அனுபவங்களை முறையாக முகாமைத்துவம் செய்தால், அதனூடாக நாட்டுக்கு நல்லதைச் செய்ய முடியும். அதேபோல, நானும் பல காலங்களாக, அதாவது 1998 முதல், பல அமைப்புகளுடன் இணைந்துப் பணியாற்றியுள்ளேன். “பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம்”, “சிஹல உறுமய”, “தேசிய சங்க சபை”, “தேசிய சங்க சம்மேளனம்”, “ஜாதிக்க ஹெல உறுமய” போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களாக இருந்து, அவற்றுடன் இணைந்துப் பணியாற்றி, மக்களுடன் தொடர்புகளைப் பேணி, இறுதியில் இவர்கள் அனைவரும் அதிகார அரசியலுக்குள் சிக்கிக்கொண்டு கரைந்துகொண்டிருப்பதை உணர்ந்த பின்னர்தான், இனி யாருடனும் என்னுடைய பயணம் தொடராது என்று முடிவெடுத்து, எனக்குப் பொறுந்தும், என்னுடைய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட “பொதுபல சேனா” என்ற அமைப்பை, 2012ஆம் ஆண்டில் உருவாக்கிக்கொண்டேன்.

கே: ஞானசார தேரரின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?

இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும், சிரித்த முகத்துடன் இருப்பதைப் பார்ப்பதும் அனைத்து மக்களும், மூன்றுவேளை உணவுகளையும் உட்கொண்டு, சந்தோஷமாக வாழும் சூழலைப் பார்ப்பதும்,  அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைப்பதைப் பார்ப்பதும், அனைவருக்கும் வீட்டுரிமை கிடைப்பதைப் பார்ப்பதுமே, என்னுடைய ஒரே அபிலாஷையாகும். அது மாத்திரமன்றி, இந்த நாடு, நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகின்றது. ஒருபுறம் வர்க்க ரீதியிலான சட்டங்கள், மறுபுறம் மத ரீதியிலான சட்டங்கள் காணப்படுகின்றன. இந்நாட்டுக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்த, இவ்வளவு காலமும் இந்நாட்டு அரசியல்வாதிகள் தவறியுள்ளனர்.

அந்த வகையில், ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தலைவர், ஒரே ஆணை என்ற இடத்துக்கு அனைத்து மக்களையும் கொண்டுவந்து, மக்களை ஐக்கியப்படுத்துவதே, என்னுடைய முயற்சியும் அதுவே எனது இலக்கும் ஆகும்.

கே: அப்போதிருந்தே, பிரிவினைவாதம், கடும்போக்குவாதம் பற்றிப் பேசினீர்கள். ஆனால், அவை அனைத்தும் எடுபடாமல் போனமைக்குக் காரணமென்ன?

அதுதான், எங்களுடைய நாடு பின்னோக்கிச் செல்லவும் காரணமானது என்றே கூறுவேன். நோயாளியொருவருக்கு சிகிச்சையளிக்க வேண்டிய காலத்தில் உரிய சிகிச்சையை அளிக்காவிட்டால் என்ன நடக்கும்? அந்த நோயின் தன்மை தீவிரமடையும். 1970களில், யாழ்ப்பாணத்தில் அல்பிரட் துரையப்பா படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னரான சில காலங்களில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அன்று, அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து, “ஆயுதம் ஏந்திப் போராடுமளவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டு, அவர்களுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தார்களேயானால், தமிழ்ச் சமூகத்தினர், 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்றிருக்கவேண்டி ஏற்பட்டும் இருக்காது, நாட்டுக்கு அழிவும் ஏற்பட்டிருக்காது. அன்று, இதுபற்றிப் பேசியிருந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. காலந்தாழ்த்தினர்.

எம்மைப்போன்ற நாடுகளிலுள்ள அரசியல்வாதிகள், தங்களுடைய பிழைப்புக்காக, சம்பவங்(பிரச்சினை)களைத் தோற்றுவிக்கிறார்கள். அல்லது, ஏற்பட்ட சம்பவமொன்றை, தங்களுடைய அரசியல் பிழைப்புக்காகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையும் அதுபோன்றதே. இப்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினை, சாதாரணமானது அல்ல. இந்த மத ரீதியிலான மூட நம்பிக்கையை, ஆங்கிலத்தில் Blood Cancer (இரத்தப் புற்றுநோய்) விழிப்பார்கள்.

சஹ்ரானின் குண்டுத் தாக்குதல்களால், தமிழ்ப் பிள்ளைகள் இறந்தார்கள். சிங்களவர்கள் இறந்தார்கள். பிள்ளைகள், வெளிநாட்டவர்கள் என அப்பாவிகள் உயிரிழந்தார்கள். இதன்மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? எல்டிடிஈயினருக்கேனும், ஏதோவோர் அரசியல் நோக்கம் இருந்தது. அதற்காகத் தாக்குதல்களை நடத்தினார்கள். அதிலும், அவர்களுக்கென்றதோர் இலக்கு இருந்தது. அந்த இலக்குகளைக் குறிவைத்தே தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஆனால் இப்போது இடம்பெற்றிருப்பது பலிப்பூஜையாகும். அதனால், அந்தப் பலிபூஜையை நடத்தியவர்கள் தொடர்பில் கண்டறிவதிலும் பார்க்க, அவ்வாறான பலிபூஜைக்கான தயார்ப்படுத்தல்கள் அல்லது அவ்வாறானதொரு பிரிவினைவாதத்தை விதை எங்கிருந்து விதைக்கப்படுகிறது என்பதைப்பற்றி கண்டறிவது தான் முக்கியமாகும். அவ்வாறான இடத்தை அல்லது அவ்வாறு விதைப்பவர்களைக் கண்டறிந்து அழிப்பதுதான் முக்கியமாகிறது.

ஒரு விடயம் நடந்துமுடிந்த பின்னர், அதுபற்றிப் பேசிப் பேசிக் காலத்தைக் கடத்துவது உகந்ததல்ல. அதனால் இப்போது, இந்த விடயத்துக்கு தீர்வு காணும் பொறுப்பு, மதத் தலைவர்களிடம்தான் உள்ளதென்று நான் நம்புகின்றேன். இதற்குச் சிறந்த உதாரணமாக இந்தியாவைக் குறிப்பிடலாம். அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விவகாரத்தை எவ்வாறு கையாண்டார் என்பதுபற்றிப் பார்க்க வேண்டும். அந்நாட்டு மதத் தலைவர்கள் ஒன்றுகூடிய பேசி, இந்தப் பிரச்சினை குறித்து, உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்துள்ளனர். ஒரு குண்டேனும் வெடிக்காத அளவுக்கு, இந்தப் பிரச்சினையைக் கையாண்டிருக்கிறார்கள்.

அதனால், இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை, மதத் தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். காரணம், இது கலாசாரப் பன்முகத்தன்மையோடு தொடர்புபட்ட பிரச்சினையாகும். அதனால், மத ரீதியான கல்விகள், எந்தளவுக்குப் பொருத்தமானவை என்பது குறித்தும் சமூகத்துக்கு எந்தளவுக்குத் தேவையானது என்பது குறித்தும், மதத் தலைவர்கள் தீர்மானிப்பார்கள். தவிர, அரசியல்வாதிகளின் கைகளுக்கு இந்தப் பிரச்சினை செல்லுமாக இருந்தால், இன்னும் 100 – 200 வருடங்களுக்கும் தீர்வு கிட்டாது.

கே: அண்மையில் நடந்த குண்டுத் தாக்குதல்களை, நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உண்மையில் இதை, மிலேச்சத்தனத்தின் உச்ச கட்டமாகவே பார்க்கவேண்டி இருக்கிறது. இப்போதும் இந்த நாட்டுக்குள், சுமார் 20 நாடுகளில் தடை செய்யப்பட்ட நூல்கள், பயன்பாட்டில் இருக்கின்றன. இப்போதும் அவற்றை, கிராண்பாஸ் பகுதியில் கொள்வனவு செய்யலாம். சில புத்தகங்களை, மார்க்கு தேவாலயங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இது, இன்று நேற்று நடந்த பிரச்சினையல்ல. மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒருவகை புற்றுநோயாகும். இதை மிக விரைவில் நிறுத்தாவிடின், வியாபிக்க வாய்ப்புண்டு. அதனால், அதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கே: இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெறுமென எதிர்பார்த்திருந்தீர்களா?

இவ்வளவு சீக்கிரத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், இவ்வாறான தாக்குதல்களுக்கான முயற்சியொன்று பற்றி, 2012 முதலே அறிந்திருந்தோம். காரணம், இவர்களுக்கு வந்த பணம், அந்தப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசியல்வாதிகளின் உதவி நாடப்பட்டிருந்தமை, சமூகங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் உதாரணமாக: ஹலால் கலாசாரத்தைக் கொண்டுவந்தார்கள். புர்கா, நிகாப் என்ற உடைகளைத் திணித்து, மாறுபட்ட கலாசாரத்தை ஏற்படுத்தியமை, வங்கிகளை ஷரிஆ வங்கிகலாக்கியமை, அரபிப் பாடசாலைகள், மத்ரசாக்கள் போன்றவற்றைக் கொண்டுவந்து, இந்நாட்டுச் சமூகத்திலிருந்து அவர்களைப் பிரித்துக்கொண்டார்கள். அதனால்தான், கத்திக் கூச்சலிட்டு, இந்தச் சமூகம் மாறிக்கொண்டு இருக்கிறதென்பதைக் கூறினோம். இதன் உச்சகட்டமாக, ஆயுதங்கள் ஏந்தப்படும் வாய்ப்பிருப்பதாக, 2013 முதலே நான் கூறினேன்.

மஹரகம பிரதேசத்தில் ஒருமுறை பேசும்போது, இவ்வாறான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்காக, பௌத்தர்களுக்காக பொதுபல சேனா அமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், இந்துக்களுக்காக சிவசேனா ஒன்றையும் கத்தோலிக்கர்களுக்காக கத்தோலிக்க சேனாவையும் உருவாக்கி, மக்களைத் தெளிவுபடுத்துமாறு கோரினோம். இந்தப் பிரச்சினை, விரைவில் எங்களை நெருங்கி வருவதை அறிந்தே, இவ்வாறு கூறினோம். இந்தப் பிரச்சினையை, அரசியல்வாதிகள் மேற்கொள்ளவில்லை. அதனால், ஒவ்வொரு பொதுமகனும் பொலிஸ் உத்தியோகஸ்தராகச் செயற்பட வேண்டுமென்று அன்றே வலியுறுத்தினோம்.

கே: இவ்வாறான பிரச்சினையொன்று இருக்கும்போது, உங்களைத் திடீரென விடுதலை செய்யக் காரணமென்ன?

என்னுடைய விடுதலை குறித்து, ஜனாதிபதிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும், பாரியளவிலான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன. அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் தமிழ்த் தரப்பிலிருந்தும் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பௌத்த தேரர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என, பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இருப்பினும், என்னை விடுதலை செய்யவில்லை. ஒரு நாள், என்னைப் பார்க்க, சிறைச்சாலைக்கு ஜனாதிபதி வந்திருந்தார். அப்போது நான், இஸ்லாமியப் பிரிவினைவாதிகள் தொடர்பான அனைத்து விடயங்கள் பற்றியும் கூறினேன். அதற்கான ஆதாரங்களையும் காண்பித்தேன். அதன் பின்னர்தான், இவர் வெளியில் வந்தால், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு, ஓரளவுக்கேனும் தீர்வு கிட்டுமென நினைத்துத்தான், என்னை ஜனாதிபதி விடுவித்திருக்கிறார்.

கே: உங்களுக்கான விடுதலை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை மேலும் அதிகரிப்பதாகவே சிலர் பார்க்கின்றனர். அவர்களுக்கான உங்களுடைய பதில் என்ன?

இப்படிப்பட்டவர்கள், அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். நாங்கள் அமைதியாக இருந்தாலும் குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். நாம் சிலவற்றைப் பற்றிப் பேசினாலும் குற்றஞ்சாட்டுவார்கள். எதுவாயினும், இவர்களுக்காக காலத்தை ஒதுக்க, எமக்கு நேரமில்லை. அவர்கள் குறித்துப் பரிதாபப்படத்தான் முடியும். அவ்வாறானவர்களுக்கான ஒரே பதில், “நாம் இந்த நாட்டை மாற்றுவோம்: இந்த நாடு மாற்றமடையும் விதத்தைப் பார்த்துக்கொண்டு இருங்கள்” என்றுதான் கூறமுடியும்.

கே: அந்த மாற்றம் எவ்வாறானது?

இந்த நாட்டில், திருமணத்துக்கான சட்டம், ஒரே ஒன்றாக இருக்க வேண்டும். வடக்கில், யுத்தத்தால் கணவர்மாரை இழந்த பெண்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் பலரை, இஸ்லாமியப் பிரிவினைவாதிகள், திட்டமிட்டே வன்கொடுமை செய்து பிள்ளைகளைப் பிறக்கவைத்துள்ளார்கள். இது தொடர்பான தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால், இதுவரையில் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும், இதுபற்றிப் பேசவில்லை.

நீர்கொழும்பைச் சேர்ந்த குழுவொன்று, திடீரென வடக்குக்குச் சென்று, அங்கு அப்பாவிகளாகியுள்ள அந்தப் பெண்களை ஏமாற்றி, இந்த வேலையைச் செய்கின்றனர். அதேபோன்று, இலங்கை முழுவதிலும் செயற்பட்டு வரும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், சிங்களப் பெண்களைப் போன்று, தமிழ்ப் பெண்களையும், இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுகின்றனர். மருத்துவக் கல்வியைக் கற்ற சாரா என்ற பெண்ணும், தமிழப் பெண் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறாக, தமிழ், சிங்களப் பெண்கள், இஸ்லாமியர்களாக மாறியதற்கான சத்தியக்கடதாசிகளும், சாட்சிக்காக என்னிடம் இருக்கின்றன.

இவர்கள், ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் இனி நடந்துகொள்வதாகக் கூறியே, சத்தியக்கடதாசியில் கையொப்பம் இடுகின்றனர். அப்படிப்பார்த்தால், எங்களுக்கு அருகில் வந்து குண்டுத் தாக்குதல் நடத்துபவர், முஸ்லிமாக இருக்கத் தேவையில்லை. அதனால், இந்த நிலைமை மிகப் பயங்கரமானது. எனவே, இவ்வாறான பிரிவினைவாதச் செயற்பாடுகளை முறியடிக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அர்ப்பணிப்புடன் செயற்படுவது அத்தியாவசியமாகும். அப்படி இல்லையாயின், எமக்கு ஒரு நாடு இல்லாமல் போய்விடும்.

கே: இதற்காக உங்களிடம் ஏதேனும் வேலைத்திட்டங்கள் உள்ளனவா?

ஆம். அதற்கு முதலில், இந்நாட்டுக்குப் பொதுவான ஒருயொரு சட்டம் காணப்படுதல் வேண்டும். அவர்களுக்காகவென ஹலால் உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டு பின்பற்றப்படுகிறது. அவர்களுக்கான வங்கி முறைமை காணப்படுகின்றது. குறைந்த பட்சத்தில், பிரபாகரன்கூட அவ்வாறான நடைமுறையைப் பின்பற்றவில்லை. அவரால் வெளியில் வந்து கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாத காரணத்தால்தான், அவர்களுக்குள்ளேயே வங்கி நடைமுறையொன்று ஏற்படுத்தப்பட்டது. தவிர, ஓரினத்துக்கான வங்கி நடைமுறையென அவர் பயன்படுத்தவில்லை.

தவிர, 12 – 13 வயதிலேயே, பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்துவைக்கிறார்கள். நாங்கள் அதைச் செய்தால், சிறுவர் துஷ்பிரயோகம் என்று உள்ளே பிடித்துப் போடுவார்கள். தனக்கென்றொரு மனைவி இருக்கும்போது இன்னொரு திருமணத்தைச் செய்துகொள்வதை, பலதாரத் திருமணங்கள் என்கிறார்கள்.

ஒரே நாட்டுக்குள் ஏன் இந்த நிலைமை? சவூதி அரேபிய சட்டத்தின்படி, ஒரு நான்கு திருமணங்களைச் செய்துகொள்ள முடியும். அப்படித்தான் இங்குள்ளவர்களும் செய்ய வேண்டுமென்றால், சவூதிக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளட்டும். ஷரிஆ சட்டங்களைப் பின்பற்ற வேண்டுமாயின், அந்தச் சட்டங்கள் அமுலில் இருக்கும் நாட்டுக்குச் செல்லட்டும். இல்லையாயின், இந்நாட்டுச் சட்டங்களுக்கு மதிப்பளித்து, இங்குள்ள சட்டங்களின் படி நடந்துகொள்ளுங்கள். தவிர, அத்தாவசியப் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்.

எங்களுடைய வீட்டுக்குள்ளே வந்து, எங்களையே தீண்டுகிறார்கள். இந்த நிலைமை, இன்னும் பாரதூரமாகக்கூடும். அதனால், நாட்டுக்கு ஒரேயொரு சட்டம் என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும். கலாசார ரீதியிலான ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய இடமளிக்க முடியாது.

கே: முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகிய விடயத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இந்தப் பிரச்சினை, தற்போது மிகப்பெரிய சிக்கலான இடத்துக்கு வந்துள்ளது. முஸ்லிம் அரசியல்வாதிகள், இப்படி ஓரிடத்துக்குள் குவிவதைப் பார்க்குமிடத்து, இஸ்லாமியப் பிரிவினைவாதிகளால், இவர்கள் விழுங்கப்பட்டுள்ளார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

இஸ்லாமியர்களுக்கென்று, உலமா சபை என்றோர் அமைப்பு இருக்கின்றது. இது, இஸ்லாமிய மத நிபுணர்கள் இணைந்த அமைப்பாகும். இன்னொன்று, சூறா சபை என்றொன்று உள்ளது. இது இஸ்லாமிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு  ஆலோசனை வழங்குவதற்காகவே, இந்த சூறா சபை இருக்கின்றது. அப்படிப் பார்த்தால், இலங்கையில் இஸ்லாமிய அரசாங்கமொன்று இல்லை. அப்படியிருக்கும் போது, இலங்கைக்கு எதற்கு இந்தச் சூறா சபை?

இவ்விரு அமைப்புகளும் இணைந்துதான், அரசியல்வாதிகளை ஓரிடத்தில் குவித்துள்ளன. இந்த நடவடிக்கையினூடாக, இவர்கள் வஹாபிஸத்துக்கு எந்தளவு நெருங்கியிருக்கிறார்கள் என்பது புரிகிறது. இது, நாட்டுக்கு உகந்தது அல்ல. அதனால், தங்களுக்கான குழியைத் தாங்களே தோண்டிக்கொள்ளாமல், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிசமைக்காமல், இந்த நாடு யாருடையது, நாங்கள் எங்கிருந்து வந்தோம், இங்கு எப்படி நாம் வாழவேண்டும், எதிரெதிராக இருந்து, இன்னும் இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கத்தான் போகிறோமா, இழைத்த தவறைத் திருத்திக்கொண்டு, பிரச்சினைகள் பற்றி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்வது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கே: முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவுக்கு, ரத்தன தேரரின் போராட்டம்தான் வழிவகுத்தது எனலாம். நீங்களும், தேரர் மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தீர்கள். ஏன் அப்படிக் குற்றச்சாட்டை முன்வைத்தீர்கள்?

நான், ரத்தன தேரரின் போராட்டத்தை அகௌரவப்படுத்தவில்லை. அவசரப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டாமென்றுதான் வலியுறுத்தினேன். என்ன செய்தாலும், அது பற்றி முதலில் பேசி, முடிவெடுத்துவிட்டுச் செய்வோம் என்றே கூறுகிறேன். மூன்று பேரை இலக்கு வைத்துக்கொண்டு, அவர் திடீரென அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் இருந்தால், இவர்கள் மூவரும் விலகிவிட்டால், பிரச்சினை முடிந்துவிடும் என்றுதான், சாதாரண மக்கள் நினைப்பார்கள். அதனால், தனிப்பட்ட சின்னச் சின்னப் பிரச்சினைகளைக் கொண்டுவந்துச் செயற்பட்டால், தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குழப்பப்படும். அது, எமக்கு நாமே செய்துகொள்ளும் சேதமாகும். தவிர, எனக்கும் அவருக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை.

இந்த நாட்டில், இரண்டு வகையான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, இஸ்லாமிய பிரிவினைவாதிகள் தொடர்பான பிரச்சினை. மற்றொன்று, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுகொள்ள முடியாமல் தள்ளாடும் அரசியல்வாதிகள் பற்றிய பிரச்சினையாகும். அதனால், அரசியல் பிரச்சினையைத் தனியாகவும் மற்றைய பிரச்சினையைத் தனியாகவும்தான் நாம் பார்க்க வேண்டும். அதனால், அரசியல் பிரச்சினையோடு தொடர்புபட்டவர்களை ஏனைய பிரச்சினைக்குள் சிக்கவைத்துவிட்டால், இருக்கின்ற பிரச்சினை இன்னும் அதிகமாகும். அதனால், இந்த விடயங்களை நாம், கவனமாகவும் நிதானமாகவும் கையாள வேண்டும்.

கே: பிரிவினைவாதம், கடும்போக்குவாதம் பற்றிய தகவல்கள், சாட்சியங்கள் உள்ளதாகக் கூறுகிறீர்கள். அவற்றை ஏன் வெளிப்படுத்தாமல் இருக்கிறீர்கள்?

எங்களை விட, எங்களுடைய எதிரி பலம் வாய்ந்தவராகத்தான் எப்போதும் இருப்பார். 2012 முதல் நான் இதைப்பற்றிப் பேசிய போது, ஞானசார தேரர், இல்லாத பூச்சாண்டியை உருவாக்குகிறார் என்றுதான், அனைவரும் கூறினார்கள். முஸ்லிம் சமூகத்தை, பிரிவினைவாதத்துக்குள் தள்ளுவதாகக் கூறினார்கள். ஆனால், அன்று நான் கூறியது சரியென்று நினைக்கிறார்கள்.

உண்மையில், இவை பற்றி, உரிய இடங்களுக்குக் கூறியுள்ளோம். ஆனால், அவ்விடங்களிலிருந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில்தான், கத்திக் கூச்சலிட நேரிட்டது. பாதுகாப்புத் தரப்பினர், அரசியல் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை என்று, சொல்லவேண்டிய எல்லா இடங்களுக்கும் சொன்னோம். கொடுக்கவேண்டிய எல்லா சாட்சியங்களையும் கொடுத்தோம். இருப்பினும், தீர்வு கிட்டவில்லை. பின்னர்தான், மக்களிடம் சென்று கூறினோம்.

எவ்வாறாயினும், எம்மிடம் உள்ள தகவல்கள், தொடர்ந்தும் புதுப்பிக்கப்படுகின்றன. அதனால், இதனை முறையாக முகாமைத்துவம் செய்யும் வழிமுறையொன்று தேவை. அதற்காக, தேசிய நடவடிக்கை மத்திய நிலையமொன்றை உருவாக்க வேண்டுமென்று, அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். அது உருவாக்கப்பட்டால், இப்பிரச்சினை தொடர்பான சகல விடயங்களும், ஓரிடத்தில் குவிந்து, அதைச் சிறந்த முகாமைத்துவத்தினூடாகக் கையாண்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதில், ஓய்வுபெற்ற படை உயரதிகார்கள், வஹாபிஸத்துக்கு எதிரான இஸ்லாமியத் தலைவர்கள், தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில், தமிழ் மக்களே ஆதரவற்றுள்ளார்கள். அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு, இன்று ஒரு சரியான தலைவர் இல்லை. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவங்கள் இல்லாதிருப்பது, தமிழ் மக்களை, மேலும் ஆதரவற்றவர்களாகவே மாற்றிவிடும். அதனால், அவர்களின் பிரச்சினைகள் பற்றியும், இந்த மத்திய நிலையத்தில் பேசப்பட வேண்டும்.

கே: முஸ்லிம்கள், தமிழ்ர்கள் பற்றிய உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன?

இவர்கள் அனைவரும் மக்கள்தான். ஆனால், மனிதத்துவத்தைச் சீரழிப்பவர்களை, மனிதர்களாகக் கருத முடியாது. தங்களுக்கே உரித்தான கலாசாரங்களை மதித்துச் செயற்படுவார்களாயின், மனிதத்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

கே: எல்டிடிஈயினர் பற்றி, நீங்கள் தற்போது அதிகமாகப் பேசுகிறீர்கள். இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

எல்டிடிஈயினர் சரியென்று நான் சொல்லவரவில்லை. அவர்கள், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் கோரியிருந்தாலும், அதற்காக அவர்கள் ஆயுதம் ஏந்தியது தவறு. எவ்வாறாயினும், அவர்கள் இருக்கும்போது, பொதுமக்கள் ஒருவித பாதுகாப்பை உணர்ந்திருந்தார்கள். உதாரணமாக, அவர்கள் இருந்திருந்தால், இன்று வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டிருக்காது. அதுதான் உண்மை. எவ்வாறாயினும், ஒரே சட்டத்துக்குள் இந்த நாட்டைக் கொண்டுவந்தால், இப்போதிருக்கும் பிரச்சினைகளில் பலவற்றைத் தீர்த்துக்கொள்ள முடியும்.

கே: அரசியல் ரீதியில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியுமா, அதற்கான வேலைத்திட்டங்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளனவா?

இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டுமாயின், அதற்கு, பலம்வாய்ந்த அரசியல் தலைமைத்துவமொன்று காணப்பட வேண்டும். எதுவாயினும், அரசியல் தலையீட்டின் ஊடாகத்தான், இறுதியில் தீர்வு காணப்படல் வேண்டும். அதனால், அரசியல் பலம் என்பது மிக முக்கியம். ஆனால், இன்று உள்ள நிலைமை வேறு. அரசியல் என்ற விடயத்தையே, பொதுமக்கள் புறக்கணிக்கின்றனர். அதனால், புதிதாக நாங்கள் சிந்திக்க வேண்டியிருக்கிறது. எவ்வாறாயினும், இப்போதுள்ள நிலைமை, இன்னும் சில மாதங்களுக்குள் நல்ல நிலைமைக்கு மாறுமென எதிர்பார்க்கிறோம். அதற்காக, மாபெரும் அணியாக அனைத்துத் தரப்பினரும் அணிதிரள வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தைகளை நாம் முன்னெடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்த மாதம், அதுபற்றி அறிவிப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %