கல்முனை முஸ்லிம் பகுதிகளில் பொஷன் கொண்டாட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..! » Sri Lanka Muslim

கல்முனை முஸ்லிம் பகுதிகளில் பொஷன் கொண்டாட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

FB_IMG_1560568289066

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் கல்முனை மாநகரில் பொஷன் பண்டிகைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை (14) இரவு
கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸல் காசிம், எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ரஹ்மத் மன்சூர், அப்துல் மனாப், என்.எம்.றிஸ்மீர் ஆகியோருடன் சாய்ந்தமருது வர்த்தக சங்கம், கல்முனை பஸார் மற்றும் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் நேற்று முன்தினம் புதன்கிழமை (12)
இராணுவத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவசரமாகக் கூட்டப்பட்ட விசேட கூட்டத்தின்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களிலும் பொஷன் சோடனைகளை அமைக்குமாறு இராணுவ அதிகாரிகளினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இது விடயத்தில் அதிருப்தியுற்ற முஸ்லிம் சிவில் சமூகத்தினர், நேற்று வியாழக்கிழமை (13) கல்முனை மேயர் ஏ.எம்.றகீப் அவர்களை சந்தித்து இவ்விடயத்தை வாபஸ் பெற வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதன்போது முஸ்லிம் ஊர்களைத் தவிர்த்து எல்லோருக்கும் பொதுவான கல்முனை மாநகர டவுன் பகுதியில் மாத்திரம் மட்டுப்படுத்தி செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

அதேவேளை இப்பிரச்சினையை மேயர் றகீப் அவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பி. ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பேரில் அவர்கள் இவ்விடயம் தொடர்பில் இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, பொசன் பண்டிகையை முஸ்லிம் பிரதேசங்களில் திணித்து, முன்னெடுப்பதிலுள்ள அசாத்தியப்பாடுகள் குறித்து எடுத் துரைத்தனர். இதனைத் தொடர்ந்து இராணுவத் தரப்பின் நிலைப்பாட்டில் தளர்வு வெளிப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய சகவாழ்வுக்காக முஸ்லிம்களின் நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் பொருட்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குள் முஸ்லிம்கள் நூறு வீதம் வாழ்கின்ற சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை போன்ற ஊர்களை முற்றாகத் தவிர்த்து கல்முனை மாநகர பஸார் பகுதியில் மாத்திரம் பொஷன் அலங்காரங்களை மேற்கொள்வதுடன் அன்னதான ஏற்பாட்டையும் செய்வதற்கு இன்றைய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் கல்முனை மாநகர சபையினால் இவ்வேலைகளை முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

@
Mayor’s Media Division

Web Design by The Design Lanka