இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்" - ஹிஸ்புல்லா » Sri Lanka Muslim

இலங்கையில் வடக்கு, கிழக்கு இணையுமானால், ரத்த ஆறு ஓடும்” – ஹிஸ்புல்லா

IMG_20190615_085801

Contributors
author image

BBC

இலங்கையில் தாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற போதிலும், உலகில் முஸ்லிம்களே பெரும்பான்மை என்ற கருத்தை தான் வெளியிட்டமைக்கான காரணம், அச்சத்திலுள்ள முஸ்லிம் மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி அளிக்கும் போதே எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தற்போது பாரிய அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், அவர்களை மீள வழமைக்கு கொண்டு வரும் நோக்கிலேயே தான் இவ்வாறான கருத்தை, பள்ளிவாசலில் வைத்து கூறியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

அத்துடன், 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் தான் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஷாசிமை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், தேர்தல் நோக்கிலேயேதான் அவரை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் கூறினார்.

இலங்கை

இதன்போது, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை நோக்காக கொண்டு தான், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஷாசிமுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதாகவும் அவர் இதன்போது ஏற்றுக்கொண்டார்.

குறிப்பாக அந்த உடன்படிக்கையில் பொதுவான சில நிபந்தனைகளே காணப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.

மேலும், தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஷாசிம், ராணுவத்தின் சிலருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகவும் தெரிவுக்குழு முன்னிலையில், அவர் குறிப்பிட்டார்.

மொய்தீன் என்ற முன்னாள் ராணுவ அதிகாரியொருவருக்கும், சஹரான் குழுவில் அங்கம் வகித்த நியாஷ் என்ற உறுப்பினருக்கும் இடையிலேயே பாரிய தொடர்புகள் காணப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறினார்.

சஹரான் உருவாகி விதம்

இலங்கை

2010 அல்லது 2011ஆம் ஆண்டு முதல் மொஹமத் சஹரான் ஷாசிம், இஸ்லாமிய மத ரீதியில் செயற்பட ஆரம்பித்தார் எனவும், அவர் அங்கம் வகித்த அனைத்து குழுக்கள் மற்றும் சங்கங்களிலிருந்து அவர் அடிக்கடி விலக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு சஹரான் தொடர்ச்சியான அவர் அங்கம் வகித்த அனைத்து குழுக்கள் மற்றும் சங்கங்களிலிருந்து விலக்கப்பட்டதை அடுத்தே, அவர் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பை ஸ்தாபித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

2017ஆம் ஆண்டு வரை அவர் காத்தான்குடி பகுதியிலேயே இருந்து செயற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இணைந்துக் கொண்டிருக்கலாம் எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

தேர்தலில் தோற்கடித்தசஹரான்

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, சஹரானுடன் தான் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையை மீறியமையினால், சஹரான் அந்த தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

சஹரானின் பின்னணியில் இருந்தவர்களை வாக்களிக்க வேண்டாம் என பிரசாரம் செய்ததன் ஊடாகவே தான், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.

இவ்வாறு தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டமைக்கு எதிராக சஹரான் தலைமையிலான குழு, மட்டக்களப்பில் போராட்டங்களை நடத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுஃபிஷம் குழுவினர் தன்னுடன் இருந்தமை மற்றும் உடன்படிக்கை மீறப்பட்டமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே தனக்கு எதிராக சஹரான் செயற்பட்டதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

சஹரான் குறித்து பாதுகாப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதா?

இலங்கை

சஹரான் தொடர்பில் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கவில்லை என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவிக்கின்றார்.

சஹரான் பயங்கரவாதி என்று தான் அறிந்திருக்கும் பட்சத்தில், தானே முதலில் அந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மொஹமட் சஹாரான் உயிரிழந்தமை தொடர்பில் தானே மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறிய அவர், எதிர்வரும் தேர்தலில் தனக்கு எதிராக செயற்பட ஒருவர் இருக்க மாட்டார் எனவும் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரே, மொஹமட் சஹாரான் ஷசிமுடன் இருந்ததாகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டினார்.

இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தெரிவுக்குழுவில் அமர்ந்திருந்ததுடன், அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் போது எந்தவித பதிலையும் வழங்கியிருக்கவில்லை.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் அவர், தனது சொந்த ஊரில் இருக்கவில்லை என ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் வரை தான் அறிந்திருக்கவில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதன் பின்னரே தான் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருந்ததாகவும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

வவுணதீவு போலிஸார் கொலை

போலிஸார் கொலைபடத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA

மட்டக்களப்பு – வவுணதீவு போலீஸார் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு தான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததாக எம.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அந்த பகுதியில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும், அதனாலேயே விசாரணை வேறு விதமாக சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், தான் பிரதி போலீஸ் மாஅதிபருடனும் இந்த விடயம் தொடர்பில் பின்னரும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, காத்தான்குடி பகுதியிலுள்ள எந்தவொரு தரப்பினரும் இந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை பேணி வரவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அரபு மொழி பயன்பாடு

அரபு மொழியை பயன்படுத்த வேண்டாம் என இலங்கை அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

குறிப்பாக இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாதுறையினரை ஊக்குவிக்கும் வகையில் மாத்திரமே தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

துபாய்க்கு சென்று பார்க்கும் போது, அங்கு தமிழர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் மர முந்திரிகை மரத்தை நாட்டியமைக்கான காரணம்

காத்தான்குடி நகர் மத்தியில் வேறொரு மரமொன்றை நடுவதற்கு ஏற்பாடு செய்ததாகவும், தான் தெரிவு செய்த மரம் அங்குள்ள காலநிலைக்கு ஏற்றதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அந்த பகுதியிலுள்ள காலநிலைக்கு ஏற்றவகையிலேயே தான் மர முந்திரிகை மரத்தை தெரிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மரத்தை அப்புறப்படுத்தும் வகையில் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், அதனால் நீதிமன்றத்தின் நீதிபதியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி குறித்து எம்.ஏ.சுமந்திரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இந்த விடயமானது நீதிமன்ற அவமதிப்பு விடயம் என்பதனால், தான் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அது குறித்து தற்போது கருத்து தெரிவிக்கதான் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வடக்கு கிழக்கை இணைத்தால், ரத்த ஆறு ஓடும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் பட்சத்தில், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டங்களை நடத்துவதன் ஊடாக ரத்த ஆறு ஓடும் என்ற கருத்தை தான் வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

செயற்குழு உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு என கூறிய அவர், அவ்வாறு இணைக்கப்படுமாக இருந்தால் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என தான் எதிர்வு கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயும் ஏந்திய, இரத்த ஆறு ஓடும் என்ற வகையிலான கருத்தை, மக்களின் தலைவர்கள் கூறுவது பொருத்தமானது அல்லவென நாடாளுமன்ற தெரிவுக்குழு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிற்கு அறிவுறுத்தினர்.

காத்தான்குடி அரபு மயப்படுத்தலுக்கு காரணம்?

காத்தான்குடி அரபு மயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் விடயத்திற்கு முழுமையான பொறுப்பு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் .ஹிஸ்புல்லா என தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

மர முந்திரிகை மரங்கள் நாட்டப்படுவதன் ஊடாக, அரபு மயப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்தை தான் நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தனது பல்கலைக்கழகத்தில் மர முந்திரிகை நாட்டப்பட்டுள்ளமையானது, தனது தனிப்பட்ட விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு கலாசார ரீதியில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை, ஹிஸ்புல்லா இதன்போது சுட்டிக்காட்டினார்

Web Design by The Design Lanka