சித்தியடைதல் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சித்தி அண்ணன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சிவராசா ஏறாவூர் நான்காம் குறிச்சியில் பிறந்து வளர்ந்தவர். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னைப் பார்க்கவேண்டும் என்று வீட்டுக்கு வந்திருந்தார்.

சித்தியர் எனக்கு குரு போன்றவர். எனது பால்யப் பருவ காலத்தில் நிறைய அரசியல் சொல்லித் தந்திருக்கிறார். எண்பதுகளில் டாக்டர் அஜ்வத் ஏறாவூர் அரசாங்க வைத்தியசாலையில் கடமை செய்த காலத்தில், பழைய சந்தை வீதியில் அமைந்திருக்கும் ஜமால் முதலாளியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இவ்வீட்டில்தான் பெரும்பாலும் இரவு வேளைகளில் நானும், சித்தியண்ணையும், பரிஸ்டர் பஷீரும், மறைந்த கிழக்கு பல்கலைக் கழகத்தில் வேலை செய்த ஜீவாவும் தங்குவது வழக்கம்.டாக்டர் அஜ்வத் கடமை முடித்து வந்தால் இரவு வேளைகளில் நாங்கள் பேசிப் பேசி கலகலத்திருப்போம். சித்தி அண்ணன் பேசத் தொடங்கினால் நாங்கள் மவுனிகளாகி அவரது அரசியல், வரலாறு, மானுடவியல், உலக சினிமா பற்றிய பேச்சுகளை விடிய விடியக் கேட்டுக்கொண்டிருப்போம்.

சில இரவுகளில் வீடியோ கெசட் மூலமாக ரீவியில் தமிழ் சினிமா படங்கள் பார்ப்போம். படம் கொஞ்சமாவது கலையம்சம் கலந்ததாக இருந்தால் மட்டும் சித்தியர் தொடர்ந்து பார்ப்பார், இல்லாது விட்டால் டாக்டரின் வீட்டில் கிடந்த இரட்டைப் பிரம்புக் கதிரையில் தூங்கிவிடுவார். காலையில் எழுந்து படம் இப்படித்தானே முடிந்திருக்கும் என்று அச்சொட்டாகக் கேட்பார். நாம் ஆமென்றதும், அதுதான் நேரத்தை வீண்டிக்காமல் தூங்கிட்டேன் என்பார். அக்காலத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பொங்கி மகிழ்ச்சி அலை அடிக்கிறது.

சித்தி அண்ணன் 50 வருடங்களுக்கு முன்னர்1969 இல் பிறந்த தனது மகளுக்கு “லெனினிஸ மலர்” என்று பெயர் வைத்தவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் அவரது கொள்கைப் பிடிப்பை, வாழ்நாள் முழுவதும் இடர்களை எதிர்கொண்ட “இடதர்” அவர்.

” பண்டார நாயக்கா சிங்களம் மட்டும் சட்டத்தை நாடாளுமன்றில் கொண்டு வந்த அன்று தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் செய்யாமல் நாடாளுமன்றின் உள்ளே சென்று சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் இன்றைய தமிழின வரலாறே வேறுவிதமாக இருந்திருக்கும்.அன்றைய நாள் சமாசமாச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வாயிலில் வைத்து சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட உள்ளே சென்று சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். இந்த உறுப்பினர்களோடு சேர்ந்து சென்று தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்திருந்தால் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்கப்பட்டிருக்கமாட்டார்கள் மாறாக தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள இடதுசாரிகளின் நேரடி ஆதரவு கிடைத்திருக்கும். இடதுசாரிக் கட்சிகளுக்கு நாடு முழுவதிலும் ஆள் பலமும், தொழிற்சங்கங்களின் பலமும் இருந்தது. இவர்கள் களத்தில் இறங்கியிருப்பர்.இவ்வாறு நடந்திருந்தால் அது சிங்கள இடதுசாரிகளுக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கும் உறுதியான உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பியிருக்கும்.சிங்களம் மட்டும் சட்டத்துக்கான எதிர்ப்பு தமிழ் சிங்கள உறுப்பினர் கலந்து நாடாளுமன்றின் உள்ளே காட்டிய எதிர்ப்பாக வரலாற்றில் பதிவாகியிருக்கும். இவ்வாறு நிகழ்ந்திருந்தால் அவ்வருடம் அரங்கேறிய சிங்கள- தமிழ் கலவரமும் நடந்திருக்காது.எனவே, தமிழ்த் தேசிய விடுதலை போராட்ட வரலாறு வேறுவிதமாக அமைந்திருக்கும் என்று சித்தி அண்ணன் என்னை அண்மையில் சந்தித்த போது கூறினார். “

இலங்கை முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்குகிற புதிய அரசியல் சமூக பொருளாதார பாதுகாப்பு நிலைமைகளையும்- முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை துறந்திருக்கிற சந்தர்ப்பத்தையும்- தேரர்கள் உண்ணாவிரதமும், சத்தியாக்கிரகமும் செய்கிற “தலைகீழான” காலத்தையும்- ஞானசார தேரர் கண்டியில் ஆயிரக்கணக்கான தேரர்களை அணிதிரட்டுவேன் என்று அச்சுறுத்தி இருக்கிற சூழலையும் கருத்தில் எடுத்து சித்தியண்ணையின் வரலாற்று அபிப்பிராயத்தை பகிர்ந்துள்ளேன்.

#சண்டையும்
சண்டையும் செலுத்துகிற அதே தாக்கத்தைத்தான் சமூகங்களுக்கிடையில் மவுனமும் மவுனமும் செலுத்துகிறது.# என்பேன்.

சித்தி அண்ணன், காலப்போக்கில் இலங்கை உட்பட தெற்காசிய ‘முஸ்லிம் சமூகங்கள்’ தாம் காவலர்கள் என்று நம்பிய அரசியல்வாதிகளையும், அரசியலையும் கைவிட்டு கம்யூனிசத்தோடு அல்ல கன்பூசியத்தோடும், தாவோயிசத்தோடும் கூட்டமைக்கிற நிலைமை தோன்றலாம்.கன்பூசியம் மற்றும் தாவோயிசம் என்பன பவுத்தமல்ல..இக்கருத்து இப்போது ஏற்கப்படாது போனாலும் இதற்கென்று ஒரு காலம் வரும்.

Web Design by Srilanka Muslims Web Team