அடக்கத்தல தீவிரவாதம் - பஷீர் சேகுதாவூத் - Sri Lanka Muslim

அடக்கத்தல தீவிரவாதம் – பஷீர் சேகுதாவூத்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

தீவிரவாதத்தை அடக்குவோம் என்கிறார்கள் அதிகாரத்தை கையில் வைத்திருப்போர்.இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் பயங்கரவாதத்தை காட்டிக்கொடுக்கும் சமூகம் என்று பெருமை கொள்கிறோம். (இப்படிப் பெருமைகொண்ட சமூகம் உலகில் வேறெங்கும் உண்டா என்று சொல்லுங்கள் நண்பர்களே) இப்பெருமையடிப்பினால் செயற்கையாக “மிகப்பெரிய நாம்”ஆகியதால் நாம் உலகின் “மற்ற எல்லா” பெரும் காட்டிக்கொடுப்புகளையும் சிறியதாக்கி இயற்கையாக வெற்றிபெற்றுவிட்டோமா?

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு முஸ்லிம் கிராமமான கட்டுவன்விலவில் (கட்டுவன்புல்) அமைந்திருக்கும் முஸ்லிம் அடக்கத்தலம் (மையவாடி) இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்துவிட்டேன்.

அங்கே “தொழுகையாளிகளை நல்லடக்கம் செய்யப்படும் இடம் ” என்று ஒரு பகுதியும் “தொழாதவர்கள் அடக்கப்படும் இடம் என்று ஒருபகுதியும் பெயர்ப்பலகைகள் இடப்பட்டு பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது

முஸ்லிம்களின் உலக வாழ்வின் நம்பிக்கையில் மரணத்துக்குப் பின் மனிதர்கள் சென்றடையும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அவை சொர்க்கம்- நரகம் என்றழைக்கப்படுகின்றன. சொர்க்கம் முடிவிலா மகிழ்ச்சி தருவது. நரகம் சிலருக்கு முடிவிலா துன்பம் தருகிற அதே நேரம் சிலரை சிலகாலம் தண்டிக்கும் பின்னர் அவர்கள் சுவர்க்கம் ஏகுவர்.சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையில் இன்பமும் துன்பமுமின்றி “அல்லல்படுவோரும்” உண்டு, அவர்கள் தாமதித்து விடுதலையடைவர்.

மரணித்த முஸ்லிம் மனிதர்களை அவர்கள் வாழ்ந்த பூமியிலேயே புதைக்கும் போது பிரித்து வைக்க எவர் சொன்னார் உங்களுக்கு? பள்ளித் தலைவர்கள் தமது அதிகாரத்தை நிறுவ மையித்துகளா கிடைத்தன முட்டாள்களே? இது ஒருவித தீவிரவாதமன்றி வேறென்ன?

நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் புறத்தே நின்றும் உள்ளது என்று சொல்லித் தந்தீர்கள். அங்கே தொழுதவரா தொழாதவரா என்று சொல்லவில்லை.

நீர் விடாயில் தவித்த நாய்க்கு தனது மேலாடையை கிணற்றுக்குள் விட்டு அதனை நனைத்தெடுத்து நாயின் வாய்க்குள் பிழிந்து தாகம் தீர்த்த பெண்ணுக்கு சுவர்க்கம் பரிசளிக்கப்பட்டதாய் சொன்னீர்கள்.இந்தப் பெண் தொழுதாரா இல்லையா என்று சொல்லவில்லை.

ஒரு மனிதரின் இரகசியத்தை அல்லாஹ் அன்றி வேறு எவரும் அறியார் என்றீர்கள், சொர்க்கத்தையோ நரகத்தையோ வழங்குவது அல்லாஹ் அன்றி வேறெவருமல்ல என்றீர்கள், இப்போது என்ன மையித்துப் பிட்டியில் மசிரு புடுங்குகிறீர்கள்?

300 வருடமாக ஒரு குகையில் ஈமானை காத்து படுத்திருந்த நாய் ஒன்று சுவர்க்கம் புகுந்ததாய் சொன்னீர்களே அந்த நாய் தொழுததால்தான் சுவர்க்கம் போனதா? இல்லை ஆறறிவற்ற மிருகங்கள் கேள்விகளற்று சுவர்க்கம் போகின்றனவா சொல்லுங்கள்.

சொர்க்கத்து கதவுகளின் கள்ளத் திறப்புகளை கையில் வைத்திருக்கும் களவானிகளே! சொர்க்கம் என்பது இடமல்ல என உணர்க; அதுவோர் உணர்வெனப் புரிக; அதுவொரு திறந்த கதவுக் கொள்கையெனக் காண்க.

எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேயனோடைக் கிராமத்தில் 60 களின் நடுப்பகுதியில் தொழாதவர்கள் மவுத்தானால் அவர்களை அடக்குவதற்கென்று அவ்வூர் மையவாடியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அவ்விடத்தில் ஆறு பொது மலசலகூடங்கள் அமைந்திருந்தன. அதனால்தான் தொழாத முஸ்லிம்களுக்கு அவ்விடம் ஒதுக்கப்பட்டது.பின்னர் 80 களில் இவ்விடம் மாடுகள் அறுக்கும் மடுவமானது. இப்போது இவ்விடம் சிறுவர் பூங்காவாக இருக்கிறது. பூமியில் சுவர்க்கத்து பூங்காவைக் காண காங்கேயனோடை சிறுவர் பூங்காவுக்கு வாருங்கள் நண்பர்களே!

தீய தீவிரவாதத்துக்கு காலம் ஒரு பொருட்டல்ல என்பதை உணர்வோம்.

FB_IMG_1560969580372

Web Design by Srilanka Muslims Web Team