ஆடை தொடர்பில் வெளியான வர்த்தமானி; மிக அவசரமாக செயற்படுங்கள் - Sri Lanka Muslim

ஆடை தொடர்பில் வெளியான வர்த்தமானி; மிக அவசரமாக செயற்படுங்கள்

Contributors
author image

Mujeeb Ibrahim

அரச அலுவலர்களுக்கான ஆடை தொடர்பில் வெளியான வர்த்தமானி முஸ்லிம் பெண்களை அவர்கள் விரும்பும் ஆடையினை அணிந்து செல்ல தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் எழுந்த எதிர்வினைகளை தொடர்ந்து வர்த்தமானியில் திருத்தம் செய்யப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்த போதும் இந்த நிமிடம் வரை அது நடைபெறவில்லை!

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த குறித்த அமைச்சுக்கு பொறுப்பான செயலாளர் தனது அமைச்சரின் பூரண சம்மதத்துடனேயே அந்த வர்த்தமானியை வெளியிட்டதாக சொன்னார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான றஊப் ஹகீம் மற்றும் சுமந்திரன் ஆகியோகிரின் குறுக்கு விசாரணைகள் வலுவடைந்த நிலையில் குறித்த வர்த்தமானியில் அமைச்சருடன் கலந்தாடி திருத்தங்களை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்திருந்தார்.

இது வரையில் எந்த திருத்தப்பட்ட வர்த்தமானியும் வெளிவரவில்லை.

இந்த புதிய ஆடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் வட கிழக்கு பகுதிகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களில், பாடசாலைகளில் பெரும்பாலும் ஆடை தொடர்பான நெருக்குவாரங்களை எதிர்கொண்டதாக தெரியவில்லை.

ஆனால் வட கிழக்கிற்கு வெளியே முஸ்லிம் பெண்கள் சாரி அணிந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் பலர் வேலைக்கு செல்லாது விடுமுறையில் வீட்டில் இருக்கின்றார்கள்!

வர்த்தமானி திருத்தப்படும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருக்கின்றார்கள்.

ஆனால் மறுபக்கம் ஒரு பெரிய அபாயம் காத்திருக்கிறது.

இந்த ஆடை விவகாரம் அடிப்படை மனித உரிமை மீறலாகும். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அறிவிப்பு வெளியாகி ஒரு மாத காலத்திற்குள் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினை ( FR Petition) பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

அந்தவகையில் அதற்கான காலக்கெடு எதிர்வரும் 28ம் திகதியோடு நிறைவடைகிறது.

நாமும் வழக்குத்தொடராமல் வர்த்தமானி அறிவித்தலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் எதிர்வரும் 28 ம் திகதிக்கு பின்னர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு நழுவிப்போய்விடும்!

இது தொடர்பில் வழக்குகளை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்ய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஷிராஸ் நூர்டீன், நழீம் போன்ற சிரேஷ்ட சட்டத்தரணிகள் குழு உதவக்காத்திருந்தும் இது வரை அரசதொழிலில் உள்ள முஸ்லிம் பெண்களின் சார்பில் ஒருவர் மாத்திரமே முறைப்பாடு செய்ய முன்வந்திருப்பதாக அறியமுடிகிறது.

இது படு அபாயமான துரதிஷ்ட நிலையாகும்.

குறைந்தது இது தொடர்பில் ஒரே நேரத்தில் ஐந்தாறு வழக்குகளாவது தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவை நீதிமன்றில் வாதத்திற்கு வலிதானதாக இருக்கும்.

ஆகவே தயவு செய்து அரச தொழில் புரியும் குறித்த வர்த்தமானி அறிவித்தலால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள முஸ்லிம் பெண்கள் உடனடியாக முன்வந்து உச்ச நீதிமன்றில் முறைப்பாடுகளை செய்ய குறித்த சட்டத்தரணிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

இது உங்களது அடிப்படை உரிமை.

நீங்கள் விழித்திருக்கும் போதே உங்களது கண்களை திருடிச்செல்ல எல்லா முனைகளிலும் பல சதிகள் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த நிலையில் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக இவ்வாறான சதிகளை சட்டத்தின் அடிப்படையில் எதிர்கொள்வதை தவிர இப்போதைக்கு வேறு வழிகள் இல்லை.

உரியவர்களின் கவனத்திற்காக இந்த பதிவை பகிருங்கள்.

இது தொடர்பாக சட்டத்தரணி சகோதரர் ஷிஹார் ஹஸன் வெளியிட்டிருக்கும் whatsup ஒலி இழையினையும் முடிந்த வரை கிடைத்தவர்கள் பகிர்ந்து விடுங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team