கல்முனையில் நடக்கும் இரு ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் தெற்கின் நிகழ்ச்சி நிரலா? - Sri Lanka Muslim

கல்முனையில் நடக்கும் இரு ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் தெற்கின் நிகழ்ச்சி நிரலா?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Riyas qurana


கல்முனையில் தமிழர்கள் தரப்பிலிருந்து ஒரு ஆர்பாட்டமும், முஸ்லிம் தரப்பிலிருந்து ஒரு ஆர்பாட்டமும் நடைபெறுகிறது.

தமிழ் தரப்பில் சிங்கள பௌத்த பிக்குகளும் ஆர்பாட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார்கள். உண்ணாமல் உடல் நிலை மோசமடைந்து செல்வதாக தமிழ் தரப்பில் செய்திகள் கிடைக்கின்றன.

முஸ்லிம் தரப்பு ஜூம்மாவின் பின்னர் பிரியாணிகளைச் சாப்பிட்டுக்கொண்டு தங்கள் அடையாள ஆர்பாட்டத்தை தொடருகின்றனர்.

தமிழர்கள் வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னாலும், முஸ்லிம்கள் தனியார் பஸ்நிலைய வளாகத்திலும் ஆர்பாட்டத்தை தொடருகின்றனர்.

வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை ஏதாவதொரு பிரச்சினை தொடர்ச்சியாக இருக்க வேண்டும். நாடு பரபரப்பாக நகரவேண்டும் என்று கருதும் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சி நிரலுக்கு தங்களை அறியாமலே இவர்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டோர் பல வருடங்களாக ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வந்த போதிலும், அதற்கு ஆதரவாக பெருமளவான தமிழர்கள் ஆர்பாட்டங்களில் குதிக்கவில்லை. பௌத்த பிக்குகளும் குதிக்க வில்லை.

யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தி இப்படிக் கவர்ச்சிகரமான எந்த ஆர்பாட்டங்களிலும் குதிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதுபோல்தான், ஹபாயா தடை, சந்தேகத்தின் பேரிலான கைதுகள், முஸ்லிம்களின் மீதான வெறுப்பு பரப்புதல், அன்றாட கூலித்தொழிலாளர்களுக்கான தொழிலின்றி ஏற்பட்டிருக்கும் துயரம், இப்படி முஸ்லிம்களுக்கு எதிராக உருவாகி நடைமுறைப்படுத்தப்படும் எந்த அம்சங்களுக்காகவும் முஸ்லிம் தரப்பு ஆர்பாட்டங்களைச் செய்யவில்லை.

ஆக, இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் இரண்டினதும் ஆர்பாட்டங்கள் சமூக நலன் என்பதற்கு அப்பால், சிங்கள கடும்போக்குவாதிகளின் நிகழ்ச்சி நிரலை புரிந்துகொள்ளாமல் இரண்டு சமூகங்களும் தானாக போய் சிக்கிக்கொண்டிருக்கிறது.

பிரச்சினையை கிழக்கிற்கு இடம்மாற்ற வேண்டும் என்ற திட்டமும் இதன் பின்னால் உள்ளது. ஒருவாறாய் அதை நிறைவேற்றிவிட்டார்கள். அதே நேரம், வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஆதரவு பிரதானமான இரண்டு முகாம்களுக்கும் தேவை. எனவே, இந்த பிரச்சினை அதிக நாட்கள் நீடிக்கக் கூடியது. அதை ஊதிப் பெருப்பித்து முஸ்லிம் தமிழ் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதுவரை தொடரும் என நினைக்கிறேன்.

சிங்கள பௌத்த தேசியவாதிகளின் சிறுபான்மை சமூக வெறுப்பு நடவடிக்கைகளினால், சிறுபான்மை சமூகங்கள் ஓரணியில் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் முளைவிட்டிருக்கின்றன. உடனடியாக அதை தடுக்க வேண்டும். அதற்காகவே தமிழ் முஸ்லிம் கலவரங்களை உருவாக்கி அவர்களுக்கிடையிலான ஒருங்கிணைவை தடுக்க வேண்டும் என்ற தேவை சிங்கள பௌத்த தேசியவாத கடும்போக்காளர்களுக்கு உண்டு. அதையே தற்போது நடைமுறைப்படுத்துகிறார்கள்.

இதை இரு சிறுபான்மைச் சமூகமும் உணர வேண்டியது அவசியம்.

FB_IMG_1561074455295

Web Design by Srilanka Muslims Web Team