இரட்டை நிலைப்பாடு வேண்டாம், அது யார் தவறு இழைப்பினும் - Sri Lanka Muslim

இரட்டை நிலைப்பாடு வேண்டாம், அது யார் தவறு இழைப்பினும்

Contributors
author image

Fauzer Mahroof

கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கான முழு அதிகாரமுள்ள பிரதேச செயலகம் வழங்கப்படுவதை முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. அதேபோல் இப்பிரதேச எல்லைக்குள் முஸ்லிம்களின் பெருமளவிலான வர்த்தக நிலையங்கள், சொத்துக்கள் வருவதை விட்டுக் கொடுக்க முடியாது என தமிழர் தரப்பு கோருவதும் நியாயமும் இல்லை.

இருக்கின்ற ஒரே வழி, எல்லைகளை மீளவரைந்து எந்த இன மக்களையும் பெருமளவு பாதிக்காத வகையில் , கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கான முழு அதிகாரமுள்ள பிரதேச செயலகத்தினை ஏற்படுத்துவதாகும். அதே போல் கிழக்கு மாகாணம் பூராகவும் இதே போல் உள்ள பிரச்சினைகளை தீர்க்க நியாயமான வழிகளை கண்டடைதல் அவசியம். அது முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி யாரையும் யாரும் மேலாதிக்கம் செய்யும் அதிகார மனோபாவத்தினை எல்லோரும் இணைந்து மிக வெளிப்படையாக கண்டிக்க முன் வர வேண்டும்.

இப்போது கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கான பிரதேச செயலகத்தினை முன் வைத்து நடாத்தப்பட்ட இன அரசியல், முரண்பாடுகளால் இலாபம் அடைந்திருப்பவர்கள் இப்பிரதேச அரசியல் வாதிகளாகும். இரு பக்க அரசியல் வாதிகளும் ஏட்டிக்கு போட்டியாக இனவாதம் பேசி , உண்ணாவிரதமிருந்து, தம்பக்க மக்களிடம் தம்மை மீட்பர்களாக, போலிக் காவலர்களாக வேசம் காட்டி உள்ளனர். இவர்களுக்கு காலத்திற்கு காலம் இப்படியான முரண்பாடுகள் ஏற்படுதல் வாக்கு விளைச்சலுக்கான அறுவடைக் களமாகும். சாதாரண மக்கள்தான் பாவம்… இது கருணா , வியாழேந்திரன் , ஹரீஸ், ரக்கீப் எல்லோருக்கும் பொருந்தும்.

முஸ்லிம் தரப்பு அரசியல் ரீதியாகவும் அறிவு ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் சிந்திக்க வேண்டிய நேரமிது. இந்த விவகாரம் கல்முனையுடன் மட்டும் சம்பந்தப்பட்ட விடயமல்ல… முழு தமிழ் , முஸ்லிம் இனங்கள் மட்டுமல்ல, சிங்கள இனவாத ஆளும் குழுமமும் இப்போது இதில் தொடர்புபட்டு விட்டது.

கல்முனை முஸ்லிம்கள், கல்முனை வாழ் தமிழ் மக்கள் கோரும் தங்களுக்கான உள்ளூர் நிர்வாக அதிகாரத்தினை மறுக்க எந்த உரிமையும் அற்றவர்கள், அதுமட்டுமல்ல சாய்ந்தமருது முஸ்லிம்கள் தமக்காக கோரும் சாய்ந்தமருது உள்ளூர் நிர்வாக அதிகாரத்தினை வழங்கவும் தடையாக இருப்பது உள்ளூர் அரசியலின் மேலாதிக்க சிந்தனையாகும்.

தமக்கு நிகழும் பாதிப்புகளை சீர் செய்ய குரல் கொடுக்கலாமே தவிர , மற்ற இனம், மற்ற பிரதேச மக்களை எங்கள் மேலாதிக்கத்தின் கீழ்தான் இருக்க வேண்டுமென கோருவதும், அதற்காக ஏட்டிக்குப் போட்டியாக உண்ணாவிரதம் இருப்பதும் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அரசியல் சிக்கலுக்குள் தள்ளிவிடும் என்பதையும், தமிழ் முஸ்லிம்களுக்கிடையிலான முரண்பாட்டை மேலும் மேலும் ஆழப்படுத்தும் என்பதை உணர்தல் அவசியம்.

கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கான முழு அதிகாரமுள்ள பிரதேச செயலகம் , முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், சொத்துக்கள் விடுவிக்கப்பட்டு, மீள் எல்லை நிர்ணயத்துடன் வழங்கப்படல் வேண்டும் என்கிற நிபந்தனையுடனான கோரிக்கைக்கு முஸ்லிம்கள் தமது ஒருமைப்பாட்டை பகிரங்கமாக வழங்க முன்வரல் வேண்டும்.

யார் யாரோ அதிகாரத்தில் இருப்பதற்கும், இழந்த செல்வாக்கை மீள தக்கவைத்து மீண்டும் அதிகாரத்திற்கு வரவும், இனங்களையும், சமூகங்களையும் , மக்களையும் மோத விடவும் … சுயாதீனமான மக்களின் மௌனமும், ஒத்தோடுதலும் துணையாக இருந்து விட முடியாது!

நாம் ஒடுக்குவோரா? ஒடுக்கப்படுவோரா? ஒடுக்குதலுக்குள்ளாகும் மக்களுடன் நிற்போரா என்பதை நமது குரல்களும், நிலைப்பாடுகளும் ,
நமது சிந்தனை வெளிப்பாடுகளும் வெளிக்காட்டும் என்பதை மறந்து விட வேண்டாம்!
எங்கும் எதிலும் இரட்டை நிலைப்பாடு வேண்டாம், அது யார் தவறு இழைப்பினும்……

இக்கருத்துகளில் பகுதியளவாவது உண்மை இருப்பதாக கருதின் , இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்… நியாயமான காரணங்களை முன் வைத்து இது தொடர்பில் உரையாடுவதாக இருந்தால் மேற்கொண்டு பேசுவோம். ! மீண்டும் சொல்கிறேன் … இது கல்முணை என்கிற புவியியல் பிரதேசம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல…

இது தொடர்பில் முஸ்லிம் கல்விச் சமூகம், சுயாதீனமான சமூக செயற்பாட்டாளர்கள் வாய் திறக்க வேண்டும்…

00000

Web Design by Srilanka Muslims Web Team