தென்கிழக்கின் கேந்திரத்தையே அஷ்ரப் கனவு கண்டார். - Sri Lanka Muslim

தென்கிழக்கின் கேந்திரத்தையே அஷ்ரப் கனவு கண்டார்.

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அஷ்ரப்


இலங்கையின் தென்கிழக்கே, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட அழகிய இயற்கையின் மொத்த வளத்தையும் தன்னகத்தே கொண்ட ஊர்.

சேனநாயக்கா நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறுகின்ற நீர் இறுதியாக கடலுடன் சங்கமிக்கின்ற ‘கழியோடை’ என்கின்ற வற்றாத நீரோடையுடன் காணப்படுகின்ற விசாலமான ஆறு இக்கிராமத்தின் வடபகுதி முழுவதும் நிறைந்து காணப்படுவது இக்கிராமத்தின் சிறப்பாகும்.

மறைந்த தலைவர் அஷ்ரப்பின் கனவுகளுக்கு காரணமான மண், அந்த மண்ணிலிருந்துதான் தென்கிழக்கின் கேந்திரத்தையே அவர் கனவு கண்டார். அதன் அடித்தளமாகவே தென்கிழக்கு பல்கலைக்கழகம், தென்கிழக்கு துறைமுகம் மற்றும் பல பொருளாதார கேந்திர நிலையங்களும் அவர் கனவில் உள்ளடங்கினாலும் அவரது மரணத்தோடு அவற்றையும் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது.

பின்னாளில் வந்த அதே கட்சிகளின் தலைமைகளும், மாற்றுக் கட்சிகளும் கூட வெறும் வாக்கு சேகரிப்புக்காக மட்டுமே அந்த மக்களையும், அஷ்ரப்பின் கனவுகளையும் தேர்தல் காலங்களில் நியாபகமூட்டிச் சென்றன. ஆனால் தென்கிழக்கின் அடிநாதமாக திகழவேண்டிய அந்த மண் அன்று போல இன்றும் அதே மாதிரியான கிராமமாகவே தோற்றமளிக்கிறது.

தென்கிழக்கு அலகு தோற்றம் பெற்றிருந்தால், சிலநேரம் பல்வேறு துறைகளில் இந்த மண் மிளிர்ந்திருக்கும், கல்முனை அக்கரைப்பற்று மக்கள்கூட இந்த மண்ணைத் தேடி வந்திருப்பர், ஆனால் அந்த மண்ணை மட்டுமல்ல, அந்த மண்ணில் அஷ்ரப் கட்டிய அவரின் கனவு இல்லம்கூட இன்று இரண்டு தசாப்தங்கள் கழிந்தும் அடுத்த தலைமைகளால் கண்டுகொள்ளப்படாமல் அழிந்து பாழடைந்துபோய்க் கிடக்கின்றது.

இரண்டு தசாப்தங்களாய் இந்த மண் மட்டுமல்ல, அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்கள் மாறி மாறி வந்த எந்த அரசாங்கங்களாலும் கவனிக்கப்படாமல் அப்படியே கிடக்க, தென்னிந்திய சினிமாபோன்று அரசியலும் வியாபாரமாகி நமது மக்களும், இளைஞர்களும் அதனுள் மூழ்கி, கேவலம் அந்த அரசியல்வாதிகளின் நடிப்பினையும் பொய்யையும் தந்திரத்தையும் மறந்து அந்த நடிகர்களுக்கு கூசா தூக்கும், கோசம்போடும் அறிவிலிகளாக மாறியிருக்கிறார்கள்.

நமது உரிமைகளையும் உடமைகளையும் விற்று வாழும் அந்த அரசியல்வாதிகளை தனது கதாநாயகனாக எண்ணி அவர்களுக்காக மற்றவர்களோடு சண்டைசெய்யும் இந்தக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தென்கிழக்கு பல்கலை, தென்கிழக்கு துறைமுகம், ஒலுவில் வெளிச்சவீடு, மீனவர் பிரச்சினை, மண்ணரிப்பு, கல்விப் பிரச்சினை, விவசாய காணிகள் பிரச்சினை, அஷ்ரப் நகர் காணிகள் பிரச்சினை, வீதி அபிவிருத்தி, குடியேற்ற பிரச்சினை, விவசாய நீர்ப்பற்றாக்குறை பிரச்சினை, பாதுகாப்பு பிரச்சினை என அடுக்கிக் கொண்டே செல்லும் அளவுக்கு இங்கு பிரச்சினைகள் இருப்பதை கட்சி கண்ணாடி அணியாத அந்த மக்கள் ஏற்றுக்கொள்வர்.

ஆனால் அந்தப் பிரச்சினைகளை தீர்க்காது, அதையே தங்கள் அரசியல் மூலதனமாகவும், தேர்தல் பிரச்சாரமாகவும் பயன்படுத்தும் அற்ப அரசியல்வாதிகளை நம்பியே நம்மவர்கள் இன்னும் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

சிந்திக்காத வரைக்கும், கட்சிகளின் கூண்டுக்குள் சிக்கியவர்கள் வெளிவராத வரைக்கும் இவைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், இவைகள் கண்டுகொள்ளப்படாது. நாமோ நம் சந்ததியோ இன்னும் இதுபற்றி சிந்திக்கவில்லை, இன்னும் அந்த அற்ப அரசியல்வாதிகளின் அடிமட்டை பின்பற்றாளர்களாக நாம் இருக்கும்வரைக்கும், நாமோ நமது சமூகமோ, நமது பிரதேசமோ அபிவிருத்தியடையப் போவதுமில்லை, அரசியல் ரீதியில் வலுப்பெறப் போவதுமில்லை.

நாம் மடந்தைகளாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணராதவரைக்கும் இருக்கும் கட்சிகளில் ஏதோவொரு கட்சிக்குப் பின்னால் அதனை ஏற்றுக்கொண்டு அலைந்துகொண்டே இருப்போம்.

அஷ்ரப்

Web Design by Srilanka Muslims Web Team