
தனி நபர் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கான வாய்ப்பு! – பஸீர் சேகு தாவூத்-
ஏப்பிரல் 23 இல் ஜனாதிபதி காரியாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் முடிந்து வெளியில் வந்து வண்டிக்காக காத்து நின்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் நீண்ட காலத்தின் பின் பேசக்கிடைத்தது. அப்போது றவூப் ஹக்கீம் ” நீங்கள் சில வருடங்களுக்கு முன்னர் வெளி நாட்டு சக்திகள் நமது நாட்டை மைதானமாகப் பாவித்து விளையாடப்போகின்றன. அவ்விளையாட்டில் முஸ்லிம்கள் பந்தாக அடிபடுவர் என்று என்னிடம் பல தடவைகள் கூறியிருக்கிறீர்கள், அது இப்போது தொடங்கிவிட்டது” என்று என்னைப் பார்த்துக் கூறினார்.
1994 ஆம் ஆண்டு நான் தேர்தலில் தோற்றுவிட்டேன். றவூப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகி குழுக்களின் பிரதித் தவிசாளராகவும் நியமிக்கப்பட்டார். இது நடந்து சில மாதங்கள் கழிந்து அவரை அவரது காணிவல் இல்லத்தில் சந்தித்தேன். அச்சந்திப்பில் இன்னும் சில வருடங்களில் அமெரிக்கா அதன் நேச நாடு ஒன்றின் மூலம் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடும் வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன் என்று சொன்னேன். இல்ல பஷீர், அண்மையில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது வெள்ளை மாளிகையில் பார்த்தேன், இலங்கை விவகாரத்தைக் கையாள்வதற்கென்று அங்கு ஒரு சிறிய மேசை ( Desk) மட்டுமே போடப்பட்டிருந்தது என்று சொன்னார்.தலையசைத்துவிட்டு வந்துவிட்டேன். அப்போது நாமிருவரும் 34 வயது இளைஞர்களாக இருந்தோம்.
2001 இல் நோர்வே மத்தியஸ்தம் வகிக்க வந்த போது ஹக்கீம் கட்சியின் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்தார், நான் அவரால் நியமிக்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன். இவ்வேளை நாமிருவரும் 41 வயது நடுத்தரப் பேர்வளிகளாயிருந்தோம்.இக்கால இராஜதந்திர செயலாக பிரபாகரனுக்கு மு.கா தலைவரின் பெயரில் பகிரங்க மடல் ஒன்றை எழுதினேன். இக்கடிதத்துக்கமைவாக, பிரபாகரன் கட்சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.பேச்சுவார்த்தையின் போது எனக்கு நீங்கள் எழுதிய பகிரங்க மடலுக்கமைவாகவே பேச அழைத்தேன் என்று கூறியே பிரபாகரன் பேச்சைத் துவங்கினார்.
இப்போது எமக்கு 59 வயதாகிவிட்டது.ஆமாம் வயதாகிவிட்டது இப்போது பக்குவமுள்ள கிழவர்கள் நாம்.
கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை சந்திப்பின் போது உங்களுடைய பழைய போன் நம்பர்தானே இப்போதும் என்று கேட்டார், ஆம் என்றேன்.
குருணாகலிலும், மினுவாங்கொடையிலும் முஸ்லிம்கள் பேரினவாதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சேதி கேட்டு மனமுடைந்த நான், இதுதான் எனது தொலைபேசி இலக்கம் விரும்பினால் பேசுங்கள் என்று ஹக்கீமின் தொலை பேசிக்கு ஒரு மெசேஜ் வைத்தேன். அன்று சஹர் முடிந்தவுடன் பேசினார். பல பாதுகாப்பு மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பாக உரையாடினோம்.இறுதியில் பயங்கரவாதிகள் முக்கிய தனி நபர்களை முன்னரும் இலக்கு வைத்தனர். இனியும் இலக்கு வைப்பர், நீங்களும் கவனமாக இருக்கவேண்டும் என்று அவருக்கு சொன்னேன்.
அவர் எனக்கு நன்றி சொன்னார்.
நான் தனி நபர் இலக்குக்கு வாய்ப்புள்ளது என்று றவூப் ஹக்கீமுக்கு கூறி இரண்டு மாதங்கள் கழிந்த பின்னர் பதுகாப்பு அமைச்சகம் இதனைக் கூறியுள்ளது. இராணுவத் தளபதியும் அதனைக் கூறியுள்ளார்.
எனக்கு கற்பித்த படுவான்கரை நேசம்மாக்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் கூறுகிறேன் அம்மாக்களே!
#நான் றவூப் ஹக்கீமுடன் தொலைபேசும் முன்னர் என்றும் எனது மதிப்புக்குரிய டாக்டர் ஹபீஸிற்கு (ஹக்கீமின் மூத்த சகோதரர்) வட்சப் மூலம் தனி நபர் இலக்கு பற்றி 10 ஆம் திகதி மே மாதம் அனுப்பிய சேதியை இங்கு தருகிறேன்:
#அஸ்ஸலாமுஅலைக்கும் டொக்டர்,#
*அண்மைய எதிர்காலத்தில் தனி முக்கியஸ்தர்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களுக்கு வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கிறேன். *
*எனவே, சகோ. றவூப் ஹக்கீமை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்துங்கள்.”
எனக்கு அவர் மீது தனிப்பட்ட விரோதங்கள் எதுவும் கிடையாது. நட்பு என்றுமுள்ளது.*