சம்மந்தன் ஐயாவின் இறுதி உபதேசமும் முஸ்லிம்களும் - Sri Lanka Muslim

சம்மந்தன் ஐயாவின் இறுதி உபதேசமும் முஸ்லிம்களும்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சம்பந்தன் ஐயாவின் உரையின் சாராம்சத்தை வெறும் உணர்ச்சிக்கருத்தாக காணுமாயிருந்தால் இந்த நாடு மீண்டும் ஏமாறப்போகின்றது என்பதே அதன் அர்த்தமாகும்.

சில காலங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஹிஸ்புழ்ழாஹ்வும் இதையொத்த கருத்தை கூறியிருந்தார்,

ஒட்டுமொத்தமாக சிறுபாண்மை சமூகங்கள் இரண்டும் வெவ்வேறுவிதமான உந்துதலுக்கு ஆட்பட்டுள்ளதை அந்தந்த சமூகங்களின் தலைமளின் புரிதல்கள் சாட்சி சொல்கின்றன.

தள்ளாத வயதில் ஏமாற்றங்களை மட்டுமே தீர்வுகளாக கண்ட சம்மந்தன் ஐயாவின் இறுதி உபதேசமாகவே இதை நாம் நோக்க வேண்டும்.

பல்லாயிரம் உயிர்களை பலிகொடுத்து ஒரு சாண் நிலத்தையோ ஒரு வரி அதிகாரத்தையோ சொந்தமாக்க இயலாமலான ஒரு அவலக்குரலின் அவசரச் சமிக்கையாக இந்தசெய்தியை புரியத்தவறினால் அவகாசம் குறைந்துவிடும்.

தமிழ் சமூகம் புகழ் பெற்ற பல தலைவர்களை கண்டுள்ளது.
தந்தை செல்வா தொட்டு சுமந்திரன் வரையில் மிகப்பெரும் ஆளுமைகளை கண்டுள்ளது,
இடையிலொரு பிரபாகரனையும் பிரசவித்தது.

அத்தனை பேரும் ஒன்றைத்தான் கேட்டனர்
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையே கேட்டனர்.

சமஷ்டியில் ஆரம்பித்து தனி நாட்டை தொட்டு மீண்டும் சமஷ்டிக்கு வந்து நிற்கின்றது தமிழர்களின் போராட்டம்.

பிரபாகரனும் சம்பந்தன் ஐயாவும் கோட்டை விட்ட புள்ளி ஒன்றுதான்.
அது முஸ்லிம்களை தமிழ் தேசியமாக ஏற்க மறுத்த கட்டங்களே அவை.

வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டுமுன்னே காரைதீவில் வைத்து முஸ்லீம் பொலீசாரையும் எதிரிகளுடன் சேர்த்து சுட்டுக்கொன்ற கட்டத்திலிருந்தே தமிழ் தேசியம் சிதைந்துவிட்டது.

வடக்கிலிருந்து விரட்டப்பட்டதுடன் முஸ்லிம் தேசியம் கட்டுமானம் பெற்றது.

முஸ்லிம்களின் அனுமதியின்றி கிழக்கை வடக்குடன் இணைக்க முயன்ற ஒவ்வொரு கட்டத்திலும் ‘முஸ்லிம் தேசியம்’ மீள் வடிவம் பெற்றது.

இன்று அது கிழக்கு தேசமாக அடையாளப்படுகின்றது.

சம்பந்தன் ஐயாவுக்கு பின்னர் வரும் எந்தத்தலைமையாலும் முஸ்லிம்களை தமிழ் தேசியத்துக்குள் உள்வாங்க இயலாது.

சுமந்திரன் தலைமைப்பொறுப்பை ஏற்குமுன்னரே இரண்டாம் பிரபாகரன் வந்துவிடலாம்.

அதற்கு ஒரு துரையப்பா போதும்
பின்னர் அது ஆயுதப்படை, ஆகாயப்படை, ஆழ்கடல் படையென வியாபிக்கும்.

இரண்டாம் பிரபாகரன் இலத்திரனியல் யுத்தத்தை கட்டமைப்பார்.
இலங்கை தட்டுத்தடுமாறும்.

முன்னர்போல் முஸ்லீம்கள் ஒதுங்கி நிற்பார்களா அல்லது ஒத்து இயங்குவார்களா என்பதை இப்போதைக்கு எவராலும் எதிர்வு கூற முடியாது.

ஒன்று மட்டும் உண்மை
சிங்கள மேலாதிக்கத்தை ஆதரிக்கமாட்டார்கள்,
தமிழ் மேலாதிக்கத்தையும் விரும்பமாட்டார்கள்.

நட்புக்கரங்களே முஸ்லீமளின் நிலைப்பாட்டை தீர்மாணிக்கும்.

சிங்கள இனவாதத்துக்கும் தமிழ் இனவாதத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை

அபாயாவை போட்டால் அரபிகள் என்கின்றார்கள்.
ஈச்சமரத்தை ஆபத்தாய் கூறுகின்றனர்
அரபு ஆக்கிரமிப்பதாகவும் புலம்புகின்றர்.

தேயிலை நம் நாட்டு செடியா
இல்லை அதுவும் வெளிநாட்டு பயிர்தான்
ஆனால் இந்த மண்ணிலும் முளைத்தது.
ஆதலால் எமக்கு சொந்தமாகியது.

கஜூ வளரும் மண்ணில் ஈச்சையும் வளரட்டும்.
காசை மீதமாக்கும்.
ஒன்றிரண்டு கோடியல்ல
ஓராயிரம் கோடிகள்.

பேதம் வேண்டாம்
அபாயாவும் ஆடைதான்.
விரும்பியோர் அணியட்டும்
முக்காடும் முன்னையோர் அணிந்ததே
அரபிக்கலாசாலைகளும் எம்முடையதே.
அட்டாளச்சேனையிலும் இருந்தது.
பின்னர்தான் பெயர் மாறியது
ஆசிரியர் கலாசாலையாக மாறியது
சோனகத்தெரு யாழ்ப்பாணத்திலும் உண்டு
கண்ணகி அம்மன் கோவில் கல்முனையிலும் உண்டு.
பிரிவு வேண்டாம்
கல்முனையும் தமிழ் அரசின் பெருங்கூறு.

இணைந்து பயணிப்போம்
சுய நிர்ணயம் அண்மிக்கும்
நீங்கள்தான் சொல்லவேண்டும் சம்பந்தன்ஐயா!
‘முஸ்லீம்கள் அன்னியர்கள் அல்ல’

-வஃபா பாறுக்-

Web Design by Srilanka Muslims Web Team