ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்!

Read Time:14 Minute, 17 Second

Purujoththaman thangamayl


தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில் ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “…(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள்; (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால், அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால், அதுவொரு தவறான நிலைப்பாடாகும்…” என்கிற பகுதி, ஊடகங்களில் பல்வேறு தொனியில் அர்த்தப்படுத்தப்பட்டு செய்திகளாக வெளிவந்திருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்று, “தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவது பற்றி சிந்திக்க வேண்டி வரும்.” என்று சம்பந்தன் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளதாக செய்தித் திரிப்பை செய்திருக்கின்றது. இதனையடுத்து, சமூக ஊடகங்களிலும் வாதப்பிரதி வாதங்கள் எழுந்திருக்கின்றன.

ஆயுதப் போராட்டத்தினை மீண்டும் முன்னெடுப்பது தொடர்பிலான எந்தவொரு களத்திலும், (அது உரையாடல் வடிவிலானதாக இருந்தாலும்) நிற்பதற்கு தமிழ் மக்கள் தற்போது தயாராக இல்லை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்திய தரப்பொன்று, அவ்வாறான போராட்ட வடிவம் பற்றிய நம்பிக்கை உரையாடல்கள் எழுவதையே விரும்பாத போது, சம்பந்தன் ஆயுதப் போராட்டம் பற்றி பேசியிருக்கிறார் என்பது கவனம் பெறுவது இயல்பானது.

ஏனெனில், ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலும், அது, கோலொச்சிய காலத்திலும் கூட சம்பந்தன், ஆயுதப் போராட்டம் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர் அல்ல. அவர், குறிப்பிட்டளவு வெறுப்பையே கொண்டிருந்தார். காலம் அவரை, விடுதலைப் புலிகளின் பக்கம் செல்ல வைத்து, கூட்டமைப்பின் தலைவராக்கிய போதிலும், ஆயுதப் போராட்டத்தின் நீட்சியை அவர் என்றைக்கும் விரும்பியிருக்கவில்லை. அதனை அவர் அவ்வப்போது வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்.

முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகள், தமிழ்த் தேசிய அரசியலின் தலைமைப்பீடத்தில் சம்பந்தனே இருக்கிறார். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுவே உண்மை. மக்கள் ஆணையை அவர் பல தடவைகள் பெற்றிருக்கின்றார். ஆயுதப் போராட்டம் நீடிக்கும் காலத்தில் தமிழ் மக்கள் கொண்டிருந்த பேரம் பேசும் சக்திக்கும், அதன் முடிவுக்குப் பின்னரான காலத்து பேரம் பேசும் சக்திக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு. எனினும், ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரும் தென் இலங்கையுடனும், அதன் இணக்க சக்திகளுடனும் பேரம் பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் சம்பந்தனுக்கும், கூட்டமைப்புக்கும் பல தடவைகள் ஏற்பட்டன. இன்றைக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம், தவறவிட்டுவிட்டு, தமிழரசுக் கட்சி மாநாட்டில் இன்றைக்கு சம்பந்தன் சாதாரண தமிழ் மகனோ மகளோ வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஆற்றாமைத் தொனியைப் பிரதிபலித்திருக்கின்றார். அவரின் உரை பூராவும் தென் இலங்கை எவ்வாறெல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது தப்பித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறித்ததாகவே இருக்கின்றது.

நல்லாட்சி மீதும், மைத்திரி- ரணில் மீதும் நம்பிக்கை கொள்ளுமாறு கடந்த ஆண்டின் நடுப்பகுதி வரை மேடைகள் தோறும் சம்பந்தன் பேசி வந்திருக்கின்றார். ஆனால், இன்றைக்கு வடக்கின் இனப்பரப்பலைக் குலைக்கும் வகையில், திட்டமிட்ட குடியேற்றங்களை அரசாங்கம் செய்கின்றது என்பது வரை குற்றஞ்சாட்டிப் பேசியிருக்கிறார். இன்னமும் கூட்டமைப்பின் தயவில்தான், ரணில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மைத்திரியின் ஓக்டோபர் 26 சதிப்புரட்சியைத் தோற்கடித்து, ரணிலின் ஆட்சியை மீண்டுக் கொடுத்ததில் கூட்டமைப்பின் பங்கு மகத்தானது. ஆனால், அப்படிப்பட்ட நிலையிலும், கூட்டமைப்பினால், கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் கூட சரியான தீர்வொன்றைக் காண முடியாத நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான, தொடர் ஏமாற்றங்களின் பின்னணியில் சம்பந்தனால் ஆற்றப்பட்ட உரையில் ஆயுதப் போராட்டம் பற்றிய பகுதிகள், திரிக்கப்பட்டிருக்கின்றன.

(ஊடக அறம் பற்றிய எந்தவித அடிப்படைகளையும் கடந்த காலத்தில் வெளிப்படுத்தியிராத தரப்புக்கள், வெளியிடும் செய்திகள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், இன- மத மோதல்களுக்கான தூபத்தினை அடிக்கடி போடும் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியிலும் புதிதாக முளைத்திருக்கின்றன. அவை, இரை கிடைக்காதா என்கிற எண்ணத்தில் சுற்றி வருகின்றன. அப்படியான நிலையில், சின்னதாகச் சந்தர்ப்பம் கிடைத்தாலும், வதந்திகளையும், போலிச் செய்திகளையும், செய்தித் திரிப்புக்களையும் செய்துவிடுகின்றன.)

தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்துக்கு வழங்கிய அர்ப்பணிப்பு என்பது சொல்லிக் கொள்ள முடியாத அளவுக்கானது. ஆயுதப் போராட்டத்தில் வெற்றித் தருணங்கள், தமிழ் மக்களை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தி வந்திருந்தாலும், அதற்குக் கொடுக்கப்பட்ட விலை அதிகமானது. ஒரு சமூகத்தை கல்வி, பொருளாதார, சமூக ஒழுங்கு என்கிற அடிப்படைக் கட்டமைப்புகள் பலப்படுத்துகின்றன. ஆனால், ஆயுதப் போராட்டம் மூர்க்கம் பெறும்போது, அடிப்படைகள் கட்டமைப்புக்கள் ஆட்டம் காண ஆரம்பிக்கும். அதுவும், முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தரப்பாக, தமிழ் மக்கள் சந்தித்து நிற்கின்ற, பின்னடைவு என்பது பாரியளவானது. அதிலிருந்து மீள்வது தொடர்பிலான சிந்தனைகளை தேங்கிய மனநிலைகளில் இருந்து வெளிவந்து வெளிப்படுத்துவதற்கு தமிழ் மக்கள் முயலும் போது, ஆயுதப் போராட்டம் குறித்த மீள் நம்பிக்கை என்பது அதிர்ச்சியூட்டக் கூடியதுதான். இன்றைக்கு, தமிழ் அரசியல் பரப்பில் எந்தவொரு தலைவரும், அரசியல்வாதியும் ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பேச முடியாது. பேசினாலும் அது கவனிக்கப்படுவதில்லை.

ஏனெனில், தாம் வரிந்து கொண்ட கொள்கைகளுக்காக தலைவர் பிரபாகரனோ, அவர் வழிநடத்திய விடுதலைப் புலிகள் இயக்கமோ வெளிப்படுத்திய அர்ப்பணிப்பினை தமிழ்த் தேசியப் போராட்டக்களத்தில் யாரும் வெளிப்படுத்தியதில்லை. தலைவர் பிரபாகரனும், புலிகள் இயக்கமும் விமர்சனத்துக்கு அப்பாற்றப்பட்ட தரப்புக்கள் அல்ல. ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பு என்பது யாராலும் நெருங்க முடியாத ஒன்றாக இன்றளவும் இருக்கின்றது. அப்படியான நிலையில், ஆயுதப் போராட்டம் பற்றிய உரையாடல்களை இன்றைக்கு யார் ஆரம்பித்தாலும், அது வாய்ப்பேச்சளவிலானதுதான்.

கூட்டமைப்பைப் பொறுத்தளவில் மாவை சேனாதிராஜா அடிக்கடி, “…போராட்டம் வெடிக்கும்/ ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிவரும்…” என்று பேசுவார். அது, அவர் அமிர்தலிங்கம் காலத்து தமிழரசுக் கட்சி/ கூட்டணி மேடைகளில் பேசிய பேச்சுக்களின் மீதி. ஒலிவாங்கிக்கு முன்னால் நின்றால், மாவையினால், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது முடியாத செயல். தற்போது, அவரது உடல்நிலை அதற்கு அவ்வளவாக ஒத்துழைக்காத போதிலும், அவ்வப்போது, போராட்டம் வெடிக்கும் என்பார். அது குறித்து ஊடகங்கள் சிலவேளை முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டாலும், மக்கள் கருத்திலேயே கொள்வதில்லை.

இன்னொரு பக்கம், கடந்த காலத்து ஆயுதப் போராட்டத்தின் அர்ப்பணிப்புக்களை ஒட்டுமொத்தமாக உரிமை கோருவதற்கு தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பல தரப்புக்களும் அவ்வப்போது முயன்று வருகின்றன. கூட்டமைப்பின் சிவஞானம் சிறீதரன் போன்றவர்கள், மாவீரர் தினங்களின் போது, துயிலும் இல்லங்களை கையகப்படுத்திக் கொண்டு தங்களை முன்னிறுத்தும் செயற்திட்டங்களை கடந்த காலங்களில் நிகழ்த்தியும் இருக்கிறார்கள். அதுபோல, முன்னணியின் சில தலைவர்களும் இரண்டாம் கட்டப் பேச்சாளர்களும் அவ்வப்போது, புலிகளின் வாரிசாக தங்களை வலிந்து காட்டிக் கொள்வதும் உண்டு. ஆனால், ஆயுதப் போராட்டம் பற்றிய மீள் நம்பிக்கைகளை அவர்கள் விதைப்பதில்லை. அப்படிச் செய்தால், அதன் எதிர்வினைகள் மோசமாக இருக்கும் என்றும் அவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலையில், ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்கிற செய்தித் திரிப்பு மக்களிடம் கவனம் பெறுவது இயல்பானது.

சம்பந்தனோ அல்லது கூட்டமைப்பின் ஏனைய முக்கியஸ்தர்களோ அரசியல் ரீதியாக தமது இயலாமையை வெளிப்படுத்துவது தொடர்பில் பெரிய பிரச்சினையில்லை. ஆனால், அதனை அவர்கள் வெளிப்படுத்தும் தருணமே பிரச்சினைக்குரியது. ஏனெனில், ஏழு தசாப்த காலத்துக்கும் மேலான அரசியல் அனுபவத்தை தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில், தென் இலங்கை குறித்தோ, சர்வதேச நாடுகள் குறித்தோ எவ்வளவு நம்பிக்கைகளை கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு வரையைறையை வைத்துக் கொள்ள வேண்டும். அதனைவிடுத்து, ஒட்டுமொத்தமாக நம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டு, அவ்வாறான நம்பிக்கையை மக்களும் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல. ஏனெனில், அது, சம்பந்தன், கூட்டமைப்பினரின் தனிப்பட்ட விடயம் அல்ல; ஒரே நாளில் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதற்கு. இது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தொடர் போராட்டம். அதன், உண்மையான தன்மைகள், போலி நம்பிக்கைகளைத் தாண்டிய கடப்பாடுகள் கொண்டவை. சம்பந்தனின், இன்றைய இயலாமைத் தொனி புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், அதனை இரசிக்க முடியாது.

-தமிழ்மிரர் பத்திரிகையில் வெளியான எனது இன்றைய பத்தி

Previous post பொதுபல சேனா தலைமையகத்தில் முஸ்லிம் பெண்
Next post மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி பற்றி ஆராய்வதற்கு அமைச்சரவை துணைக்குழு