ரணிலா? மகிந்தவா? அல்லது மூன்றாம் தரப்பா முஸ்லிம்களின் தெரிவு?

Read Time:10 Minute, 24 Second

ரணிலின் காலத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் மகிந்தவின் காலத்தில் நடந்ததை விட பன் மடங்கு அதிகம் என்பதை இரண்டு ஆட்சிக்காலத்தையும் அறிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.

இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் முஸ்லிம்களுக்குள் கருத்து வேற்றுமை பாரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை.

ரணிலின் அரசாங்கம் எம்மை பாதுகாக்க தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுடன் உடன்படும் முஸ்லீம்கள் மகிந்தவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துவிடக்கூடாது என்பதில் ஏன் பிடிவாதமாய் இருக்கின்றார்கள் என்பதற்காக கூறும் காரணங்களின் பிரதானமானவை

*முஸ்லிம்களின் இருப்புக்கு குந்தகம் விழைவிக்கும் நடவடிக்கைகள் மகிந்தவின் காலத்தில்தான் ஆரம்பித்தன.

*அளுத்கம போன்ற முஸ்லிம்கள் கணிசமாக வாழும் இடங்களில் நடக்கவிருந்த அசம்பாவிதங்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகள் பகிரங்கமாகவே ஊடகங்களிலும் வெளிவந்திருந்தபோதும் தடுப்பதற்கான சகல வாய்ப்பும் பலமும் மகிந்தவுக்கு இருக்கும்போதும் அழிக்கட்டும் என விட்டுவிட்டு பின்னரே கட்டுப்படுத்தினார்.

*போதாக்குறைக்கு அளுத்கம அசம்பாவிதம் பற்றி சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் சிங்கள பெண்ணொருவரை இம்சை செய்தததே இந்த எதிர்ப்புணர்ச்சியின் ஆரம்ப புள்ளியென முஸ்லீம் சமூகத்தின் மீது கேவலமான குற்றத்தை சுமத்தி சிங்கள இனவாதிகளை நிரபராதியாக்கினார்.

*அளுத்கம போன்ற சம்பங்களினதும் இன்றுவரை தொடரும் அனைத்து அசம்பாவிதங்களினதும் சூத்திரதாரியாக இருக்கும் ஞான சாரருக்கு மகிந்தயின் ஆசீர்வாதம் தொடர்ந்து இருக்கின்றது என்று அதிகமான முஸ்லீம்கள் நம்புகின்றனர்,

* ரத்ன தேரர் ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் இருந்தாலும் மகிந்தவின் நிகழ்சி நிரலுக்கே இயங்குகின்றார் என்பதும் ஒரு தேரருக்கு எதிராக ரணிலால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும்முஸ்லீம்கள் நம்புகின்றார்கள்.

இவையெல்லாம் பழையகதை என்று ஒதுக்கினாலும் ஈஸ்தர் ஜாயிறு தாக்குதலுக்கு பின்னர் ஏற்பட்ட முஸ்லீம்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாக அமைச்சுப்பதவிகளை துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் மகிந்தவினால் வெளியிடப்பட்ட அறிக்கை இதுவரை இருந்த எல்லா சந்தேகங்களையும் ஊர்ஜிதப்படுத்திவிட்டதாக முஸ்லிம்கள் உணர்கின்றார்கள்.

எதிர் கட்சி தலைவர் என்பது அதிகாரத்தால் குறைவானாலும் அந்தஸ்தில் பிரமருக்கு நிகரானது.
மட்டுமல்ல, மகிந்தவை பொறுத்தவரை ஜனாதிபதிக்கு நிகரானது.
அத்தகைய அந்தஸ்தில் உள்ள ஒருவர் ‘ஒவ்வொரு முஸ்லிம் வீடுகளும் இராணுவ சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும்’ என்று பகிரங்கமாக கோசிக்கிறார் என்றால் மகிந்தயின் இனவாதத்தொடர்சிக்கு வேறென்ன சாட்சி வேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்கின்றார்கள். அப்படி அவர்கள் கேட்பதில் எந்த தவறும் இல்லை.

LTTE பயங்கரவாத காலத்தில் எந்தவொரு தமிழ் வீடும் இராணுவச்சோதனையிலிருந்து தப்பிக்கவில்லை.
பயங்கரவாதத்தை இல்லாமலாக்க நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே ஆகவேண்டும்.
இதில் மாற்றுக்கருத்தில்லை,
அதிலும் ஈஸ்தருக்கு பின் முஸ்லிம்களின் இருப்பிடங்கள் தவிர்க்க முடியாதவை.

ஆனால் ஒரு சமூகம் அச்சத்துக்கும் பீதிக்கும் மத்தியில் இருக்கும் போது தேசிய பாதுகாப்பு சார்ந்த பரிந்துரையை எதிர் கட்சி தலைவர் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் கூறும் போது அதில பக்குவம் பேணப்படவேண்டும்.
அந்த சமூகத்தின் மீதான வெறுப்புணர்வை மேலும் கூர்மையாக்கும் வகையானதாய் அது அமையக்கூடாது.
மகிந்த மீதான முஸ்லிம்களின் அச்சத்தை ஆமோதிப்பதாகவே முஸ்லிம்கள் இதை கருதுகின்றனர்.
மேலும்,மகிந்த மீண்டும் ஆட்சியிலேறினால் பாரிய கெடுபிடிகளை முஸ்லிம் சமூகம் சந்திக்க நேரும் என்பதற்கு இக்கோசத்தை சாட்சியமாக்குகின்றார்கள்.

மறு புறம்,ரணிலால் குறிப்பாக கிழக்கு முஸ்லீம்களுக்கு நடைபெறச்சாத்தியமான அரசியல் அநீதிகளையும், நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு நிகழச்சாத்தியமான இன்னல்களையும் முஸ்லிம்கள் உணராமலுமில்லை.

என்றாலும், மகிந்தையா ரணிலா என்பதே மட்டுப்படுத்தப்பட்ட நிர்ப்பந்த தேர்வாகும்போது ரணிலையே முஸ்லிம்கள் தேர்ந்து கொள்ள விரும்புகின்றார்கள் என்பதை அறிந்து கொள்வது கடினமல்ல.

குறைந்தபட்சம் முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ரணில் பலமுறை கூறியுள்ளார்.கூறியும் வருகின்றார்.
ரணில் கையாலாகதவர் என்றாலும் இனவாதமில்லாதவர் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
தமிழ் தலைமைகளுக்கு கூடுதல் செவி சாய்ப்பவராக இருப்பதனால் ரணிலின் ஆட்சியில் கிழக்கில் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக சில அநீதிகள் நடக்க வாய்ப்பிருந்தாலும் நாடளாவிய ரீதியில் மகிந்தவுடன் ஒப்பீட்டளவில் ஆபத்து குறைந்தவராகவே ரணிலை முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

ரணிலின் ஆளுமைக்குறைபாடு மர்ஹூம் அஷ்ரஃபின் காலத்திலிருந்தே தொடர்கிறது.

நிரூபணமாகிக்கொண்டிருந்த எத்தனையோ வழக்குகளை இடை நிறுத்தி குற்றவாளிகளை சுதந்திரமாக விட்டு தனது அரசியல் இருப்பையே சவாலுக்குள்ளாக்கும் வகையிலான பாரிய மத்திய வங்கிச்சிக்கலுக்களுக்குள் சிக்கிவிட்டார்,

ரணில் ஆளுமையற்றவரா அல்லது விட்டுக்கொடுப்பவரா என்பதை இன்னுமொரு முறை அதிகாரத்தில் அமருமட்டும் எவராலும் அறுதியாய் கூற முடியாது.

ஆனால் அவர் இனவாதியல்ல என்று முஸ்லீம்கள் நம்புகின்றனர்.
தமிழர்களும் அவ்வாறே நம்புகின்றனர்

மகிந்தவுக்கு நாம் ஆதரவளிக்க நிர்ப்பந்திக்கப்படலாம் என்ற சுமந்திரனின் எச்சரிக்கையை மகிந்தவோ தமிழ் மக்களோ பாரதூரமாய் நோக்கமாட்டார்கள்.

அதுவொரு அரசியல் சிண்டு விழையாட்டு மட்டுமே.

ரணிலின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ மகிந்தவின் அரசை கொண்டுவருவதற்கோ த.தே. கூட்டமைப்பு எந்த விதத்திலும் துணை போகாது.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை இப்போதைய இன்னல்கள் தொடர்ந்தாலும் இதைவிட மோசமாகிவிடக்கூடாது என்ற அச்சமே தேர்தல் தெரிவில் அதி உச்ச ஆதிக்கம் செலுத்தும்.

எல்லாவற்றுக்கும் அப்பால் மகிந்ததான் ஆட்சிபீடமேறி அடாவடித்தனம் காட்ட முயன்றாலும் அதையும் சகித்துக்கொள்ளும் மனோதிடத்துடன் முஸ்லிம் சமூகம் இருப்பதை பரந்து பட்ட உரையாடல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

இந்தியாவுக்கு ஒரு மோடிபோல் இலங்கைக்கு ஒரு மகிந்தை வரலாம்.

ஆனால் நாமே வாக்களித்து அவரை கொண்டுவந்து நமது கையாலே நம் தலைமீது மண்ணள்ளி போடவேண்டுமா என்பது ஒவ்வொரு சாமாண்ய முஸ்லிமின் கேள்வியாக தெரிகிறது.

தேர்தல் நெருங்கும் போது இன்னும் வெவ்வேறு காட்சிகளை காணலாம்
முஸ்லிம்களை என்னால் மட்டுமே பாதுகாக்க முடியும் என மகிந்தவே முன்வந்து கோசிக்கலாம்.
விமலும் வாசுவும் கூறியவை ஒத்திகை மொழிதல்களே
நாடகத்தின் உச்சகட்டம் இனித்தான் அரங்கேறும்

வஃபா பாறுக்-

 

Previous post இஸ்லாமிய கல்வியை கண்காணிக்க புதிய சபை
Next post தேசிய பாடசாலைகளில் கடமை புரியும் ஆசிரியர்களுக்கு தமது பிள்ளைகளை உள்வாங்க சந்தர்ப்பம்