சேவல் முட்டையும் கல்முனை நகரமும்

Read Time:6 Minute, 35 Second

Raazi Mohammedh


20 பெட்டைக் கோழிகளையும் ஒரு சேவலையும் ஒரு பண்ணைக்காரன் வளர்த்து வந்தான்.அந்தச் சேவல் கம்பீரமாய் மிடுக்கோடு இருந்தது.

ஒரு நாள் அப்பண்ணைக்காரன் சேவலை அழைத்து ‘இனி நீ அதிகாலையில் கூவக் கூடாது.அப்படிக் கூவினால் உன்னை அறுத்து கறியாக்கிவிடுவேன்’ என்று மிரட்டினான் அந்தப் பண்ணைக்காரன்.

சேவல் என்ன செய்வது என்று தெரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த பெட்டைக் கோழிகள் சேவலிடம் வந்து ‘சரி உன்னை அவன் கூவ வேண்டாம் என்றுதானே சொல்கிறான் அதில் என்ன இருக்கிறது. கொஞ்ச காலம் கூவாமல் இரிக்கலாமே. அவன் உன்னைக் கொல்லாமல் விடுவான்’ என்று கூறின.

மறுநாள் முதல் சேவல் கூவுவதை நிறுத்திவிட்டது.
மீண்டும் வந்தான் பண்ணைக்காரன். ‘என்னது உனது தலையில் மட்டும் ஒரு கொண்டை இருக்கிறது. இதனை நீ அறுத்து எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் உன்னை நான் கொன்றுவிடுவேன்’ என்றான்.

சேவலுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஏற்கனவே கூவுவதை நிறுத்திவிட்டேன்.கொண்டை எனது அடையாளம்.அதையும் இழந்தால் நான் என்ன செய்வது?

மீண்டும் வந்தன பெட்டைக் கோழிகள்.’சரி இப்போது என்ன ஆகிவிட்டது. கொண்டை மாத்திரம்தானே.இது என்ன பெரிய விடயம்.விட்டுக் கொடுப்பதுதானே’ என்றன.

சேவல் சரி என்று மறுநாள் தனது கொண்டையையும் அறுத்துவிட்டது.

சில நாள்கள் சென்றன.பண்ணையாளன் இத்தோடு நிறுத்திக் கொண்டான்.நான் கூவாமல் விட்டதும், கொண்டையை அறுத்ததும் சரிதான்’ என்று சேவல் நினைத்துக் கொண்டது.

மீண்டும் வந்தான் பண்ணைக்காரன்.”நீ என்ன வித்தியாசமாக நடக்கிறாய்.ஏனைய பெட்டைக் கோழிகளை விட வேறுபட்டிருக்கிறாய்.இனி மேல் நீ ஏனைய பெட்டைக் கோழிகளைப் போல்தான் நடக்க வேண்டும்.வசிக்க வேண்டும்.இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் நாளை உன்னைக் கொன்று விடுவேன்’ என்றான்.

சேவலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.பல விட்டுக் கொடுப்புகள் செய்தாயிற்று.இனி விட்டுக் கொடுத்தால் தான் சேவலே இல்லை என்ற ஒரு நிலை வந்துவிடும்.
மீண்டும் வந்தன பெட்டைக் கோழிகள்.” நீ சேவல் என்பது உனக்குத் தெரிந்தால் மட்டும் போதும்.அதை ஊருக்குக் காட்ட வேண்டுமா. இத்தனையையும் விட்டுக் கொடுத்து விட்டாய்.எங்களைப் போலவே இருப்பதில் என்ன குறை வந்துவிடப் போகிறது’ என்று கேட்டன.

வேறு வழியில்லாமல் சேவல் ஒப்புக் கொண்டுவிட்டது.சில காலங்கள் ஓடின.கூவவும் இல்லை.கொண்டையும் இல்லை.பேட்டுக் கோழிகள் போல சேவல் ஆகிவிட்டது.சேவலின் அனைத்து அடையாளங்களும் அழிந்து விட்டன.சேவல் பேட்டுக் கோழியாகவே ஆகிவிட்டது.

ஒருநாள் வந்தான் பண்ணைக்காரன்.சேவலை அழைத்தான்.

‘அனைத்து பேட்டுக் கோழிகளும் முட்டை இடுகின்றன.உனக்கேன் கொழுப்பு.நாளை முதல் நீ முட்டை இட வேண்டும் இல்லாவிட்டால் உன்னை நாளை கொன்று விடுவேன்’

சேவலுக்கு கண்கள் சுழன்றன.விக்கித்து அப்படியே நின்றது.என் அடையாளம் அத்தனையையும் விட்டுக் கொடுத்துவிட்டேன். இதை நான் எப்படிச் செய்வேன்.
சேவலை பண்ணைக்காரன் நாளை கொன்றுவிடுவான்.விட்டுக் கொடுக்க சேவலிடம் இனி எதுவும் இல்லை.

சேவல் நடந்தவை அனைத்தையும் ஒரு முறை மீட்டிப்பார்த்தது.சுற்றி நிற்கும் பெட்டைக் கோழிகளைப் பார்த்துச் சொன்னது

“ என்னை அவன் கூவ வேண்டாம் என்று சொன்ன முதல் நேரத்திலேயே நான் அவனை எதிர்த்திருந்தால், அன்று என் அடையாளத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாளை இறக்கும் நிலை எனக்கு வந்திருக்காது’

மறுநாள் பண்ணைக்காரன் சேவலைக் கொன்றுவிட்டான்.

கணக்காளர் பதவிக்கு ஆளை நியமிக்கும் போதே நாம் எதிர்த்திருந்தால் இந்த முழு நகரமும் எமது கையில் இருந்திருக்குமே என்று சில காலங்களுக்கு பின்னர் கல்முனை மக்கள் கதறி அழுவதற்கு முன்னர் இக்கணக்காளர் பதவிக்கு இன்றே ஜனநாயக ரீதியான அனைத்து எதிர்ப்பையும் தெரிவியுங்கள்.ஹரீஸ், ரவூப் ஹக்கீம் போன்ற பெட்டைக் கோழிகளின் கதைகளைக் கேட்காதீர்கள்.

கணக்காளர் நியமனம் உங்களை கூவ வேண்டாம் என் கிறது.எதிர்த்து நிற்பீர்கள் என்றால் இத்தோடு கதை முடிந்தது.சற்று விட்டுப் பிடிப்போம் என்று நினைத்தால் முட்டையிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

கல்முனை சகோதரர்களே, நீங்கள் கொக்கரிக்கும் சேவல்களா இல்லை முட்டை இட முனையாது கழுத்தை இழக்கப்போகும் சேவல்களா?

FB_IMG_1563195241116

Previous post NTJ பாருக் பவாஸுக்கு பிணை
Next post 290 இலத்திரனியல் டெட்டனேட்டர்களுடன் 4 பேர் கைது