இரான் - அமெரிக்கா பதற்றம்: பிரிட்டன் கப்பலில் சிக்கியுள்ள 18 இந்திய மாலுமிகளின் நிலை என்ன? » Sri Lanka Muslim

இரான் – அமெரிக்கா பதற்றம்: பிரிட்டன் கப்பலில் சிக்கியுள்ள 18 இந்திய மாலுமிகளின் நிலை என்ன?

IMG_20190722_070149

Contributors
author image

BBC

கடந்த வெள்ளிக்கிழமை, இரானால் பிடிக்கப்பட்டுள்ள, ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் சரக்கு கப்பலில், 18 இந்தியர்கள் பிடிபட்டுள்ளது உறுதியாகியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

23 பேர் கொண்ட குழுவுடன் பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல்விதிகளை மீறியதாகவும், உள்ளூர் மீன்பிடிப்படகு மீது மோதியதாகவும் கூறி, அதனை இரான் பிடித்துவைத்துள்ளது.

இந்நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை விரைவில் விடுவித்து, தாய் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், “இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இரான் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது, கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைவாக மீட்டு தாயகம் அழைத்து வருவதே எங்களின் குறிக்கோள் ” என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று பிடிபட்ட ஸ்டெனா இம்பெரோ கப்பலில், 18 இந்தியர்கள் மற்றும் ரஷ்யா, லாட்வியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இதர நாடுகளை சேர்ந்த ஐந்து பேர் உள்ளனர் என்றும், கப்பலின் கேப்டன் இந்தியர் என்றும் ஹர்முக்சன் பிராந்தியத்தின் துறைமுகம் மற்றும் கடல் விவகாரங்கள் துறையின் இயக்குநர் ஜெனரலான அல்லாஹ்மொர்ஹாட் கூறியுள்ளார் என்று ஐ.ஆர்.என்.ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாக பிடிஐ குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பலின் உரிமையாளரான ஸ்டீனா பல்க் என்கிற ஸ்வீடன் நாட்டு நிறுவனம், கப்பலுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ` ஹமூஸ் சர்வதேச கடல்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த இந்த கப்பலை நோக்கி, சிறிய அளவிலான கடற்படை கப்பலும், ஹெலிகாப்டரும் வந்த பிறகு, கப்பலின் திசை மாறியது. அந்த கப்பல், வடக்கு நோக்கி இரானிற்கு சென்றது` என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநரான எரிக் ஹநேல், கப்பல் குழுவில் 23 பேர் இருந்தனர் என்றும், குழுவினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் பேசியுள்ளார்.

“இந்த சூழலை விரைவாக சரிசெய்ய ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் ஸ்வீடன் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் உள்ளோம். மேலும், குழுவினரின் குடும்பத்தாருடனும் தொடர்ந்து பேசிவருகிறோம் ” என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரான் பதற்றம்: சிக்கியுள்ள 18 இந்திய மாலுமிகளின் நிலை என்ன?

பதற்றமான சூழல்:

ஃப்ராங்க் கார்டனர், பாதுகாப்புத்துறை செய்தியாளர்

ஒமானிய கடல் பகுதியில், பிரிட்டன் கொடியைக்கொண்டு சௌதிக்கு சென்றுகொண்டிருந்த கப்பலை பிடித்த, இந்த சம்பவம் என்பது வளைகுடா பகுதியில் சமீபத்தில் நடந்த சம்பவங்களின் நிலையில் மேலும் தீவிரமான ஒரு நிலைக்கு மாற்றியுள்ளது.

அண்மையில் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாட்டின் டிரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டது மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேலும் ஒரு பிரிட்டன் கொடி ஏந்திய கப்பலை பிடிக்கும் சூழல் ஏற்பட்டது என பல்வேறு சம்பவங்கள் நடந்து முடிந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இரானுக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்ப பிரிட்டன் முயல்கிறது. அதாவது, இத்தகைய நடவடிக்கைகள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள எந்த நாட்டிற்குமே ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை வெளிப்படுத்த முயல்கிறது. ஆனால், இந்த வலுவான செய்தி என்பது, அமெரிக்காவின் தவிர்க்க முடியாத இராணுவ தாக்குதலுக்கு துணை நிற்கும் அளவிற்கு செல்லவில்லை என்பதையும் அது வெளிப்படுத்த முயல்கிறது.

இந்த சூழலில் தொடர்புடைய அனைவருமே ராஜதந்திர முறைமீது நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை என்பதால் இந்த சூழல் சற்று பதற்றமாகவே உள்ளது. இரான்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் அளிக்கக்கூடிய சில முக்கிய நபர்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

அதேபோல, இரானிலும் சில முக்கிய நபர்கள், குறிப்பாக இரான் ராணுவத்தின் ஒரு பகுதியான ரெவல்யூஷினரி கார்ட்ஸ் கார்ப்ஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பிற பாதுகாப்புக் குழுக்களும், இந்த பிரச்னையை ஒரு பதற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு தயாராக உள்ளனர்.

Web Design by The Design Lanka