அசாம் குடியுரிமை பிரச்சனை: 40 லட்சம் பேர் நாடு கடத்தப்படுவார்களா? » Sri Lanka Muslim

அசாம் குடியுரிமை பிரச்சனை: 40 லட்சம் பேர் நாடு கடத்தப்படுவார்களா?

IMG_20190831_095920

Contributors
author image

BBC

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அசாம் மாநிலத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமையை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதால் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான “உறுதிபடுத்தப்பட்ட குடிமக்கள்” என்ற வரைவுப் பட்டியலில் அவர்களுடைய பெயர்கள் விடுபட்டிருந்தன. அருகில் உள்ள வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதன் இறுதிப் பட்டியல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால், அந்தக் காலக்கெடுவை அவர்கள் அச்சத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய இந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது, அடுத்து என்ன நடக்கலாம் என்பது பற்றி இங்கு காண்போம்.

இந்தப் பட்டியல் எப்படி உருவானது?

முன்பு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த, இப்போதைய வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் நடந்து வருகிறது என்ற அச்சம் அசாமில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

மாநிலத்தின் முதலாவது குடியுரிமைப் பட்டியல் – முன்பு தேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது என்.ஆர்.சி. என கூறப்பட்டது – 1951 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.இந்தியப் பிரிவினை நடந்து நான்கு ஆண்டுகளில் இது வெளியிடப்பட்டது. அப்போது கிழக்கு வங்காளத்தில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். பிறகு அது பாகிஸ்தானின் ஒரு பகுதியாகிவிட்டது.

இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலம் என்ற நிலைமை மாறி, இஸ்லாமிய சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துவிடும் என்று அசாமில் உள்ள தேசியவாத குழுக்கள் கோரியதன்படி அந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பிரச்சனை 1970களில் மீண்டும் உருவெடுத்தது – கடுமையான போருக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்து 1971 மார்ச் 26 ஆம் தேதி வங்கதேசம் சுதந்திர நாடாக அறிவித்த பிறகு, லட்சக்கணக்கானவர்கள் அருகில் உள்ள இந்தியாவுக்கு மீண்டும் வந்தனர். ஏராளமான அகதிகள் அசாமிலேயே தங்கிவிட்டனர்.

1979 வாக்கில் அனைத்து அசாம் மாணவர்கள் யூனியன் என்ற அமைப்பு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என சந்தேகிக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்டவர்களை சில கும்பல்களைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ததை அடுத்து 1983ல் இந்தப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறியது. அப்போது கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.

அசாம் மாணவர் அமைப்பும், வேறு சில பிராந்திய குழுக்களும் 1985ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1971 மார்ச் 24 ஆம் தேதியன்று அசாமில் வாழ்ந்ததாக நிரூபிக்க முடியாதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும், அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த ஒப்பந்தம் ஒருபோதும் அமல் செய்யப்படவில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் புதுப்பிக்கப்படுகிறது?

தேசிய குடியுரிமைப் பதிவேட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று கோரி 2009 ஆம் ஆண்டில் ஆபிஜீத் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2016 ஜனவரி 31க்குள் இதைச் செய்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2014ல் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இருந்தபோதிலும், இது பெரிய பணி என்பதால், 3.20 கோடிக்கும் மேலானவர்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டி இருப்பதால் – முதலாவது வரைவுப் பதிவேடு 2017 டிசம்பரில் தான் வெளியிடப்பட்டது.

இரண்டாவது வரைவுப் பட்டியல் 2018 ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இரண்டாவது வரைவுப் பட்டியல் 2018 ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் யார் இடம் பெற்றுள்ளனர்?

1971 மார்ச் 24 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்துவிட்டதாக நிரூபித்தவர்களின் பெயர்கள் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளன.

நிலம் மற்றும் குத்தகை ஆவணங்கள், வாக்காளர் அடையாள அட்டைகள் அல்லது பாஸ்போர்ட்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, குடிமக்கள் அந்தஸ்துக்கு அவர்கள் உரிமை கோர வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

1971க்குப் பிறகு பிறந்தவர்கள், தங்களுடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி ஆகியோர் மேற்படி தேதிக்கு முன்னதாகவே இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 3.29 கோடி மக்கள் தொகையில் 2.89 கோடி பேர் `குடிமக்கள் என நிரூபிக்கப்பட்டவர்கள்’ என்று வரைவுப் பட்டியல் உறுதி செய்தது.

சுமார் 40 லட்சம் பேர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

இப்போது அவர்கள் சட்டபூர்வ குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள் என்பதால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களுடைய பெயர்கள் நீக்கப்படும்.

தங்கள் குடிமக்கள் உரிமைக்கு கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளக் கோரி 36.2 லட்சம் பேர் மீண்டும் ஆவணங்கள் சமர்ப்பித்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெற்றிருந்தவர்களில் 1,00,000 அசாம் வாழ் மக்களின் பெயர்கள் இப்போது அதில் இருந்து நீக்கப் பட்டிருப்பதாக கடந்த ஜூன் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, தங்களுடைய குடிமக்கள் உரிமைக்கான ஆதாரங்களை மறுபடியும் அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேசியப் பதிவேடு தயாரிக்கும் அதிகாரிகள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்குக் குறுகிய கால நோட்டீஸ் தருதல், சரி பார்த்தலுக்கு நீண்ட தொலைவில் உள்ள அலுவலகங்களுக்கு வருமாறு கூறுவது போன்ற நடவடிக்கைகளால் அலைக்கழிப்பு செய்வதாகப் புகார்கள் கூறப்படுகின்றன.

தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேற்பார்வையில் பட்டியலைப் புதுப்பிக்கும் பணி நிறைவு பெறவுள்ளது.

எதிர்வினைகள் எப்படி உள்ளன?

இரண்டும் கலந்ததாகவே எதிர்வினைகள் உள்ளன.

இது துணிச்சலான நடவடிக்கை என்று நாடு முழுக்க உள்ள பல இந்துக்கள் பாராட்டுகின்றனர். இதைச் செய்ய மற்ற மாநில அரசுகளுக்கு “தைரியம் இல்லாத” நிலையில், இதை அமல் படுத்துவதாக ஆளும் இந்து தேசியவாத பாஜகவை அவர்கள் புகழ்கின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. குடும்பங்களைப் பிரித்து, ஒரே ராத்திரியில் பல லட்சம் பேரை நாடற்றவர்களாக ஆக்கும் முயற்சி என்று பிரதமர் நரேந்திர மோதி மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

மக்கள் மத்தியில் “பெருமளவு பாதுகாப்பின்மை” சூழலை உருவாக்கியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அருகில் உள்ள மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது “ரத்தக் களரியை” ஏற்படுத்திவிடும் என்று கூறும் அவர், இது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது “இஸ்லாமியர்களை குறி வைத்த” நடவடிக்கை அல்ல என்று அங்குள்ள இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். “நீக்கப்பட்ட மக்கள் வெவ்வேறு மதங்கள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்” என்று தேசிய குடியுரிமைப் பதிவேடு துறை தலைவர் பிரதீக் ஹஜேலா பிபிசி உருது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மாநில மக்களைப் பொருத்தவரை அசாமில் உள்ள பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேசிய குடியுரிமைப் பதிவேடு புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் வெவ்வேறு இனம், மொழி மற்றும் மலைவாழ் சமுதாயத்தினர் உள்ளனர்.

மாறுபட்டவர்களைக் கொண்ட இந்த மக்கள் தொகையை பிணைக்கும் அம்சமாக அசாமிய மொழி உள்ள நிலையில், பொதுவான மத அடையாளம் எதுவும் இல்லை. மாநிலத்தவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களாக உள்ளனர்.

மாநிலத்தைச் சேர்ந்த இந்துக்கள் இதற்கு அமோக வரவேற்பு தெரிவிப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் அச்சம் காணப்படுகிறது. தங்கள் மதத்தைக் காரணம் காட்டி, வங்கதேசத்தில் இருந்து வந்த வெளிநாட்டினர் என்று முத்திரை குத்திவிடக் கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

குடியேறியுள்ள முஸ்லிம்களைவிட இந்துக்கள் மீதான அபிமானத்தை வெளிக்காட்டும் வகையில் இந்து தேசியவாத அரசின் தலைவர் ஒருவர் பேசியிருப்பதால் இந்த அச்சம் அதிகரித்துள்ளது.

நடைமுறை எப்படிப் பட்டதாக இருந்தது?

தேசிய குடியுரிமைப் பதிவேடு ஏற்கெனவே ஆச்சரியமான தகவல்களை வெளியிட்டுள்ளது – முன்னாள் ராணுவ வீரர்கள், இப்போதைய அரசியல் தலைவர்கள், இந்தப் பதிவேடு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிலர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் – பலரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆவணங்களில் சிறிய எழுத்துப் பிழைகள் இருந்தாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உடன் பிறந்தவர்களில் சிலருடைய பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

அசாமில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவது உண்டு. அதனால் தங்களுடைய உடமைகள் வெள்ளத்தில் போன போது ஆவணங்களையும் அவர்கள் இழந்துவிடுகின்றனர்.

இந்த நடைமுறையே ஒட்டுமொத்தமாக குறைபாடுகள் நிறைந்ததாக உள்ளது. ஆவணங்களை பராமரித்து வைக்காதது, கல்வி அறிவு இல்லாதது அல்லது சட்டபூர்வ உரிமை கோருவதற்கு பண வசதி இல்லாதது போன்ற காரணங்களால் சில குடும்பத்தினரால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.

இந்த அழுத்தங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டனர் என்று உறவினர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

அசாமில் இதுபோல தற்கொலை செய்து கொண்ட 51 பேரின் பட்டியலை நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் நிர்வாகி ஜாம்செர் அலி முன்வைக்கிறார். குடிமக்கள் என்ற அந்தஸ்து பறிபோய்விடுமோ என்ற “உளைச்சல் மற்றும் அழுத்தம் தான்” இதற்குக் காரணம் என்கிறார் அவர். பெரும்பாலான தற்கொலைகள் புதுப்பிக்கப்பட்ட முதலாவது வரைவு வெளியிடப்பட்ட 2018 ஜனவரிக்குப் பிறகு நடந்துள்ளன.

பெருமளவில் நாடு கடத்தப் படுவார்களா?

தெளிவாகத் தெரியவில்லை – ஆனால் இந்தத் தருணத்தில் அப்படி இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படுபவர்கள், தானாகவே குடியுரிமை அந்தஸ்தை இழந்துவிட மாட்டார்கள். ஆனால் அதற்கு எதிராக முறையீடு செய்ய 120 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.

சட்டவிரோதமாகக் குடியேறிய இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனால், “இதுபோன்ற கோரிக்கையை நிச்சயமாக வங்கதேசம் ஏற்றுக் கொள்ளாது” என்று பிபிசியின் செளதிக் பிஸ்வாஸ் கூறுகிறார்.

அதற்குப் பதிலாக மியான்மரில் ரோஹிஞ்சா மக்கள் உள்ளதைப் போல – `நாடற்ற மக்கள் என்ற புதிய பிரிவை ‘- இந்தியா உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்கிறார் அவர்.

தேசிய குடியுரிமைப் பதிவேடு அல்லது எல்லைத் தாண்டி சட்டவிரோதமாகக் குடியேறுதல் குறித்து வங்கதேசத்துடன் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.

தேசிய குடியுரிமைப் பதிவேடு என்பது “உள்நாட்டு விவகாரமே தவிர இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பிரச்சினை அல்ல” என்று எப்போதும் வங்கதேசம் கூறி வருகிறது என்று பிராந்திய பாதுகாப்பு நிபுணர் சேஷாத்ரி சாரி கூறியுள்ளார்.

“இந்தியா நாடு கடத்த விரும்பும் சட்டவிரோத குடியேற்றவாசி ஒருவரைக் கூட ஏற்க மாட்டோம் என்ற வங்கதேசத்தின் உறுதியை இது காட்டுகிறது” என்கிறார் அவர்.

வன்முறை குறித்த அச்சம்

பட்டியலில் இடம் பெறாதவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுடைய மத அடையாளங்கள் பற்றி அரசு எந்தத் தகவலும் வெளியிடாத நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் பெங்காலி மொழிப் பேசும் இஸ்லாமியர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

உடனடியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமையைக் கையாள்வதற்கு இந்திய அரசு ஆயத்தமாக இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

வெளிநாட்டினர் என கூறப்படுபவர்களின் முறையீடுகளை விசாரிக்க நூற்றுக்கணக்கான டிரிபியூனல்களை அரசு அமைத்து வருகிறது, தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப் படுகின்றன, வெளிநாட்டினர் என அடையாளம் காணப்படுபவர்களின் தகவல்களை சேகரிக்க மத்திய தகவல் தொகுப்பு உருவாக்கப்படுகிறது.

இருந்தபோதிலும், அசாமை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், கருத்தாளருமான ராஜீவ் பட்டாச்சார்யா நியூஸ் 18.காம் இணையதளத்தில், என்.ஆர்.சி. வெளியிடப்பட்ட பிறகு “நீண்ட கால நோக்கிலான நடவடிக்கைகள்” அசாமில் தேவைப்படும் என்று கூறியுள்ளார். வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்படும் மக்களை வங்கதேசத்துக்கு நாடு கடத்துவதற்கான வாய்ப்பு “மிகவும் குறைவாகவே” உள்ளது என்பதால் அவர்களைக் கையாள்வதற்கு அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இறுதிப் பட்டியல் வெளியான பிறகு என்ன நடக்கும்?

“அனைத்து மேல் முறையீடுகளையும் ஆய்வு செய்த பிறகு தொகுக்கப்படும் இந்தப் பட்டியல் வன்முறையை உருவாக்கலாம்” என்று அசாமில் என்.ஆர்.சி. குறித்து செய்தி அளிக்கும் பிபிசியின் செய்தியாளர் நிதின் ஸ்ரீவத்ஸவா கூறுகிறார்.

“தங்களுடைய நிலம், வாக்குரிமை மற்றும் சுதந்திரத்தை இழப்பது பற்றி அவர்கள் கவலைப்படும் போது அது நடக்கலாம்”‘ என்கிறார் அவர்.

Web Design by The Design Lanka