காஷ்மீர் பிரச்சனை: ’பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகளோடு தயார்’ - » Sri Lanka Muslim

காஷ்மீர் பிரச்சனை: ’பேச்சுவார்த்தைக்கு சில நிபந்தனைகளோடு தயார்’ –

IMG_20190901_195129

Contributors
author image

BBC

காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு சில நிபந்தனையோடு கூடிய அழைப்பை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி விடுத்துள்ளார்.

மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் வரவேற்கப்படுவதோடு, இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிபிசி உருது மொழி பிரிவுக்கு அவர் வழங்கிய பேட்டியில், பேச்சுவார்த்தையில் இருந்து பாகிஸ்தான் ஒருபோதும் விலகியது கிடையாது. ஆனால், இந்தியாவில் நிலவும் தற்போதைய சூழல் பேச்சுவார்த்தைக்கு உகந்ததாக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை அகற்றி, அடிப்படை உரிமைகளை மீண்டும் வழங்கி, கைது செய்யப்பட்டிருக்கும் காஷ்மீர் தலைவர்கள் விடுவிக்கப்பட்டு, தான் சந்திக்க அனுமதி வழங்கப்படுமானால் பேச்சுவார்த்தையை நிச்சயமாக தொடங்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

“இந்த பிரச்சனையில் மூன்று தரப்புகள் உள்ளன. இந்தியா இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டால், காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களை சந்தித்து, கலந்துரையாட என்னை அனுமதிக்க வேண்டும். காஷ்மீரிகளின் உணர்வுகளை புறக்கணித்துவிட்டு, கண்டுகொள்ளாமல் நான் பேச்சுவார்த்தையில் அமர முடியாது” என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் மண்ணில் இருந்து தோன்றுகின்ற தீவிரவாத தாக்குதல்களை, அந்நாடு நிறுத்துமானால், பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக இருப்பதாக இந்தியா முன்னதாக கூறியிருந்தது. ஆனால் இந்தியாவின் இந்த கூற்றை பாகிஸ்தான் மறுக்கிறது. மேலும், பயங்கவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவிக்கிறது.

போர் தீர்வல்ல

இந்த பிரச்சனைக்கு போரை ஒரு தெரிவாக பாகிஸ்தான் கொள்ளவில்லை என்பதை ஷா மெஹ்மூட் குரோஷி தெளிவுப்படுத்தியுள்ளார். ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்ட வெளியுறவு கொள்கையை பாகிஸ்தான் ஒருபோதும் கொண்டதில்லை என்று கூறிய அவர், அமைதியே அதன் முதன்மை கொள்கையாக இருந்ததாக தெரிவித்தார்.

“அணுஆயுதங்களை கொண்டிருக்கும் இரண்டு நாடுகள் போரிடும் ஆபத்தை உருவாக்க வேண்டாம் என்பதை அறிந்துகொண்டு, இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பிரச்சனைகளை, குறிப்பாக காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க, தற்போதைய அரசு பதவியேற்ற கடந்த ஓராண்டாக மீண்டும் மீண்டும் இந்தியாவிடம் கேட்டு வருகிறது.” என்கிறார் அவர்.

“போர் மக்களுக்கு பேரழிவை கொண்டு வரும். அதனால் உலகமே பாதிக்கப்படும். எனவே, போர் பிரச்சனைக்கு தீர்வல்ல” என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதியில் நடந்ததைபோல, பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்படுமானால், பாகிஸ்தானும், ராணுவமும் தயாராகவே உள்ளது என்றார் அவர்.

“26ஆம் தேதி இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியாவின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒரு விமானி கைது செய்யப்பட்டார். அதிக திறன் கொண்ட காஸ்நவி ஏவுகணையை நாங்கள் சோதனை செய்துள்ளோம். அதுவே நாங்கள் போருக்கு தயாராகவுள்ளோம் என்பதை சொல்கிறது.” என்றார் குரேஷி.

பாகிஸ்தானின் திறமையான ராஜதந்திரம்

பாகிஸ்தானின் ராஜரீக வெற்றி குறித்து பேசிய அவர், பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டிருந்த விவகாரம், தற்போது சர்வதேச கவனத்தை பெற்றிருப்பதே, பாகிஸ்தானின் வெற்றி என்று அவர் கூறுகிறார்.

“இதுகுறித்து உலகம் முழுவதும் விவாதிக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளிலும் இதற்கான போராட்டங்கள் நடைபெற்றன. 54 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படுகிறது. வெளியே வராமல் எரிந்து கொண்டிருந்த விஷயம், சர்வதேச நிலையில் இப்போது பேசப்படுகிறது.”

காஷ்மீர் விவகாரம் குறித்து வளைகுடா நாடுகள் பெரிதாக எந்த குரலும் கொடுக்கவில்லை என்பது குறித்தும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு விருதுகள் வழங்கியது குறித்தும் பேசிய அவர், “வளைகுடா நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக கூட்டணியில் உள்ளன. ஆனால் காஷ்மீர் விஷயத்தில் அவர்களின் நிலை தெளிவாக உள்ளது.” என்றார்.

“வளைகுடா நாடுகள் எங்களின் நண்பர்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு நெருக்கடியான சமயத்தில் எப்போதும் உதவி செய்துள்ளனர். குறிப்பாக பொருளாதாரம் நெருக்கடியில் பாகிஸ்தான் இருந்தபோது ஐக்கிய அரபு அமீரகம் உதவிக்கு வந்ததை பாகிஸ்தான் மறந்துவிட கூடாது. செளதி அரேபியா எங்களுக்கு உதவவில்லையா? இன்று மில்லியன் கணக்கான பாகிஸ்தானிய மக்கள் செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் பணம் பெறவில்லையா? ஒரு விஷயத்தை நீங்கள் கூறும்போது அது தொடர்பான அனைத்தும் உங்கள் கண்முன் வர வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் மக்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என தெரிவித்த ஷா மொதமத், “உண்மை வெளிவரும்போது வளைகுடா நாடுகள் பாகிஸ்தானின் பக்கம் நிற்பார்கள்” என்று தெரிவித்தார்.

மிக விரைவில், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசவுள்ளதாகவும், அவரிடம் பாகிஸ்தான் மக்களின் எண்ணங்களை தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செளதி அரேபியா குறித்து கேட்டபோது, நியூயார்க்கில் நடைபெறவுள்ள காஷ்மீர் குறித்த சந்திப்பில் செளதி அரேபியா பங்குபெறும் என அவர் தெரிவித்தார். “ஒரு சந்திப்பில் நீங்கள் கலந்து கொண்டால் நீங்கள் அந்த விஷயத்தில் ஒரு நிலையை எடுக்கிறீர்கள் என்று அர்த்தம். அது உங்கள் யோசனையிலும், வெளியுறவுக் கொள்கைகளிலும் வெளிப்படும்” என அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகள் சார்ந்தது என்ற இந்திய பிரதமர் மோதியின் கருத்தை அவர் நிராகரித்தார். இது இருநாடுகளும் சார்ந்த விஷயமன்று. இது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்றார் அவர்.

அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்ப்பு

“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்தும் பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது.”

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், “அமெரிக்கா இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. இந்தியாவை அமெரிக்கா அதன் மூலோபாய கூட்டாளியாக பார்க்கிறது. எனவே இதுதொடர்பாக இந்தியாவிடம் யாரேனும் பேச முடியும் என்றால் அது அமெரிக்காதான்” என்றார்.

“அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அதை ஒப்புக் கொண்டது. ஆனால் இந்தியா அதனை நிராகரித்துவிட்டது. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களில் இருந்து தப்பிக்க இந்தியா முயற்சி செய்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இதற்கு முன் முஷரஃப் அதிபராக இருந்த சமயத்தில், காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்றும் அந்த பிரச்சனையை முடிவுகட்ட போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் அதில் முக்கிய பிரச்சனை, சம்பந்தப்பட்டவர்களான காஷ்மீர் மக்களின் குரல் அதில் இல்லை என்பதே” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka