பிரிட்டன் அரசியலை உலுக்கும் பிரெக்ஸிட் » Sri Lanka Muslim

பிரிட்டன் அரசியலை உலுக்கும் பிரெக்ஸிட்

IMG_20190905_101719

Contributors
author image

BBC

பிரிட்டன் அரசியலில் பெரும் அதிகார மையமாக இருந்து வரும் நாடாளுமன்றத்தில் சிக்கல் எழுந்துள்ளது.

ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிகழ்வதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர்.

அதன் பின்னர், பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்தப்போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மிரட்டி வருகிறார்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்படாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதை அனுமதிக்கும் மசோதா நிறைவேறாமல் தடுத்து நாடாளுமன்றம் எதிர்வினையாற்றியுள்ளது.

இவ்வாறு நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய, தனது கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து போரிஸ் ஜான்சன் நீக்கியுள்ளார்.

சரி அடுத்து நடப்பதுதான் என்ன?

அரசு எந்த விடயத்தில் தோல்வி அடைந்துள்ளது?

பிரிட்டன் அரசு நடத்திய மிக முக்கிய வாக்கெடுப்பில் 301 பேர் ஆதரவாகவும் 328 பேர் எதிராகவும் வாக்களித்ததால் தோல்வியடைந்துள்ளது.

இதன் மூலம் ஹௌஸ் ஆப் காமன்ஸில் (கீழவை) அரசுக்கு எதிரான உறுப்பினர்கள் அதிகமாகி, அரசின் வாக்கெடுப்பு முயற்சியை தோல்வியடைய செய்துள்ளனர்.

வரும் அக்டோபர் 31ம் தேதியோடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறவுள்ளது. எனவே, பிரிட்டனுக்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், எல்லைக் கட்டுப்பாடு, குடியேற்றம் ஆகியவை பற்றிய எந்த ஒப்பந்தமும் இதுவரை செய்யப்படவில்லை. புதியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரமில்லை என்று மக்கள் பலரும் கவலையடைந்துள்ளனர்.

அரசு இந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளதால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று பொருள்படுகிறது,

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதாக இருந்தால், பிரிட்டனின் பொருளாதாரம், உணவு மற்றும் மருந்து வழங்கல் ஆகியவை பாதிக்கப்படும் என்று பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர்.

அடுத்த சில வாரங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், பிரெக்ஸிட் தேதி 2020ம் ஆண்டு ஜனவரி 31மே தேதி வரை தாமதப்படுத்தப்படும்.

பிரிட்டன் பிரதமர் எவ்வாறு எதிர்வினையாற்றினார்?

அரசு தோல்வியுற்ற வாக்கெடுப்பு நடைபெற்றவுடன், ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் மசோதா நிறைவேற்றப்பட்டால், பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் பிரெக்ஸிட் பற்றி குறிப்பிடுகையில் அதிக சேதங்கள் ஏற்படும் என்று விமர்சகர்கள் மிகைப்படுத்துவதாகவும், பிற ஏற்பாடுகளை மேற்கொள்ள இன்னும் காலம் உள்ளது என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்,

முக்கிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்த கன்சர்வேட்டிவ் கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வின்சென்ட் சர்ச்சிலின் பேரனும், போரிஸ் ஜான்சனின் மரியாதைக்குரியவருமான சார் நிக்கோலாஸ் சோமெஸ் உள்பட கட்சியின் மிகவும் மூத்த உறுப்பினர்கள், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் அடங்குவர்.

பொதுத்தேர்தல் நடைபெறுமா?

நினைத்த நேரத்தில் பொதுத்தேர்தல் நடத்துவதாக அறிவிக்க பிரிட்டன் பிரதமர்களுக்கு இனிமேலும் அதிகாரம் கிடையாது,

ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட் வேண்டாம் என்கிற மசோதா நிறைவேற்றப்பட்டால், பொதுத் தேர்தல் நடத்துவதற்கு ஹௌஸ் ஆப் காமன்ஸ் உறுப்பினர்கள் வாக்களிக்கலாம்.

பொதுத்தேர்தல் நடைபெறுவதை முடிவு செய்ய மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

பிரிட்டனை ஆளுகின்ற பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சி தனியாக இந்த எண்ணிக்கையை பெற முடியாது. முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் ஆதரவோடுதான் இந்த மசோதா நிறைவேற்றலாம்.

“ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட் என்ற மசோதாவை அகற்றிவிட்டால் நல்லது” என்று பொதுத் தேர்தல் நடத்துவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் பதில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பதை அரசு முடிவு செய்யவில்லையா?

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாடாளுமன்றத்தை முடக்க போவதாக கடந்த வாரம் அரசு அறிவித்தது.

இந்த நடவடிக்கையை “ஆட்சியை கவிழ்க்கும் முடிவு” என்று மூத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய நிலையில், புதிய சட்டங்களை கொண்டு விரும்புவதாக போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தை முடக்கி அது செயல்படும் நேரத்தை குறைப்பதன் மூலம் ஒப்பந்தம் இல்லாத பிரெக்ஸிட் முடிவை தடுக்க வாக்களிக்கும் உரிமையை அரசு குறைக்க முயல்வதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். அதுவே அரசின் திட்டமாக இருந்திருந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தை முடக்குவது பிரெக்ஸிட்டோடு தொடர்புடையதல்ல. மகாராணியின் பேசுவதற்காகவே இது தேவையாகிறது என்று பிரதமர் தெரிவித்தார்,

அடுத்து வரும் ஆண்டுகளில் அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள புதிய மசோதாக்களை மகாராணி அப்போது அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரெக்ஸிட்டுக்கு இது என்ன பொருள்படுகிறது?

பிரெக்ஸிட் ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. ஆனால், பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இது எவ்வாறு நடைபெற போகிறது என்பது வேறு விடயம்.

பிபிசியின் அரசியல் செய்திப்பிரிவு ஆசிரியர் லௌரா குயன்ஸ்பர்க் இது பற்றி கூறுகையில், “நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற 2016ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கடுப்பு முடிவை நிறைவேற்றுவதில் தெளிவான முடிவு இந்த பிரச்சனையால் உருவாகுவதாக பிரதமருக்கு நெருக்கமானவர்கள் சிலர் நம்புகின்றனர். முதல் வாக்கெடுப்பில் பிரதமர் தோல்வியடைந்திருப்பது, அரசியல் விதிமுறைகள் எவ்வாறு தலைகீழாக உள்ளன என்கிற அளவீடாக, நன்மைக்காகவே நடைபெற்றுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்” என்கிறார்.

இந்த சமீபத்திய பிரச்சனையால், பொதுத் தேர்தல் நடைபெறுமானால், போரிஸ் ஜான்சனும், கன்சர்வெட்டிவ் கட்சியும் பெரும்பான்மையாக வெல்லலாம். ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்தில் இருந்து வெளியேறுவதும் நடைபெறலாம் என கருதப்படுகிறது.

ஆனால், ஜேர்மி கார்பைனின் தொழிலாளர் கட்சி தற்போதைய கணிப்புகளை பொய்யாக்குமானால், பிரிட்டன் வேறு பாதையில் நடைபோடும்.

மேலும், எந்தவொரு கட்சியோ, கூட்டணியோ பெரும்பான்மை பெறாமல், பிரிட்டன் பெரும் குழப்பத்திலும் தள்ளப்படலாம். இதனால், பிரெக்ஸிட் இழுபறியாகி, நாட்டின் அரசியல் மேலும் பிளவுகள் நிறைந்ததாக மாறலாம்.

Web Design by The Design Lanka