“தோட்டக்காட்டான்…”

Read Time:10 Minute, 28 Second

சீவகன் பூபாலரட்ணம்

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் கூட்டத்தில் பேசிய பேச்சு கடந்த வாரத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது. பல தமிழர்கள் அவரைத் திட்டித்தீர்த்தார்கள். அவர் ஒரு கருத்துச் சொல்ல, அதனை மற்றவர்கள் விமர்சித்தனர். இதனைவிட அவர் பேசிய விடயம் ஊடகங்களில் சரியாக அறிக்கையிடப்பட்டதா என்ற சந்தேகமும் பலரால் கிளப்பப்பட்டுள்ளது. அது இப்போது பழைய விடயமாகியும்விட்டது. அதனைப் பற்றி நான்  இங்கு பேசப்போவதில்லை. ஆனால், அந்த விமர்சனங்களில் சிலர் பயன்படுத்திய சில சொற்பிரயோகங்களை என்னால் இலகுவாகக் கடந்து போக முடியவில்லை.

அந்தச் சொல்தான் “தோட்டக்காட்டான்”. சிலர் இந்தச் சொல்லை மிகவும் இலகுவாகப் பயன்படுத்திக் கொண்டு செல்வதைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. ஒருவரைத் திட்டுவதாகக் கூறி ஒரு சமூகத்தையே இழிவாக, மனதைப் புண்படுத்த எப்படி இவர்களால் முடிகிறது?

இலங்கையில் சுதந்திரம் கிடைத்த பின்னரும் அண்மைய தசாப்தங்கள் வரை இந்த நாட்டுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுத்து வந்தவர்கள் இந்த வந்தேறு குடிகளான மலையக இந்திய வம்சாவழித் தமிழர்கள்தான். அதாவது தோட்டக்காட்டார்கள். அதுவும் பல சந்ததிகளாக இந்த நாட்டுக்கு உயிரைக் கொடுத்து உழைத்துக் கொட்டிய பின்னரும் குடியுரிமை நிராகரிக்கப்பட்டு, சொந்தமாக ஒரு வீட்டுக்கு வழியில்லாமல் நம்மால் வைக்கப்பட்டவர்கள்தான் இவர்கள். இன்றுவரை உறுதியான ஒரு ஊதியத்தை அவர்களுக்கு கொடுக்க முடியாத, ஏற்பாடு செய்ய முடியாத ஒரு வெட்கம்கெட்ட நாட்டின் பிரஜைகள் நாங்கள்.

குளிரில் வேலை செய்வது என்பது எவ்வளவு கொடியது என்பது புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு ஓரளவு தெரியும். ஆனால், அட்டைக் கடி தெரியுமா? தோட்டக்காட்டில் அட்டை எவ்வளவு வேகமாகக் காலில் ஏறும் என்பதும் எப்படி இரத்தத்தை உறிஞ்சும் என்பதும் இவர்களுக்கு தெரியுமா? அந்த உணர்வு இவர்களுக்கு புரிய நியாயமில்லை. தோட்டக்காட்டானின் காலைக் கழுவி குடித்தால்தான் இவர்களுக்கு அது புரியும்.

அவன் இரத்தத்தைக் கொடுத்து நாட்டுக்கு உழைத்துக்கொடுக்க, அந்த வலியைப் புரிந்துகொள்ளாத இவர்கள் எல்லாம் போலித் தமிழ் தேசியவாதிகள். மீண்டும் சொல்கிறேன் இவர்கள் போலித் தமிழ் தேசியவாதிகள். உண்மையான தமிழ் தேசியம் இன்னுமொரு இனத்தை ஏளனம் செய்யாது. அவன் மனதைப் புண்படுத்தாது. அவன் உணர்வைப் புண்படுத்தாது.

நீரிழிவு நோயோடு குடாரப்பில் தரையிறங்கி, கடற்கரை மணலில், நடு வெயிலில் காலூன்றி வழிமறிப்புத்தாக்குதல் செய்த தளபதி பால்ராஜின் தீரம், அந்த தோட்டக்காடு அவரது பரம்பரைக்கு கொடுத்த உறுதியால் வந்தது. டயபிட்டிக் இருக்கிறவர்கள் ஒரு மணிநேரம் அனல் வெயிலில் கடற்கரை உப்புக்காற்றில் நின்றுபாருங்கள் அந்த தோட்டக்காட்டானின் உறுதி தெரியும். இவையெல்லாம் நடந்த பின்னரும் இந்த வார்த்தையைச் சொல்ல எப்படி இவர்களுக்கு மனது வருகிறது. கடைசியில் வன்னியில் எஞ்சி நின்றவர்களில் கணிசமானவர்கள் மலையகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்பதைக்கூடவா இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

இது ஒன்றும் புதிய விடயமுமல்ல. வடக்குக் கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு இது பழகிப்போன விடயம். தனிநாடு கேட்பதாக கூட்டணி பிரகடனம் செய்ய, அதில் இருந்து விலகிப் போனது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். தனிநாடு என்பது மலையகத் தமிழர்களுக்கு பொருத்தமற்றது என்று அவர்கள் விலகி நின்றார்கள். அப்போதே ஆரம்பித்துவிட்டார்கள் இவர்கள் “தோட்டக்காட்டனை நம்ப முடியாது, வடக்கத்தயானை நம்ப முடியாது” என்று. அதற்கு முதலும் இந்தப் பழிப்பு இருந்தே வந்திருக்கிறது.

தனியான பாதையில் போன இதொகா மலையக மக்களுக்கு பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்தது. “அதனால்தான் இது கிடைத்தது, இதனால்தான் அது கிடைத்தது” என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யலாம். ஆனால், பிரஜாவுரிமை கிடைத்ததுதான் யதார்த்தம். அவர்களைப் பழித்த நீங்கள் இன்றுவரை எதனைப் பெற்றிருக்கிறீர்கள்? ஒன்றைச் சொல்லுங்கள்.

மரப்பாலத்தில் ஒரு பொது நிகழ்வில் கலந்துகொண்ட போது அங்கு இரு குழுவினருக்கு இடையே முறுகல் வர, அதனைச் சமாளித்து வந்த பின்னர் கரடியனாற்றில் வைத்து ஒரு தம்பி சொன்னார் “வடக்கத்தானை நம்ப முடியாது” என்று. அவர் சொன்னது எனது மனைவியிடம். எனது மனைவி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மலையகத்துக்காக அவர் ஒரு துரும்பைக்கூட தூக்கிப் போட்டது கிடையாது. ஆனால், மட்டக்களப்பானைக் கட்டியதற்காக இந்த ஊரில் வந்து நிறையச் செய்திருக்கிறார். இதனைப் போல எத்தனை பேரின் மனைதப் புண்படுத்தியிருக்கிறீர்கள்.

மனோ கணேசன், இராதாகிருஸ்ணன் உட்பட பல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர்களிடம் பதவி உயர்வுக்காகவும் இடமாற்றத்துக்காகவும் சென்று வந்த வடக்கு கிழக்கு அரச பணியாளர்களில் ஒரு சிலராவது, அவர்கள் அந்தப் பக்கம் போன பின்னர் “தோட்டக்காட்டான்” என்று முதுகுக்குப் பின்னால் சொல்லவில்லை என்று உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.

அவர்களைப் பழித்துப் பழித்து நீங்கள் இருந்ததையும் இழந்தீர்கள், அவர்கள் குடியுரிமை பெற்றார்கள், இன்னும் மேலே போய்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இன்று அவர்களைப் பார்த்துப் பழிப்பது அவர்களை இனி ஒன்றும் செய்யாது. ஆனால், இது உங்கள் நிலையைத்தான் குறைக்கும்.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களை கொழும்பில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள்கூட “தோட்டக்காட்டான்” என்று இழிவுபடுத்திப் பேசுவதையும் நான் கேட்டிருக்கிறேன். இது இன்னுமொரு வகை.

சக இனத்தை, அதுவும் நமது இனத்தின் இன்னுமொரு பிரிவை இழிவாகப் பேசும் எந்த இனமும் உய்ய முடியாது. நாம் கற்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது. இது பல்கலைக்கழகம் சென்று கற்பதல்ல. அங்கு சென்று இதனைக் கற்க முடியாது. நமது அடிமனதில் இருந்து இது வரவேண்டும். இங்கு நானும் உத்தமனில்லை. படிப்படியாகத்தான் இவற்றை உணர்ந்திருக்கிறேன். பழசுகளை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இளைஞர்கள் இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள். எங்கள் தலைமுறை மாற எடுத்த காலத்தை எடுக்க உங்களுக்கு அவகாசமில்லை. நீங்கள் இப்போதே மாறியாக வேண்டும். உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இளக்காரமாக நினைத்தவர்கள் தமது உழைப்பாலும், உறுதியாலும் உயர்ந்திருக்கிறார்கள். நாம் மாத்திரம் அப்படியே இருக்க முடியாது. முதலில் மற்றவர்களை மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அதிக பங்கிருக்கிறது. சக வாழ்வு, சக இனங்களுடனான உறவு என்பவற்றை பள்ளிக்கூடங்கள் கற்றுத்தர வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் மாற வேண்டும். வேறுபாடுகளுக்குள் ஒரு ஒருமைப்பாட்டைக் காண விளைய வேண்டும். முதலில் நமது தவறுகளை ஒப்புக்கொள்ள முயல்வோம். அதற்கான மன்னிப்புக்கோருவோம். எமக்காக உயிர் கொடுத்து உழைத்த ஒரு சமூகத்துக்கு தலை வணங்குவோம். இதனால், நாம் வீழ்ந்துவிடமாட்டோம். உயர்வோம். (அரங்கம் பத்திரிகை)

Previous post 7 பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை
Next post பிரதமர் – கனிமொழி சந்திப்பு