சாணக்கியம் என்றால் இதுதான்! - நான் அறிய நடந்தது...!! - Sri Lanka Muslim

சாணக்கியம் என்றால் இதுதான்! – நான் அறிய நடந்தது…!!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(ஶ்ரீ.ல.மு.கா. தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் மரணித்து இன்றுடன் 19 வருடங்கள். அதனையொட்டி இப்பதிவினை மீண்டும் இடுகிறேன்…)

சாணக்கியம் என்றால் இதுதான்! – நான் அறிய நடந்தது…!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~

1994 ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் – இலங்கை வங்கியில் பதவிநிலை உத்தியோகத்தர் (Officers Trainee) நியமனம் பெற்று பயிற்சி முடிந்து – 1992ல் சிலாபம் கிளைக்கு ‘போஸ்டிங்’ செய்யப்பட்டு வேலை செய்து கொண்டிருந்த காலம்.

உத்தியோக விஜயமாக அல்லது கட்சி மாநாடு / கூட்டங்களுக்காக தலைவர் அஷ்ரஃப் (அப்போது அவர், ‘துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சர்’) புத்தளம் மாவட்டம் வரவேண்டியிருந்தால் – பெரும்பாலும் முதல்நாளே வந்து என்வீட்டில் தங்கி, மறுநாள் என்னையும், என்மகள் ‘ஷெஸா ஸைனப்’பையும் – தன் விஜயங்களுடன் இணைத்துக் கொள்ளத் தவறியதேயில்லை!

சரி, விஷயத்திற்கு வருகிறேன்:

வடமாகாண முஸ்லிம்கள் புலிகளால் இனச்சுத்திகரிக்கப் பட்டு அகதிகளாக புத்தளத்தைத் தஞ்சமடைந்திருந்த காலம்.

நிலப்பஞ்சம்.
தற்காலிக குடியேற்றத்திற்கு நிலத்தேவை ஏற்பட்டது. அப்போது தலைவர் அஷ்ரஃப் துறைமுகங்கள், புனர்வாழ்வு (அவர் விரும்பி சந்திரிகா புதிதாக உருவாக்கிய அமைச்சு), புனரமைப்பு அமைச்சராக இருந்தார். ஆனால் புத்தளம் நகரைச் சுற்றிய பகுதிகளில் அரச, தனியார் நிலங்கள் தட்டுப்பாடு!

தற்காலிக ஆனால் நீண்டகால குடியேற்றத் திட்டமொன்றை (யுத்தம் எப்போது முடிவுறும்; எப்போது தாய்மண் மீளலாம், அது சாத்தியமா? – என்று எவருமே எதிர்வுகூற முடியாத நிலை) நடைமுறைப்படுத்த வேண்டிய சிந்தனை அஷ்ரஃப்பிடம் இருந்தது!
அகதிகளாக்கப்பட்ட வடபுல மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு இருந்தது!
அதற்காக அமைச்சரின் வழிகாட்டலில் – ‘க்ரஷ் புரோக்ராம்’ ஒன்றை தயாரித்து முடுக்கிவிடும் பணியில் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சகம் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருந்தது.

காலையில் எனது சிலாபம் வீட்டிலிருந்து நாங்கள் – என்மகள் (4 வயது) உட்பட – புத்தளம் நோக்கிக் காரில் போய்க் கொண்டிருந்தோம். காரில் எப்போதும் சாரதிக்குப் பக்கத்தில் பிரதம பாதுகாப்பு அதிகாரி, பின் சீட்டின் இடதுபுறத்தில் தலைவர், நடுவில் மகள் ஷெஸா, வலது புறத்தில் நான்! எங்களுடன் பயணம் செய்கையில், எப்போதும் இதுதான் ஒழுங்குமுறை!

பயணத்தின்போது பொதுவாக வண்டி வழியில் நிற்காது – என் மகளின் ஏதாவது தேவையைத் தவிர!

அப்போது புத்தளம் மாவட்டத்தின் ‘வண்ணாத்திவில்லு’ பிரதேச உதவிச் செயலாளராக – மன்னார் சிலாபத்துறையைச் சேர்ந்தவரும், இப்போது முஸ்லிம் சமய, கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஆலோசகராகவும் இருக்கும் – எம். முயினுத்தீன் பணிசெய்து கொண்டிருந்தார்.

புத்தளம் கச்சேரியில் அகதிகள் சம்பந்தமான கூட்டம் அன்று. அது முடிந்ததும் – இடம் பெயர்ந்த மக்களைச் சந்திக்க புத்தளம் – மன்னார் வீதி நெடுகிலும் அமைந்திருந்த அகதி முகாம்களுக்குச் சென்றோம்.

ஏற்கனவே, அப்போதைய மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமூகசேவைகள் பிரதியமைச்சருமான எஸ்.எம். அபூபக்கர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ், மற்றும் உயர் அரச அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் எங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்குள்ள மக்கள் -முகாம்களில், பழக்கமற்ற புதிய சூழலில் – தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கூறி, தமக்குச் சிறிய குடிசை யொன்றையேனும் தனித்தனியாக அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற காணிப் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது.

அப்போது, புத்தளத்தில் பிறந்த – அப்பிரதேசத்தை நன்கறிந்தவரும், அதன் நிலப்பரம்பல் பற்றிய அறிவையும் கொண்டவரான – டொக்டர் இல்யாஸ் ஒரு யோசனையை முன்வைத்தார்.

அதாவது, “சேர், இந்த ரோட்டிலேயே சில கிலோமீட்டர் தூரத்தில் முடிக்குரிய காணிகள் உண்டு. அதைப் பயன்படுத்த முயற்சிக்கலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல். புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவத் தொகுதியின் எம்பியும், ஃபேமஸ் அடாவடிப் பேர்வழியுமான, த.மு. தசநாயக்க (இவர், சந்திரிகா ஆட்சியில் அரையமைச்சராக இருந்தபோது – கட்டுநாயக்க பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கொழும்ப வீதியில் வைத்து – புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இரையானவர்) முஸ்லிம்கள் அதில் குடியமர்த்தப் படுவதை எதிர்ப்பார்.

இப்போதே, நாம் வடக்கு முஸ்லிம் அகதிகளை இங்கு முகாம்கள் அமைத்துத் குடியமர்த்தியதற்கே கொதித்துக் கொண்டிருக்கிறார். அவனரைச் சமாளித்தால் சரி. அதேவேளை, சேர், அப்பகுதியில் நூற்றைம்பது சிங்கள மீனவர் குடும்பங்கள் உள்ளன. அவர்களும் இதுவரை குடியுருக்கச் சொந்த நிலம் இல்லாமல் இருக்கிறார்கள். அந்தப்பிரச்சினையும் உள்ளது…” என்று கூறினார்.

தலைவர் ஒன்றும் சொல்லாமல் சிலநிமிடங்கள் சிந்தித்தார். பின்னர், டொக்டர் இல்யாஸை நோக்கி,
“டொக்டர் நான் அந்த நிலத்தை உடனே பார்க்க வேண்டும்; அந்த மீனவர் சமூகத்தையும் சந்திக்க வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள, எங்கள் வாகன அணி உடனே ஓடியது – அவ்விடத்தை நோக்கி!

இடத்தினைப் பார்வையிட்டு, உரிய அதிகாரிகளிடம் விபரம் அறியப்பட்டது. சிங்கள மீனவக் குடும்பங்களையும் சந்தித்தோம். பின் அங்கிருந்தே மீண்டும் சிலாபம் திரும்பல்!

வீடு வரும்வழியில், தலைவர், “மீலாத், இந்த மக்களுக்கு உடனடியாக ஏதாவது செய்யவேண்டும். பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது..” என்று ஆங்கிலத்தில் கூற, இதனைச் செவியுற்ற எனது நான்கு வயது மகள், “Yes, ‘poowapa’ (தலைவரை மகள் ‘பூவாப்பா’ என்றுதான் விளிப்பாள்) please help these poor people. There were many children like me living in those huts” என்று வேறுகூற, அவருக்குச் சிரிப்பும் வந்துவிட்டது – என் மகளின் கரிசனையை கண்டு!

கொழும்பு திரும்பியதும், அந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுக்குச் சென்றதும் செய்த முதல்வேலை – தனது ‘கோர்டினேற்றர் யாசீனை அழைத்து, ‘அரையமைச்சர், த.மு. தசநாயக்கவை உடன் வந்து பாராளுமன்ற அலுவலகத்தில் தன்னைச் சந்திக்கும்படி’ சொல்லச் சொன்னதுதான்!

த.மு. வந்ததும் – தலைவரின் மூளை ஏற்கனவே அதன் வேலையை ஆரம்பித்திருந்ததால் – “மந்திரிதுமா, கடந்த ஞாயிற்றுக் கிழமை புத்தளம் சென்றேன். இலவங்குளம் வீதியில், குடியிருக்கக் காணியற்றிருக்கும் சிங்கள மீனவர் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. மிகவும் பரிதாபகரமாக இருந்து. அவர்களுக்கு ஏதாவது செய்ய மனம் துடிக்கிறது… அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்” – என்று தூண்டிலைப்போட, அவரும் அச்சந்தர்ப்பத்தைத் தவறவிடுவாரா என்ன, இதனால் தனக்கும் வாக்குகளாயிற்றே!

ஆகவே அவரும், “கரு. அமதிதுமா, மடத் ஹரி சதுட்டு. நான் இந்த விஷயத்திற்கு ஃபுல் சப்போர்ட் தாறன். வேண்டியதைச் செய்ங்க” என்று கூற, அரைக்கிணற்றைத் தாண்டியாயிற்று!

அடுத்தகட்ட ‘மூவ்’ – நகர்வு. நாசூக்காகவும், நோகாமலும் ‘நுங்கை’ எடுக்க வேண்டும். அதில்தான் சாமர்த்தியம் – சாணக்கியம், சரியாகத் தன் வேலையைச் செய்யவேண்டும்.

மொபைல் ஃபோன் (அக்காலத்தில் ‘ஸ்லீக் ஸ்மார்ட்’ ஃபோனெல்லாம் கிடையாது. ‘வோக்கடோக்கி’ சைஸில் – ஒரு கிலோ இல்லாவிட்டாலும் கணிசமான பாரமுடைய – ‘Motorola’ ஃபோன்தான்) அலறியது – ஜனாதிபதி சந்திரிகாவை நோக்கி, ஓர் ‘அப்பொயின்ற்மெண்ட்’டுக்காக! (அஷ்ரஃப் அவர்களுக்கு, ஒரு ஃபோன் கோலிலேயே ஜனாதிபதியுடன் பேசவும், உடன் ‘அப்பொயின்ற்மெண்ட்’ எடுத்துச் சந்திக்கவும்கூடிய ‘தில்’லும், ஆளுமையும் இருந்தது. இன்றைய hardboard தலைவரைப் போலல்ல!)

சந்திப்பின்போது, “மெடம், கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தியோக பூர்வ விஜயமாக புத்தளம் சென்றேன். இலவங்குளம் ரோட்டில், குடியிருக்கக் காணியற்றிருக்கும் சிங்கள மீனவர் குடும்பங்களைச் சந்திக்க நேர்ந்தது. மிகவும் பரிதாபகரமாக இருந்து. அவர்களுக்கு ஏதாவது செய்ய மனம் துடிக்கிறது… அதற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்” என்று கூற;

“okay Ash, no problem.. What you want me to do…?” என்று பச்சைக்கொடி காட்ட, தலைவர் உடனே, “மெடம் அங்கு ஏராளமான முடிக்குரிய காணிகளுண்டு. அப்பகுதியில், இந்த 180 குடும்பங் களுக்கும் குடியிருப்புத்திட்டத்தை உருவாக்கி, “சிறிமாபுர” – என்று உங்கள் அம்மாவின் பெயரைச் சூட்டத் தீர்மானித்துள்ளேன். புத்தளம் மாவட்ட எம்.பி. த.மு.வும் இதற்கு முழுச்சம்மதம்” என்றதும் – குளிர்ந்தது சந்திரிகாவின் மனசு!

அதைப்பயன்படுத்தி, தலைவர் தனது நோக்கத்திற்கான கோரிக்கையையும் நாசூக்காக அவரிடம் விட்டார்:

“மெடம், புத்தளத்திலுள்ள வடபகுதி முஸ்லிம் அகதிகளின் குடியிருப்புப் பிரச்சினை, பெரும் மனிதாபிமானப் பிரச்சினை. தற்காலிகமாகக் குடியிருக்கக் காணியில்லை. சிறிமாபுரத் திற்கான காணியுடன், சேர்த்து இவர்களுக்காகவும் காணிகளை ஒதுக்கினால் லேசாயிருக்கும். அக் காணிகளையும் நான் இனங்கண்டு வைத்திருக்கிறேன். இரண்டு திட்டங்களையும் ஒரே நேரத்தில் தொடங்கவும் முடியும், மெடம்”! என்று கூற – ஜனாதிபதி மறுப்பேதுமின்றி பச்சைக்கொடி காட்ட, தலைவரும் அதைக் கையிலெடுத்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்!

பின் நடந்தவையெல்லாம் – சம்பவங்களும், சரித்திரமும்! அமைச்சு அதிகாரிகளும், புத்தளம் மாவட்டச் செயலக அதிகாரிகளும், 24 மணித்தியாலங்களும் முடுக்கி விடப்பட்டனர்.

அவர்களும் பம்பரமாக வேலை செய்ததன் பயனாக – திட்டமிட்டதற்கும் முன்பாகவே ‘புரஜக்ட்’ முடிந்ததும் – பிறிதொரு தினத்தில் அவை திறந்து வைக்கப்பட்டன.

தலைவருடன், நானும் மகளும் சென்றோம், அதற்காக – முழுச் சந்தோஷத்துடன்!

மேற்கூறிய அணுகுமுறைதான் சாணக்கியம். அதுதான் அஷ்ஃப்பின் சாணக்கியம்;
சா(ந)க்கியமல்ல! இப்போதுள்ள hardboard தலைவருக்கு இந்த சாணக்கியம் மருந்துக்கும்கூடக் கிடையாது.
அதற்கு, தன்னலமற்ற மனிதாபிமான – சமூக அக்கறையும், உள்ளார்ந்த ஈடுபாடும் தேவை!

அஷ்ரஃப்பிடம் அவையே இருந்தன; அவரது வாழ்க்கையும் அதுவாயிருந்து!

அல்லாஹ் அவருக்கு ‘ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்’ என்ற மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக!
அதுவரை, அவரது மண்ணறையை விசாலமாக்கி, ஒளியாலும், நல்வாசனையாலும் நிரம்பியிருக்க அருள்புரிவானாக!

#மீலாத்கீரன்
(16092018-3)

Web Design by Srilanka Muslims Web Team