NFGG உம் JVP யும் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

மிஹாத்
* * *
சங்க இலக்கியத்தில் கபிலர், பிசிராந்தையர் எனும் இரண்டு புலவர்கள். ஒருவர் பார்க்கும் திறன் அற்றவர். இன்னொருவர் நடக்கும் திறன் அற்றவர். இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக வாழ்ந்தார்கள். எப்படி?
பார்வையற்றவர் தனது தோழில் நடக்க முடியாதவரைச் சுமப்பார். நடக்க முடியாதவர் பார்வையற்றவருக்கு வழி காட்டுவார்.
இந்த விடயம் தற்செயலாக ஞாபகம் வந்தது. வேறொன்றுமில்லை.

N F G G எனும் புதிய கட்சிக்கும் J V P ற்கும் இடையில் ஒரு தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறுகிறார்கள். இந்த N F G G கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேனவை ஆதரித்தது. அதன் பிறகான காலத்தில் சிறிசேன, ரணில் முகாமில் தமக்கான வரப்பிரசாதங்கள் எதுவும் கிடைக்காது போனது. இதே காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரசோடும், தமிழ் கூட்டமைப்போடும் வெவ்வேறு தேர்தல்களில் கூட்டு வைத்து தேர்தலை அணுகிய போதும் அவர்களால் பிரதிநிதித்துவத்தை பெற முடியவில்லை. சமூகம் சார்ந்த அரசியல் அக்கறைகளை நோக்கியதாக செயல்படும் ஒரு அமைப்பாக தம்மை பிரகடனப்படுத்திக் கொள்ளும் அக்கட்சி வெவ்வேறு அரசியல் கட்சிகளுடன் வேளைக்கொரு கூட்டணி வைத்து தேர்தல் மாரடிப்பதற்குப் பின்னால் சமூக நலன் இருப்பதாக கூற முடியவில்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட விரும்பும் கட்சியானால் முதலில் தமது ஆதரவுத் தளத்தை பிரத்தியேகமாக விரிவு படுத்துவதில் ஆர்வம் காட்டியிருக்கும். ஆனால் N F G G யானது ஆசனங்களைப் பெறுவதற்கான களவாணித்தனங்களில் ஆர்வம் காட்டுவதை அவதானிக்கும் போது அவர்கள் மேல் சமூக அரசியல் குறித்த அவநம்பிக்கை ஏற்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பே இல்லாத ஒரு கட்சியோடு உடன்பாடு கண்டு அந்த வேட்பாளருக்கு ஆதரவாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பலியிட N F G G துடிப்பதன் நோக்கம் எதுவாக இருக்க முடியும்?

எப்படியாவது மூன்றாம் இடத்தை பிடித்து தமது இடத்தை தக்க வைப்பதற்கு J V P யினருக்கு உதவுவதும் அதற்கு கைமாறாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர்களிடமிருந்து ஒரு தேசிய பட்டியல் பெறுவதாகவுமே இவர்கள் உடன்பாடு கண்டிருக்க வாய்ப்புள்ளது. அப்துர்ரஹ்மான் போன்றவர்களின் பாராளுமன்ற கனவை ஈடேற்றிக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தை பணயம் வைத்து வெல்ல முடியாத J V P மீது பந்தயம் கட்டுவதே N F G G யின் சூழ்ச்சியாக இருக்கிறது.

J V P வழமையாக மூன்றாவது சக்தியாகவே இருந்தார்கள்.
இப்போது சிறிசேன ஒரு தரப்பாக மாறி விட்ட சூழலில் தமது மூன்றாம் இடத்தை இழந்து விடக் கூடாது என்பதற்காக இம்முறை சில சித்து விளையாட்டுகளை முன்வைத்து போராடுகிறார்கள். இது புரியாத சிலர் வாயூறி அண்ணார்ந்து பார்க்கின்றனர்.

சிறுபான்மையினர் பெரிய அளவில்
J V P யை ஆதரிப்பதானது அரசாங்கத்தோடும், எதிர்க்கட்சியோடும் நேரடியாக முரண்படுவதாகவே அமையும். அதேவேளை சிறுபான்மையினரை எந்தவொரு அரசாங்கமும் பாராமுகமாகவே நடத்த முற்படும். அத்தோடு முக்கியமான தருணங்களில் பிரதான எதிர்க்கட்சியின் அரவணைப்பும் இல்லாமல் போய் விடும். இவ்வாறான நிர்க்கதியான சூழலை நோக்கி முஸ்லிம்கள் நகர்வது முட்டாள்தனமானது.

J V P இதுவரை அதன் பொருளாதார திட்டங்கள் பற்றி வெளிப்படையாக எதுவும் பேசியதில்லை. பேசுவதில்லை. இலங்கையில் இருக்கும் சமூக முரண்பாடுகள் குறித்த விடயத்தில் நீண்ட கால தீர்வுகள் பற்றி அவர்கள் வெளிப்படையாக எதுவும் தெரிவிப்பதில்லை.

இன்றைய உலக பொருளாதார வர்த்தக சூழலை அக்கட்சி என்ன அடிப்படையில் நோக்குகிறது என்பது பற்றி அவர்களிடம் தெளிவான நிலைப்பாடுகளில்லை. சர்வதேச முதலீடுகள் சம்பந்தமாக அவர்களின் கொள்கைகள் எவ்வாறு அமைகிறது என்பது பற்றி இந்நாட்டு மக்களுக்கு அவர்கள் எதனையும் கூறியதில்லை. இப்படி தேசிய, சர்வதேச அரசியல் ராஜதந்திரங்களுடன் தொடர்பான அரசியல் காரணிகளை இருட்டடிப்பு செய்து வாக்கு அரசியலில் மட்டும் சிறுமையான குறியாக இருக்கும் இக்கட்சி நாடாள்வதற்கு எந்த அடிப்படையில் தகுதியானது என்பதை உணர்ச்சி அரசியலூடாக பரவசம் அடைபவர்கள் சிந்திக்க வேண்டும்.

J V P கட்சியானது அருகில் உள்ள நாடான இந்தியாவுடன் கூட நட்புறவைக் கட்டியெழுப்பாத ஒரு கட்சி. இந்திய விஸ்தரிப்பு வாதம் எனும் கண்ணோட்டத்தில் அந்த நாட்டை எதிரியாக நோக்கியே பழகிய கொள்கை அவர்களுடையது. அதை விடுவோம், இந்தியாவிலுள்ள இடதுசாரிக் கட்சிகளோடு கூட இவர்களுக்கு தொடர்புகளில்லை. அது மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள தொழிற்சங்க அமைப்புகளோடு கூட இவர்களுக்குத் தொடர்பில்லை. ஆகக் குறைந்தது தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரி தலைவர்களுடனாவது இவர்களுக்குத் தொடர்பில்லை. ஒருமுறை எல்பின்ஸ்டன் அரங்கிற்கு இந்திய வங்கி ஊழியர் சங்க தலைவர் சீ.ஹெச்.வெங்கடாசலம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால் அழைக்கப்பட்டிருந்தார். அவரது இரண்டு மணி நேர ஆங்கில உரையைக் கேட்க பல நூறு இடதுசாரி வங்கி ஊழியர்களும் பிரமுகர்களும் வந்திருந்தனர்.அங்கு J V P பிரமுகர்களை காணவேயில்லை. இது போன்ற உறவுகளைக் கூடபேண முடியாத அக்கட்சி எவ்வாறு உலக அபிமானத்தைக் கட்டியெழுப்பும்?

J V P யானது இலங்கை அரசியலில் தமது இடத்தையும், தமது தந்திரோபாயங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் முதலில் குறிப்பிட்டளவு உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி அவற்றை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். அது போலவே சில மாகாண சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான உபாயங்கள் குறித்தாவது சிந்திக்க வேண்டும். இதனை தமது அடிப்படைத் தகுதியாக வைத்துக் கொண்டு பாராளுமன்ற அதிகாரத்தையும், ஜனாதிபதி அதிகாரத்தையும் பெறுவதற்கு எதிர்காலத்தில் முயற்சிக்கலாம். அப்போது வேண்டுமானால் N F G G போன்ற அரசியல் விடலைகள் முட்டுக் கொடுப்பதை நியாயம் காணலாம்.

Web Design by Srilanka Muslims Web Team