சோனக புரோக்கர் அரசியல்வாதிகள் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abdul waji


அரச ஊழியர்களுக்கு வருகின்ற தற்காலிக இடமாற்றம் போன்று இலங்கையில் தேர்தல் முடிவுகளும் வாடிக்கையான ஓன்றாகி விட்டது. ஆளும் தரப்பிலிருக்கும் ஊழல் பேர்வழிகள் எதிர்த் தரப்பு பக்கமும், எதிர்ப் பக்கம் இருந்த ஊழல் பெருச்சாலிகள் இந்தப் பக்கமுமாக இடம் மாறுவதைத் தவிர இந்த தேர்தல்கள் மூலம் வேறு எதுவும் இடம் பெறுவதில்லை.

வழமை போன்று இம்முறையும் முஸ்லிம்களுக்குள் ஓரு பிரிவினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசியல் ரீதியான நிலைப்பாடொன்றை எடுக்காது, புதிய சண்டியனை பழிவாங்க பழைய கொடுங்கோலனை கொண்டு வருவதே தீர்வு என்று நம்புகின்றனர்.

இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, முன்னாள் கொடுங்கோல் ஆட்சி பாசிச கும்பலுக்கு சேவகம் புரிந்த சோனக புரோக்கர் அரசியல்வாதிகள் சிலர் சீசன் பிழைப்புக்கு தம்மை தயார்படுத்திக் கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

அதேநேரம் , தற்போதைய அரசின் கையாலாகாத தனங்களை கண்டு கொள்ளாமல் அதிகாரத்தில் இருந்து கொண்டு மெளனம் காத்த அரசியல்வாதிகளும் குதிரைப் பந்தயம் கட்டுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர் .

முன்பு அதிகாரத்தில் இருந்து கொண்டு சுகம் கண்டு, அது கை நழுவிப் போய் துவண்டு கிடந்த பல முன்னாள் சோனக அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எப்படியாவது இந்த தேர்தலில் கோத்தாபயவை வெல்ல வைத்து, அதற்கு பிரதியுபகாரமாக தாம் இழந்த அதிகாரத்தை மீளப் பெறுவதற்கு கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர். கோத்தாபய வெல்லும் போது தமக்குத் தரப்பட வேண்டிய அதிகாரங்கள் குறித்த இரகசிய உடன்பாடுகளின் பின்பே இவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் முதற் கட்டமாக முன்னாள் முஸ்லிம் முதலமைச்சர் ஓருவரை ஜனாதிபதி வேட்பாளராக்கி கோத்தாவின் மீது வெறுப்புக் கொண்ட முஸ்லிம்களின் வாக்குகளை எதிர்ப் போட்டியாளருக்கு செல்ல விடாமல் தடுப்பதோடு, இரண்டாவது விருப்பு வாக்கினை கோத்தாபயவுக்கு வழங்கச் செய்து அவரை வெற்றி பெறச் செய்வதற்கான முனைப்புகள் இடம் பெற்று வருகின்றன.

இதற்கான யோசனைகள், மஹிந்தவின் விசுவாசியும்,முன்னாள் மு.கா தவிசாளருமான பசீர் சேகுதாவூதினால் கோத்தா தரப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பேரம் பேசல்களின் பின் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறான பின்னணயில் பசீர் தனது பிரச்சார வேலைகளை முகநூல் வாயிலாக ஆரம்பித்திருப்பதை காண முடிகிறது.

அண்மையில் அவரது முகநூல் பதிவொன்றில் சஜித் பிரேமதாசவை மட்ட ரகமாக விமர்சித்திருப்பதோடு, அதற்கு துணையாக ஏறாவூர் மக்களை தனது நிலைப்பாட்டில் சாய்த்துக் கொள்ளும் நோக்கில் பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற சம்பவம் ஓன்றையும் துணைக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.

நான் சஜிதுக்கோ, அல்லது அவரது அப்பாவுக்கோ ஆதரவானவன் அல்ல. ஆனாலும் பசீர் சேகுதாவூத் தனக்கும், சஜித்தின் அப்பா பிரேமதாசவுக்கும் இடையில் இருந்த திரைமறை உறவுகளையும், அதற்காக தான் பிரேமதாசவிடம் பெற்றுக் கொண்ட பிரதியுபகாரங்களையும் மறைத்துக் கொண்டு விமர்சனம் செய்யும் அவரது அறம் பற்றி இங்கு கேள்வி எழுப்புவது அவசியமாகிறது.

இல் பசீர் சேகுதாவூத் ஈரோஸ் இயக்கத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி எட்டுப் பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எட்டாம் இடத்தில் இருந்தார். இருந்த போதிலும் பாலகுமாரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

பின்னர் ஈரோஸின் நட்பு அமைப்பான விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய ஈரோஸ் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பகிஷ்கரித்த போது பஸீர் சேகுதாவுதும் பகிஷ்கரித்து வந்தார். பாராளுமன்றுக்கு தொடர்ச்சியாக சமுகமளிக்காத தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் உறுப்புரிமை வறிதாகி வந்த நிலையில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்தடுத்த நிலையில் இருந்தவர்களுக்கு சத்தியப் பிரமாணம் செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. அவர்களும் சத்தியப் பிரமாணம் ஏற்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டியலில் இறுதியாக இருந்த பசீர் சேகுதாவூதுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அவர் ஈரோஸின் கூட்டுப் பொறுப்பினை மீறி பாராளுமன்றம் சென்றார்.

இக்கால கட்டத்தில் அப்போது மஹிந்தவை போல் ஓர் சர்வாதிகாரியாக செயற்பட்டு வந்த ஜனாதிபதி பிரேமதாசவுக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. மிகவும் இக்கட்டில் இருந்த பிரேமதாச அவருக்கு ஆதரவாக பாராளுமன்றில் கை உயர்த்துவதற்கு பசீரின் உதவியை நாடி, தனிப்பட்ட சந்திப்பொன்றுக்கு அழைத்த போது அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். சந்திப்பின் பின் வெகுமதிகள் பரிமாறப்பட்டிருந்தன. அதன் பின் பசீர் சேகுதாவூத் பிரேமதாசவின் அன்புக்குரியவராகவும், பிரேமதாசவிடம் விடுக்கப்படும் தனது வேண்டுகோள்களை நிறைவேற்றிக் கொள்ளும் நிலையிலும் இருந்தார். இப்படியான ஓரு கால கட்டத்தில்தான் பசீர் குறிப்பிடுகின்ற புகையிலை வாடிகள் தீ வைக்கப்பட்டு விவசாயிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது நட்பினைப் பயன்படுத்தி பிரேமதாஸ அரசிடமிருந்து எதுவித நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கவில்லை.

அன்றைய சர்வாதிகாரி பிரேமதாசவிடம் ஈரோஸ் அமைப்பைக் காட்டிக் கொடுத்தும், பின்னர் மற்றுமொரு சர்வாதிகாரியான மஹிந்தவிடம் முஸ்லிம் காங்கிரஸையும் காட்டிக் கொடுத்து அந்த சர்வாதிகாரிகளிடம் தனக்குரிய வெகுமதிகளை பெற்றுக் கொண்ட பசீர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசுவதற்கான தார்மீக உரிமையற்றவர்.

இந்த தேர்தலில் முஸ்லிம் சிறுபான்மையினர் தமது செய்தியினை பெளத்த பெருந் தேசியவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்கும் அறைந்து சொல்வதற்கான வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றனர். அதனை அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . அதேநேரம் எந்தவொரு முஸ்லிம் அரசியல் புரோக்கர்களும், கைக்கூலிகளும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை அவர்களது எஜமானர்களுக்கு எந்த வடிவத்திலாவது தாரை வார்த்துக் கொடுப்பதை முறியடிக்க வேண்டும் .

இந்த தேர்தலில் ரணிலின் கட்சி வென்றாலும், மஹிந்தவின் கட்சி வென்றாலும் ஆளப்போவது பெளத்த பெருந் தேசியவாத சிந்தனை கொண்ட ஓருவரே. இதன் மூலம் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, உரிமைகளை ஓருபோதும் உறுதிப்படுத்தி விட முடியாது என்பதை மாறி மாறி வந்த இரு கட்சிகளினதும் ஆட்சிகளில் கண்டு கொண்டோம்.

எனவே, இந்த இரு பெருந்தேசியவாதிகளுக்கும் சந்தர்ப்பத்தினை வழங்காத வகையில் முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை புத்தி சாதுரியமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . அதேநேரம் முஸ்லிம் வேட்பாளர் போர்வையால் தமது கோர முகங்களை மறைத்துக் கொண்டு தமது எஜமானர்களுக்காக சேவகம் செய்ய களமிறக்கப்பட்டிருக்கும் புல்லுருவிகளையும் இனங்கண்டு அவர்களையும் முறியடிக்க வேண்டும் .

Web Design by Srilanka Muslims Web Team