சமகால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட, குறுகிய கால திட்டத்தின் பெறுபேறு - யாழ் சர்வதேச விமான நிலையம் » Sri Lanka Muslim

சமகால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட, குறுகிய கால திட்டத்தின் பெறுபேறு – யாழ் சர்வதேச விமான நிலையம்

IMG_20191018_102835

Contributors
author image

Editorial Team

யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக யுத்தத்திற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வந்ததாக  பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தி திட்டம் சமகால அரசாங்கத்தின் கீழ் குறுகிய காலத்திற்குள் விரைவாக மேற்கொள்ளப்பட்டதினால் இன்று யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச விமான நிலையத்தை அமைத்துக் கொடுக்க முடிந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

வட மாகாணத்திற்கான அபிவிருத்திற்கான பணியில் முதற்கட்டமே இது. இதனைத்தொடர்ந்து இந்த விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதன் பின்னர் இந்தியாவைப்போன்று மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க குறிப்பட்டார்.

இலங்கை சிவில் விமான சேவை வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை பதிவு செய்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் காலை (17) திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த தீர்மானித்தோம். அதற்கான பணிகள் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. இடையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. ஆனால் நாம் இதற்கான திட்டத்தை கைவிடவில்லை. விமான நிலைய பணிகள் இடம்பெறுமா? என்றும் சிலர் அப்பொழுது பிரசாரம் செய்தனர் என்று குறிப்பிட்ட பிரதமர் 6 மாத காலத்திற்குள் வெற்றிகரமாக இச் செயற்திட்டத்தை நிறைவு செய்துள்ளோம். இது முதற்கட்டமே. இதனூடாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், விமான சேவையை மேற்கொள்வதே எமது நோக்கம். இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விமான சேவையை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

விமான நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முழுமையான பலன்களை வடக்கு மக்கள் இன்னும் 3 வருடங்களில் அனுபவிக்க முடியும்.

இதனை வடக்கு மக்களின் பொருளாதாரப் புரட்சியாக கருதமுடியும். அத்துடன், வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது வாய்ப்பாக அமைவதுடன், அதனூடான பொருளாதாரமம் அபிவிருத்தியடையும். அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையங்களை நிறுவுவதே எமது எதிர்பார்ப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இதன் மூலம் வழிவகுக்கப்படும். யாழில் ஹோட்டல் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கும், சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சி நிலையம் நிறுவுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் துறைசார்ந்தவர்களுடன் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், சிறந்த திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

காங்கேசன்துறை துறைமுகமும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் நாம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பித்தோம். முதற்கட்டமாக படையினர் வசமிருந்த காணிகளை மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்று தெரிவித்த பிரதமர் இந்திய அரசாங்கம், எமக்குத் தொடர்ச்சியான உதவிகளைச் செய்து வருகின்றது. நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும், இந்தியா தொடர்ச்சியான உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது. இரு நாடுகளினது பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவோம் என்றும் பிரதமர் கூறினார்.

அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தயா லங்காபுர

Web Design by The Design Lanka