போட்ஸ்வானா தேர்தல்: ஏன் யானைகள் மற்றும் வைரங்களால் முடிவு செய்யப்படுகிறது? - Sri Lanka Muslim

போட்ஸ்வானா தேர்தல்: ஏன் யானைகள் மற்றும் வைரங்களால் முடிவு செய்யப்படுகிறது?

Contributors
author image

BBC

போட்ஸ்வானா நாட்டில் அக்டோபர் 23 ஆம் தேதி பொதுத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. தலைநகர் கோபோரோனேவில் பிபிசி உலக கேள்விகள் விவாதம் நடைபெற்றபோது, இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை முடிவு செய்வதில் வைரங்களும் யானைகளும் முக்கிய பங்காற்றலாம் என்று தெரிய வந்தது.

போட்ஸ்வானா ஆளும் ஜனநாயகக் கட்சி அந்த நாடு 1966ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மூன்று எதிர்க்கட்சிகள் ஜனநாயக மாற்றத்துக்கான குடையமைப்பு (யு.டி.சி.) என்ற பெயரில் ஒன்று சேர்ந்துள்ளன.

ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப் போவதாக அந்தக் கட்சிகள் கவனத்துடன் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளன. 20 சதவீதத்துக்கும் மேலானவர்கள் வேலை வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கும் நாட்டில், “உள்ளே வரக் கூடியவர்கள்” பற்றி கவலை கொண்டிருப்பவர்கள் உள்ள நாட்டில், இது கவர்ச்சிகரமான அறிவிப்பாக உள்ளது.

“குடிமக்களை தவிர்த்துவிட்ட பொருளாதாரம் பற்றியதாக இது உள்ளது” என்று பிபிசி விவாதத்தில் பங்கேற்ற யு.டி.சி. துணைத் தலைவர் டுமெலாங் சலேஷன்டோ கூறினார்.

Image captionடுமெலாங் சலேஷன்டோ போட்ஸ்வானாவில் உள்ள பலர் வைரங்களை பார்த்திருக்க மாட்டனர் என்கிறார்

“கட்டுமானத் துறையை எடுத்துக் கொண்டால், அது சீனா ஆதிக்கம் செலுத்தும் துறையாக உள்ளது. சில்லரை வணிகத்தைப் பார்த்தால், ஆசியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அமைப்புசாரா துறையைத் தவிர, வேறு எந்தத் துறையும் போட்ஸ்வானா ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இல்லை” என்கிறார் அவர்.

வைரங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நாடு

ஆப்பிரிக்காவின் வெற்றிக் கதையாக போட்ஸ்வானா பற்றிக் கூறுவார்கள் – பக்கத்து நாடுகளில் நடந்ததைப் போல ரத்தம் எதுவும் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற நாடாக அது உள்ளது. உள்நாட்டுப் போர் எதுவும் நடந்தது கிடையாது, தேர்தல்கள் வழக்கமாக வன்முறை இல்லாமல் நடைபெறும்.

போட்ஸ்வானாவின் செல்வத்தில் ஒரு பகுதி அதன் வைரங்களாக உள்ளன. ஒட்டுமொத்த அளவில் அதிக வைர உற்பத்தி ரஷ்யாவில் நடைபெறுகிறது என்றாலும், தெற்கு ஆப்பிரிக்க மாகாணத்தில் உள்ள நான்கு சுரங்கங்கள், உலகில் உயர் தரத்திலான வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடங்களாக உள்ளன. வைர விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் டி பீயர்ஸ் நிறுவனம் “உலகின் முன்னணி வைர நிறுவனமாக” கூறிக் கொள்ளும் நிலையில், இந்தத் துறையில் 50க்கு 50 என்ற அளவில் போட்ஸ்வானா பங்கு வகுக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த வியாபாரத்தில் அரசுக்கு 3.5 பில்லியன் டாலர் (2.7 பில்லியன் பவுண்ட்கள்) வருமானம் கிடைத்தது. நாட்டின் பொருளாதாரத்தில் அது 40 சதவீதமாகும்.

சாலைகள் அமைக்க, பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவதற்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் 50 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்துக்குப் பிறகு, தங்களுடைய அதிர்ஷ்டத்தின் மூலம் தங்களுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு ஊழல்கள் பற்றிய வதந்திகள் எழுந்ததால், உறவு குறித்த சந்தேகம் அதிகரித்துள்ளது.

டி பியர்ஸ் நிறுவனத்துடனான பங்குதாரர் உரிமம் 2020 வரையில் புதுப்பிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இன்னும் நல்ல பேரத்தை உருவாக்கியிருக்க வாய்ப்பு இருந்தது என்பது பிபிசி விவாதத்தில் எழுப்பப்பட்ட முதலாவது கேள்வியாக இருந்தது.

பேச்சுவார்த்தைகளில் அரசின் அணுகுமுறையை போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் டோர்க்கஸ் மேக்கட்டோ நியாயப்படுத்தினார்.

“நமக்கான வைரங்கள் தான் நம்முடைய எதிர்காலம். உலகில் அதிக வைரம் உற்பத்தி செய்வது நாம் தான். எனவே அதை மரியாதையுடன் அணுகி, அதற்கான அன்பைக் காட்டாமல் போனால், அது தற்கொலைக்குச் சமமானதாக ஆகிவிடும்.”

ஆனால் பேச்சுவார்த்தைகள் ரகசியமானதாக உள்ளதால், அரசு தன் நிலையை வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார்.

ஆனால் சலேஷன்டோ இதை நிராகரிக்கிறார்.

“இங்குள்ள 95 சதவீத மக்கள் ஒருபோதும் வைரத்தைப் பார்த்தது கிடையாது. போட்ஸ்வானா வைரங்களைக் கொண்டு வெளிநாடுகளில், நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பது தான் உண்மை. ஆனால் நாம் தோண்டி எடுப்பவர்களாக மட்டுமே இருக்கிறோம் – நாம் வெறுமனே துளைகளைத் தோண்டுகிறோம்.”

இருந்தபோதிலும் வைரம் அதிகமாகக் கிடைப்பதால், உலகில் வருவாய் ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது. அது ஏன் என்று இப்போது அந்த மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தேர்தல் ஒரு கண்ணோட்டம்

•பி.டி.பி. – சுதந்திரம் பெற்றதில் இருந்து, மோக்கிவீட்சி மாசிசி தலைமையில் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ளது.

•யு.டி.சி. – டுமா போக்கோ தலைமையில் 2012ல் உருவாக்கப்பட்ட கூட்டணி

•பி.பி.எப் – முன்னாள் அதிபர் இயான் காமா -வால் தொடங்கப்பட்டு, பிக்கி புட்டாலே தலைமையில் இயங்கி வருகிறது.

•வாக்காளர்கள் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 490 உள்ளூர் அரசுப் பிரதிநிதிகளையும் தேர்வு செய்கின்றனர்.

•நாடாளுமன்றத்தின் மூலம் ஐந்தாண்டு காலத்துக்கு அதிபர் தேர்வு செய்யப்படுகிறார்.

•நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவர் வழக்கமாக அதிபராகிறார்.

அறைக்குள் யானை

யானைகள் தேர்தல் பிரச்சினையாக இருக்கும் ஒரே நாடாக போட்ஸ்வானா தான் இருக்க முடியும்.

ஆப்பிரிக்காவில் பெரும்பகுதி வனங்களும், குறைந்த மக்கள் தொகையும் கொண்ட நாடாக இருப்பதால் மனிதர்கள் – விலங்குகள் மோதல் என்பது தினசரி கவலையாக உள்ளது. முந்தைய அதிபர் இயான் காமா ஆட்சியின் கீழ், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் வழிகாட்டியாக போட்ஸ்வானா மாறியுள்ளது.

தந்தங்களுக்காக யானைகளைக் கொல்வதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுத்தது, வேட்டையாடுதலுக்குத் தடை விதித்தது மற்றும் ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய யானைகள் சரணாலயமாக நாட்டை மாற்றியது ஆகியவற்றுக்காக உலகம் முழுக்க அவருடைய அரசு பாராட்டுதல்களைப் பெற்றது.

யானைகள் புத்திசாலித்தனம் மிக்கவை. வாழ்க்கைக்கு நல்ல சூழல் இருப்பதால் அவை போட்ஸ்வானாவுக்கு சென்றிருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு விலை தர வேண்டியிருந்தது.

நாட்டில் 140,000 யானைகள் உள்ள நிலையில், சுற்றுச்சூழல் பகுதிக்கு மிஞ்சியதாக யானைகள் கூட்டம் உருவாகிவிட்டது.

மக்கள் யானைகளால் மிதிபட்டு சாகிறார்கள், பயிர்கள் நாசம் செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் என்ன செய்வது என்பதில் அரசுக்கு எதிர்ப்புகள் உள்ளன.

யானைகளின் எதிர்காலம் குறித்து மே மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் மூன்று ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கு, யானையின் காலால் தயாரிக்கப்பட்ட ஸ்டூல்களை அதிபர் மோக்கிவீட்சி மாசிசி பரிசாக அளித்தார்.

தனக்கு முன்பு இருந்தவரைக் காட்டிலும் சர்வதேச சமுதாயம் என்ன நினைக்கிறது என்பதில் அதிபர் மோக்கிவீட்சி மாசிசி குறைந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார்.

போட்ஸ்வானா யானைகளை பிரிட்டிஷ் அதிகம் விரும்புவதாக இருந்தால், அவற்றுடன் வாழ முயற்சிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இன்னும் செல்வாக்கு கொண்டுள்ள முந்தைய அதிபரின் நிலைப்பாட்டை மாற்றியுள்ள புதிய அதிபர், பரிசுக்காக வேட்டையாடுதல் மீதிருந்த தடையை நீக்கியுள்ளார். இது சில சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ஆனால் கோபோரோனே நகரில் சாலையில் இதுபற்றி மக்களிடம் பிபிசி கேட்டபோது, இது மிகுந்த வரவேற்பைப் பெற்ற முடிவாகக் கருதப்படுவது தெரிந்தது.

“யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையில் மோதல்கள் நடைபெறுகின்றன, யானைகள் மனிதர்களைக் கொல்கின்றன. எனவே யானைகளைக் கொல்வது நல்ல சிந்தனை என்று நினைக்கிறேன்” என்று ஆல்பர்ட் லெபாலா கூறினார்.

கியோரபெட்ஸோ மெப்போலோகாங் இதை ஒப்புக்கொள்கிறார்: “பயிர்களுக்கு அவை பெரும் சேதம் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உழவு சமயத்தில் சேதம் ஏற்படுத்துகின்றன” என்றார் அவர்.

இளம் பெண்மணி ஒருவரும் அதிபரின் கருத்தை வரவேற்றார்: “வேட்டையாடுவதற்கான தடையை நீக்கிய எங்கள் நாட்டு முடிவு பற்றி மற்ற நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதாக இருந்தால், அவர்கள் முதலில் எங்கள் நாட்டுக்கு வந்து யானைகளால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஆப்பிரிக்காவில் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடாக போட்ஸ்வானா உள்ளது. அவற்றை வேட்டையாடுவதற்கான தடையை மே மாதம் சர்ச்சைக்குரிய வகையில் அரசு நீக்கியது. அந்த முடிவு பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?.

அதிபர் மசிசி மற்றும் காமா ஆகியோருக்கு இடையில் முக்கிய வேறுபாடு ஏற்படுவதற்கு யானைகள் பிரச்சினை தான் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.

நாட்டை உருவாக்கியவரின் மகனாகவும், போட்ஸ்வானா மக்களிடம் முக்கியமான கலாசார மதிப்பு பெற்றவராகவும் காமா இருக்கிறார். ஒரு காலத்தில் அவர் உருவாக்கிய போட்ஸ்வானா தேசபக்தி முன்னணி (பி.பி.எப்.) கட்சியில் இருந்து வெளியே வந்தது பெரிய செய்தியாக இருந்தது.

அவருடைய சகோதரர் ட்ஷெக்கெடி காமா, மசிசி அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்துவிட்டு, பிடிபிக்கு எதிராக களமிறங்க தனது சகோதரருடன் கை கோர்த்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எதிரணியில் உள்ள யுடிசியில் அவர்கள் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் அவர்களுடன் இணைந்து பணியாற்றி, அவர்கள் ஆட்சிக்கு வர உதவுவதாகக் கூறியுள்ளனர்.

போட்ஸ்வானாவில் வாக்குப் பதிவு நடக்காத நிலையிலும், அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பைவிட அதிக வாய்ப்பு உள்ளதாகக் கருத்தாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பிடிபி என்பது வாக்குகளைப் பெறும் அடையாள சக்தியாக உள்ளது, இதுவரை தோற்றதே கிடையாது.

Image captionஅதிபர் இசிசி “அதிகாரத்தின் மீது பைத்தியமாக இருக்கிறார்” என்று இயன் காமா ஒரு முறை பிபிசியிடம் கூறியுள்ளார்.

மக்கள் கிழக்கில் உள்ள ஜிம்பாப்வேயை பார்க்கிறார்கள். பல அருகாமை நாடுகளில் ஏற்பட்டதைப் போல தங்கள் நாட்டில் கலவரங்கள் ஏற்பட்டதில்லை என்பதை அறிந்துள்ளனர்.

பிடிபி மீதான நம்பிக்கைக்கும், நீண்ட காலம் பதவியில் இருப்பதன் மூலம் ஏற்பட்டுள்ள தேக்கம் மற்றும் வீணாக்கிய நிலையில் இருந்து விடுதலை பெறுவதற்கும் இடையிலான மனப் போராட்டத்தில் மக்கள் இருப்பதாகத் தெரிகிறது.

“பிடிபி ஒரு நல்ல கட்சி, ஆனால் பாதுகாப்பான வரம்புக்குள் அது இருக்கிறது. அங்கே எதுவும் நடக்கவில்லை” என்று சிறு தொழிலதிபர் மான்னி கூறினார்.

“எங்களுக்கு மாற்றம் தேவை – மோசமான பின்விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சம் இருந்தாலும் அது தேவை” என்று அவர் எச்சரிக்கையுடன் தெரிவித்தார்.

முதிர்ச்சி பெறுவதற்கு, ஜனநாயகத்துக்கு ஒரு புதிய கட்சியின் அதிகாரம் தேவைப்படுகிறது என்று மக்களை சம்மதிக்க வைப்பதில் தான் தங்கள் வெற்றி உள்ளது என்று யுடிசி நம்புகிறது. ஆனால், வேறு எந்தக் கட்சியும் அதிகாரத்தில் இருந்ததைப் பார்த்த முந்தைய அனுபவம் இல்லாததால், எந்த ஒரு மாற்றமும் பெரிய தவறுதலாக அமைந்துவிடுமோ என்ற கவலையும் காணப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team