ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு: » Sri Lanka Muslim

ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு:

IMG_20191206_100007

Contributors
author image

Editorial Team

அனைத்து அரச ஊழியர்களினதும் சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் குறைந்தபட்சம் 3000 ரூபா முதல் அதிகபட்சம் 24,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட சம்பள ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சம்பள அதிகரிப்பிற்கு அமைய, பல்வேறு தரங்களின் கீழ் அரச சேவையாளர்களாக பணியாற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுமெனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேடமாக ரயில்வே மற்றும் தபால் திணைக்கள ஊழியர்களுக்கு சம்பளப் பிரச்சினை காணப்படுமாயின் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தீர்வு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், ரயில்வே தொழில்நுட்ப பிரிவிற்குட்பட்ட நடவடிக்கை பிரிவு, கண்காணிப்பு முகாமைத்துவ பிரிவிற்குட்பட்டவர்களுக்கு TL திட்டத்தின் கீழ் சம்பளம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, இவர்களின் அடிப்படை சம்பளம் 36,095 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயில் எஞ்சின் சாரதி உதவியாளர்களுக்கு MT -01 சம்பள திட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளமாக 34,415 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய சம்பள திருத்தத்திற்கு அமைய, 2015 ஆம் ஆண்டு 11,730 ரூபா அடிப்படை சம்பளம் பெற்ற அரச சாதாரண தர சேவையாளர்களின் அடிப்படை சம்பளம் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 24,250 ரூபாவாக உயர்வடையவுள்ளது.

எனினும், சம்பளத் தீர்விற்கான ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய, மேலும் 3000 ரூபா அதிகரிப்புடன் அடிப்படை சம்பளம் 27,250 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்புடன் நாடளாவிய ரீதியிலுள்ள 11 இலட்சம் அரச சேவையாளர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Web Design by The Design Lanka