ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சீ » Sri Lanka Muslim

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்: சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சீ

IMG_20191212_100424

Contributors
author image

BBC

நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மாரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சீ ஆஜரானார்.

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமையன்று தமது நிலையை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் பிரதிநிதியாக ஆங் சான் சூச்சீ ஆஜாராவது முக்கியமானதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா மக்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் வன்முறை குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவது இதுவே முதல் முறை.

புத்த மதத்தை அதிகம் பின்பற்றும் நாடான மியான்மர், ரோஹிஞ்சா மக்கள் மீது தொடுத்த நடவடிக்கை, பயங்கரவாதத்தை தடுக்க அவசியமான ஒன்று என்று கூறியது.

கடந்த மாதம் முஸ்லிம்கள் அதிகம் கொண்ட நாடான காம்பியா, சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.

என்ன நடந்தது?

ரோஹிஞ்சா மக்களை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக காம்பியா, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவு செய்தது.

ரோஹிஞ்சாபடத்தின் காப்புரிமைREUTERS

நவம்பர் 11ஆம் தேதி இது தொடர்பாக நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில், “நம் கண் முன்னே ஓர் இனப்படுகொலை நடந்த போது நாம் அமைதி காத்தது நம் தலைமுறைக்கே தலை குனிவான விஷயம்,” என்று கூறினார் காம்பியாவின் நீதித்துறை அமைச்சரும் அட்டர்னி ஜெனரலுமான அபுபக்கர் எம் டம்பாடோ.

இந்த வழக்கில் மியான்மர் சார்பாக தாமே ஆஜராக இருப்பதாக மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சீ தெரிவித்திருந்தார்.

நாட்டின் நலனுக்காக ஆங் சான் சூச்சீ தலைமையிலான வழக்கறிஞர் குழு சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதென ஆங் சான் சூச்சீயின் அலுவலகம் நவம்பர் 20ஆம் தேதி தெரிவித்தது.

மியான்மர் அரசாங்கமும், ராணுவமும் இணைந்து இந்த வழக்கை சந்திக்க தயாராகி வருகின்றன.

இந்த விஷயம் தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் மின் ஆங் ஹலைங்குடன் ஆங் சான் சூச்சீ ஆலோசிக்கவுள்ளார். ஆனால் அவருடன் சூச்சீக்கு சுமூக உறவு இருந்ததில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தி இர்ராவடி செய்தி வலைதளத்தின் ஆசிரியர் ஆங் சா, “இந்த துறையில் ஆங் சான் சூச்சீக்கு அனுபவம் இல்லாததால் அவருக்கு சட்ட நிபுணர்களின் உதவி தேவை,” என தெரிவித்துள்ளார்.

இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரோஹிஞ்சா விடுதலைப்படையை சேர்ந்த தீவிரவாதிகள் ரகைனில் காவல்நிலையத்தை தாக்கி பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கொன்றனர்.

இதற்கு பதிலடியாக மியான்மர் ராணுவம் எடுத்த நடவடிக்கை காரணமாக ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.

ஆனால் இது இன சுத்திகரிப்பு என ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ரோஹிஞ்சா (கோப்புப்படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஐ.நா. இதை இனப்படுகொலை என தெரிவித்தது.

ஐநாவின் உண்மை கண்டறியும் அறிக்கையில், ரோஹிஞ்சா மக்களுக்கு கிடைக்கவிருந்த உதவியையும் ராணுவம் தடுத்ததாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை மியான்மர் மறுத்திருந்தது.

ரோஹிஞ்சா மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மியான்மர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என 2018ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டத்தில் மியான்மர் கையெழுத்திடவில்லை என்பதால் விசாரணைக்கு அந்நாடு ஒத்துழைக்கவில்லை.

இருப்பினும் 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தத்தில் காம்பியாவும், மியான்மரும் அங்கமாக இருப்பதால் சர்வதேச நீதிமன்றத்தில் முதல்முறையாக ரோஹிஞ்சாக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மியான்மர் மீதான விசாரணை தொடங்குகிறது.

மியான்மரில் பலதரப்பட்ட கருத்துகள்

ரோஹிஞ்சாபடத்தின் காப்புரிமைAFP

டிசம்பர் ஒன்றாம் தேதியன்று சுமார் 700 பேர் யாங்கூனில் சூக்கீக்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொண்டனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துகளும் பேசப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

தனது பிம்பத்தை சரி செய்ய மியான்மர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் அதன் பிற நாடுகளுடனான உறவுகளும் பாதிக்கப்படலாம்.

“தங்களது விளக்கத்தை பிற நாடுகளுக்கு அளிப்பதற்கான ஒரு வாய்ப்பாக மியான்மர் இதனை கருதும். ஆனால் அவர்கள் இதற்காக வருந்துகிறார்களா அல்லது நடவடிக்கை ஏதேனும் எடுத்துள்ளனரா என்பதை பொருத்தும் விசாரிக்கப்படுவர். பேச்சு மட்டுமே போதுமானது இல்லை,” என தாய்லாந்து செய்தித்தாள் ஒன்றில் ஆய்வாளர் லாரி ஜகன் என்பவர் எழுதியுள்ளார்.

இன்று நடைபெறும் விசாரணை முதல் கட்டம்தான். சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை முடிய 10 ஆண்டுகள் ஆகலாம்.

Web Design by The Design Lanka