அம்பாறை மாவட்டத்தில் சிங்கள தேசியத்தை நிறுவ பேரினவாத சக்திகள் பகீரத முனைப்பு - Sri Lanka Muslim

அம்பாறை மாவட்டத்தில் சிங்கள தேசியத்தை நிறுவ பேரினவாத சக்திகள் பகீரத முனைப்பு

Contributors
author image

S.Ashraff Khan

நேர்காணல் – எஸ்.அஷ்ரப்கான், ரீ.தர்மேந்திரா.


கிழக்கு மாகாணத்தில் உள்ள நில தொடர்பு உடைய முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து, அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி முஸ்லிம் தேசியத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டி உள்ளது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி எமக்கு
வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

இவருடனான நேர்காணல் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் அடிக்கடி பேசி வருகின்ற முஸ்லிம் தேசியம் என்கிற வார்த்தைக்குள் ஒரு பிரதேசவாதம் குடி கொண்டு இருப்பது போல தெரிகின்றதே?

பதில்:- தமிழர்கள் தமிழ் தேசியத்தையும், சிங்களவர்கள் சிங்கள தேசியத்தையும் வெகுசிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் முஸ்லிம் தேசியத்துக்கு மிக பெரிய அநியாயங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் முஸ்லிம்கள் யாரும் இது பற்றி அக்கறைப்படுவதாக இல்லை. ஆகவேதான் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முஸ்லிம் தேசியத்தை உருவாக்கி வளர்த்தெடுப்பதற்காக போராடுகின்றது. எனவே முஸ்லிம் தேசியம் பற்றிய பிரக்ஞை இனவாதம் ஆகாது.

அதே போல இலங்கையில் முஸ்லிம் மக்களின் பலம் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பலம் அம்பாறை மாவட்டத்தில் உள்ளது. ஆகவேதான் கிழக்கு மாகாணத்தில் உள்ள நில தொடர்பு உள்ள முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து, அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி முஸ்லிம் தேசியத்தை உருவாக்கி வளர்க்க வேண்டி உள்ளது. எனவே இதில் பிரதேசவாதம் என்று கூறுவதற்கும் எதுவும் கிடையாது. ஒரு சிலர் பிரதேசவாதம் என்று கூறி முஸ்லிம் தேசியத்தை முளையிலேயே கிள்ளி எறிய முயற்சிக்கின்றார்கள் என்பதையும் யாம் அறிவோம்.

கேள்வி:- முஸ்லிம் தேசியத்துக்கு அநியாயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருப்பதாக நீங்கள் கூறுவதன் இரகசியம் என்ன?

பதில்:- இதில் எந்தவொரு இரகசியமும் கிடையாது. எல்லை நிர்ணயம் போன்றவைகள் நடக்கின்றபோதெல்லாம் முஸ்லிம்களின் இருப்பு இலக்கு வைக்கப்பட்டு முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிப்பு செய்யப்படுவது முஸ்லிம்களின் பலமான அம்பாறை மாவட்டத்தில் மிக நுட்பமான முறையில் தொடர்ந்தேச்சையாக நடத்தப்பட்டு வருகின்றது. 1921 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் 04 சதவீதம்தான் சிங்களவர்கள் காணப்பட்டனர். ஆனால் தமிழ், முஸ்லிம் மக்களை கிழக்கில் பெரும்பான்மையாக இருக்க விட கூடாது என்கிற பேரினவாத சிந்தனையுடன் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு இன்று அம்பாறை மாவட்டத்தில் சிங்கள தேசியத்தை நிலைநாட்டுகின்ற அளவுக்கு மிடுக்கு அடைந்து காணப்படுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்கள தேசியத்தை நிறுவுகின்ற பேரினவாத வேலை திட்டத்தின் பிரதிபலிப்புகளை கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணயத்தில் அப்பட்டமாக கண்டு கொள்ள முடிகின்றது. தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை உடைத்து சிங்கள பிரதேசங்களுக்குள் உட்புகுத்தி உள்ளனர். அதாவது புதிய தொகுதிகளை உருவாக்குதல் என்கிற போர்வையில் சிங்கள பிரதேசங்களில் மூன்று தொகுதிகளையும், தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களில் நான்கு தொகுதிகளையும் உருவாக்கி உள்ளனர். தெய்யத்தகண்டிய, உஹன, அம்பாறை என்று மூன்று சிங்கள தொகுதிகளும், சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் என்று நான்கு தமிழ் பேசும் தொகுதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளன.

20 கிராம சேவையாளர் பிரிவுகளை கொண்ட நாவிதன்வெளி பிரதேசம் உஹனவுடன் முழுமையாக சேர்க்கப்பட்டு உள்ளது. பொத்துவிலுக்கு உள்ளே இருந்த லகுகல பிரதேசத்தின் 06 கிராம சேவையாளர் பிரிவுகள் அம்பாறையுடன் சேர்க்கப்பட்டு உள்ளன. சம்மாந்துறையின் இரு கிராம சேவையாளர் பிரிவுகள் அட்டாளைச்சேனைக்கு கொடுக்கப்பட்டு உள்ளன. இவ்விதமாக முஸ்லிம்களின் பெரிய பிரதேசங்களின் எல்லைகள் மாற்றப்பட்டு இதன் மூலமாக சிங்கள பிரதேசங்களுக்கு அதிகாரங்களை கொடுக்கின்ற சதி நடத்தப்பட்டு உள்ளது. அதே போல தீகவாவி பிரதேசம், மாணிக்கமடு பிரதேசம், சம்மாந்துறை பிரதேசம் போன்றவற்றை இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் புதிய சிங்கள தொகுதி ஒன்றை உருவாக்க இப்போதே திட்டமிட்டு உள்ளனர் என்றும் விளங்குகின்றது. எல்லை நிர்ணயம் என்கிற பெயரில் 737 சதுர கிலோ மீற்றர் பாரம்பரிய நிலத்தை கபளீகரம் செய்து உள்ளனர் என்பதன் தார்ப்பரியத்தை நாம் உள்ளபடி புரிந்து விழிப்படைந்து செயற்பட வேண்டி உள்ளது.

இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டி உள்ளது. காரைதீவை சம்மாந்துறையுடன் சேர்த்ததன் மூலம் காரைதீவு மக்களுக்கு அவர்களுடைய பிரதிநிதியை தெரிவு செய்வதற்கான உரிமையிலும், வாய்ப்பிலும் தொய்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. காரைதீவு, நிந்தவூர் ஆகியவற்றை சம்மாந்துறையுடன் சேர்ப்பதற்கு எந்தவொரு அவசியமும் கிடையாது.

பழைய தேர்தல் முறைமையில் குறைபாடுகள் இருந்து வந்துள்ளன. அவை நிச்சயம் களையப்படத்தான் வேண்டும். ஆனால் அதற்கு பதிலான புதிய கலப்பு தேர்தல் முறைமை குறிப்பாக இதற்கான எல்லை நிர்ணயம் தமிழ் பேசும் மக்களின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு ஆகியவற்றை பறிக்கின்ற அம்சங்களை கொண்டு நிற்கின்றது. எனவே ஐக்கிய சமாதான கூட்டமைப்பை பொறுத்த வரையில் எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்? என்பது ஒரு விடயம் அல்ல. மாறாக எந்த விதத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் தமிழ் பேசும் மக்களின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு ஆகியன உறுதிப்படுத்த வேண்டும். ஆகவே புதிய கலப்பு முறையில் இருக்கின்ற அநியாயங்கள் சரி செய்யப்படுகின்ற பட்சத்தில் அம்முறையில் தேர்தல் நடத்தப்படுவதை நாம் ஆட்சேபிக்கவில்லை.

கேள்வி:- புதிய கலப்பு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கை உயர்த்திய முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் முஸ்லிம் மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரிய குண்டு ஒன்றை வீசி இருக்கின்றீர்களே?

பதில்:- அக்கரைப்பற்றில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தவத்தை சந்தித்தேன். அவர் ஒரு பட்டதாரி. தேடல் உள்ளவர். உண்மையை கண்டறிகின்ற பக்குவம் கொண்டவர். ஒலுவில் பிரகடனம் என்கிற பாரிய பிரகடனத்தை மேற்கொண்டவர். ஒலுவில் பிரகடனத்தை பற்றிய அமெரிக்காவின் அவதானம், அக்கறை ஆகியவற்றை விக்கிலீக்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. நீங்கள் இப்போது கேட்டதை போலவே நான் மிக கனதியான ஒரு அறிக்கையை விட்டிருப்பதாக தவம் எனக்கு சொன்னார்.

ஏன் அது கனதியான அறிக்கைக்கு உரிய விடயம் இல்லையா? என்று பதிலுக்கு நான் வினவினேன். அதற்கு அவர் புதிய கலப்பு முறைக்கு ஆதரவாக முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கை உயர்த்தியது ஒரு பெருந்துயரம் என்று அவ்வாறு கை உயர்த்தி இருந்த கட்சியில் இருந்து கொண்டு அவர் இதய சுத்தியோடு தெரிவித்தார். இலங்கை முஸ்லிம் மக்களின் பெருந்துயரம் ரவூப் ஹக்கீம் என்பதையும் அவர்
உள்ளபடி உணர்ந்து பிழையான பாதையில் இருந்து விடுபட்டு சரியான பாதையில் நம்மோடு வந்து இணைவார் என்று விசுவாசிக்கின்றார். அதற்கான அழைப்பை அக்கூட்டத்தில் அவருக்கு நான் பூடகமாக விடுத்தேன்.

கேள்வி:- காரைதீவு முச்சந்தியில் அமைந்து உள்ள காணி தொடர்பிலான பிணக்குக்கு நீதிமன்றம் மூலமாக தீர்வு காண முயற்சிக்கின்றனரே?

பதில்:- இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டுமே ஒழிய இதற்காக நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்துவது சுமூகமான தீர்வுகளை ஒருபோதும் பெற்று தரவே மாட்டாது. காரைதீவு முச்சந்தியில் அமைந்து உள்ள காணி உரிமை தொடர்பான பிணக்குக்கு அமைதியான முறையில் சுமூகமான தீர்வை அடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும். இதற்காக நானும், மாவை சேனாதிராசாவும் பல தடவைகள் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்தோம். அவை நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில் அமைய பெற்று இருந்தன. அதே போல காரைதீவை சேர்ந்த பிரமுகர்கள் பலரையும் சந்தித்து பல சுற்று பேச்சுகள் நடத்தி இருந்தேன்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் இனங்களை சிறுபான்மைகளாக மாற்றுகின்ற வேலை திட்டத்தை மிக நுட்பமான முறையில் திட்டமிட்ட வகையில் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு இடையில் நீயா? நானா? என்கிற போட்டி மன பான்மையில் தமிழ் பேசும் இனங்கள் பிரிந்து பிளவுபட்டு நிற்கின்றன. தமிழ் பேசும் இனங்களுக்கு இடையில் உண்மையான, தூய்மையான, இதய சுத்தியுடன் கூடிய நல்லிணக்கம், ஐக்கியம், சமாதானம் ஆகியன எப்போதும் நின்று நிலவுகின்ற பட்சத்தில் மாத்திரமே பெரும்பான்மை சமூகத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து நாம் ஓரளவுக்கேனும் தப்பி பிழைக்க முடியும். இதற்கு இரு இனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு, சகிப்பு தன்மை, விட்டு கொடுப்பு ஆகியன அத்தியாவசியமானவையாக உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இரு இனங்களுக்கும் இடையில் ஆங்காங்கு உள்ளன. இவற்றுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே சுமூக தீர்வை பெற்று கொள்ள முடியும் எனது அசைக்க முடியாத நம்பிக்கையும், விசுவாசமும் ஆகும். ஆனால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதற்காக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற அறிவீனம் வேறெதுவும் இருக்க மாட்டாது.

கேள்வி:- கடந்த உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பால் சாதிக்க முடிந்ததா?

பதில்:- எமது மக்களுக்கு மத்தியில் மிக குறுகிய கால இடைவெளிக்குள் சென்ற எமக்கு அமோக ஆதரவு கிடைத்தது என்பதில் எந்தவொரு மாறுதலுமே இல்லை. நாம் கூட்டாகவும், தனியாகவும் போட்டியிட்டு இருக்கின்றோம். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிட்ட சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை மகத்தான பாரிய வெற்றிகளுக்கு இட்டு சென்றிருக்கின்றோம். கொழும்பு மாநகர சபைக்கு தனித்து போட்டியிட்டு வென்று இரு உறுப்பினர்களை பெற்று உள்ளோம். ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் ஆகியோருக்கும் இம்மாநகர சபையில் இரு உறுப்பினர்களே உள்ளனர். மட்டும் அல்லாமல் இம்மாநகர சபையின் எதிர் கட்சி தலைவரை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் நாமே இருக்கின்றோம் என்பதையும் பெருமிதத்துடன் சொல்லி கொள்கின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team