கடத்தல், சித்திரவதை, மிரட்டல்" - துபாய் ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டுகள் - Sri Lanka Muslim

கடத்தல், சித்திரவதை, மிரட்டல்” – துபாய் ஆட்சியாளர் மீதான குற்றச்சாட்டுகள்

Contributors
author image

BBC

துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத் மீது அவரது மனைவி பிரிட்டன் நீதிமன்றத்தில் முன்வைத்த, “கடத்தல், திரும்பி வருமாறு கட்டாயப்படுத்துதல், சித்திரவதை மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தல்” முதலிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) துபாயின் கோடீஸ்வர ஆட்சியாளரான ஷேக் முகமத் பின் ரஷீத் அல்-மக்தூம் மீது அவரது முன்னாள் மனைவி இளவரசி ஹயா பின்த் அல்-ஹுசைனால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பிரிட்டனின் உயர் நீதிமன்றத்தின் தொடர் தீர்ப்புகளின் மூலம் நிறுவப்பட்ட உண்மையாக மாறியுள்ளது.

உயிருக்கு பயப்படுவதாக தனது நண்பர்களிடம் கூறிய துபாயின் இளவரசி கடந்த ஆண்டு அந்நாட்டிலிருந்து தனது இரண்டு மகள்களுடன் தப்பித்து பிரிட்டன் சென்றார். இதைத்தொடர்ந்து கடந்த எட்டு மாதங்களாக துபாயின் ஆட்சியாளருக்கு எதிராக நடந்து வந்த விசாரணையை அடுத்து பிரிட்டன் நீதிமன்றம் வெளியிட்டுள்ள உண்மை கண்டறியும் தீர்ப்பு இளவரசிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

ஷேக் முகமத் பின் ரஷீத் அல்-மக்தூம்படத்தின் காப்புரிமைAFP

இந்த தீர்ப்பை பொது வெளியில் இருந்து விலக்க ஷேக் முகமத் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதுகுறித்து அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை பொது நலன் கருதி நிராகரிப்பதாக கூறிய நீதிமன்றம், துபாயின் ஆட்சியாளர் “நீதிமன்றத்துடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்கவில்லை” என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

தீர்ப்பு விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்பட்ட பிறகு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமத், “அரசாங்கத்தின் தலைவராக, நீதிமன்றத்தின் உண்மை கண்டறியும் செயல்பாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதன் விளைவாக கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே சொலும் இந்த ‘உண்மை கண்டறியும்’ தீர்ப்பு வெளியிடப்பட்டுவிட்டது” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஒரு தனிப்பட்ட விடயம் என்று அவர் தெரிவித்துள்ளார். “ஊடகங்கள் எங்கள் குழந்தைகளின் அந்தரங்கத்தை மதிக்க வேண்டும் என்றும் இங்கிலாந்தில் அவர்களின் வாழ்க்கையில் ஊடுருவ வேண்டாம் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team