தடியைக் கொடுத்து அடிவாங்கப்போகும் முஸ்லிம் சமூக பற்றாளர்கள் - Sri Lanka Muslim

தடியைக் கொடுத்து அடிவாங்கப்போகும் முஸ்லிம் சமூக பற்றாளர்கள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

(Ahlubaith)

இலங்கையில், உலகில் சுய தனிமையே நாட்டின் பாதுகாப்பு என்ற சூழல் உருவாகி இருக்கிறது. நமது நாட்டிலும் சில ஊர்கள் தனிப்படுத்தி முத்திரையிடப்பட்டிருக்கின்றன. வெளியாரின் கருணையை, உதவியை யாசித்திருக்கும் அந்த ஊராரின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது.

தனிமைப்படுத்தப்பட்ட அத்தனை ஊர்களும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஊர்கள் என்பது விசேஷ செய்தி. அங்கு மற்றைய இனத்தவர்களும் வாழ்கிறார்கள். ஆனால், அதனை யாருமே சொல்வதில்லை.

இந்நிலையில், நமது இஸ்லாமிய அமைப்புக்கள் உலர் உணவு நிவாரண பொதிகளுடன் ஆர்ப்பாட்டமாக பரவலாக வீதியிறங்கியிருக்கிறார்கள்.

பௌத்த விகாரைகள், விகாராதிபதிகள், பெரும்பான்மை பொது மக்கள் என்று உற்சாகத்துடன் களத்தில் குதித்து உதவிக் கொண்டிருக்கிறார்கள்.

முகம் மூடாமல், கையுறை அணியாமல் அனைத்து பங்கீடுகளையும் புன்னகையுடன் செல்பி எடுத்து முகநூலில் பதிந்துக் கொண்டு திரிகிறார்கள்.

உலர் உணவு பங்கீடு செய்யும் முஸ்லிம் அமைப்புக்கள் கொரோனாவை பரப்பும் சமூகத்தவர்கள். சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என்ற நச்சு விதையை இவர்களின் செயல் உருவாக்கி விடக் கூடாது. இந்த அவப் பெயர் ஆபத்தானது. முஸ்லிம்களுக்கு ஆகாதது.

முஸ்லிம்கள் மறந்துபோன கசப்பான ஒரு கதையை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

கொழும்பில் தினமும் மூவேளை ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இலவசமாக ஒரு முஸ்லிம் தனவந்தர் உணவளித்தார். உணவகங்களின் அத்தனை செலவுகளையும் அவரது நிறுவனம் பொறுப்பேற்று இருந்தது. இந்த செய்தி யாருக்கும் தெரியாமலும் இருந்தது.

அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளும் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வேலை செய்துக் கொண்டிருந்த அனைத்து ஊழியர்களும் முறையான சுகாதார நட்சான்றிதல்களை பெற்றிருந்தார்கள்.செய்கின்ற வேலைக்கு பொருத்தமான சீருடைகளை அணிந்திருந்தார்கள். அனைவரும் தலையை முழுமையாக மறைத்திருந்தார்கள். கைகளில் கையுறை அணிந்திருந்தார்கள். வருபவர்களையும் வராதவர்களையும் தேடித் தேடி உணவளித்தார்கள்.

சென்ற வருடம் என்ன நடந்தது?

முஸ்லிம் ஒருவருக்கு உரிமையான அந்த உணவகத்தில் கருத்தடை மருந்து கலந்த உணவு வகை பகிரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. முஸ்லிம் தனவந்தர்கள் திட்டமிட்டு இந்த வேலையை செய்வதாக கூக்குரலிடப்பட்டது. ஹிரு, தெரண தொலைக்காட்சிகள் இதனை வெகுஜனப்படுத்தின.

முஸ்லிம்கள் திடுக்குற்று போனார்கள்.

வெற்றிகரமான அந்த முஸ்லிம் வியாபாரி, வியாபாரத்தனமான முடிவெடுத்தார். கொழும்பில் வைத்தியசாலைகளுக்கு அண்மையில் அமைந்திருந்த அவரது அத்தனை சேவை நிலையங்களையும் ஒரே நாளில் மூடினார்.இந்த சேவையினால் பெரும் பலன் பெற்றுவந்த பெரும்பான்மை பௌத்த ஏழைகள் அரசுக்கு எதிராகவும், அப்படியான இனவாத அமைப்புக்களுக்கு எதிராகவும் கிளர்ந்து எழுந்தார்கள்.

இந்த வருடம் கொரோனா வந்து இனவாதிகள் அனைவருக்கும் அம்சமாக ஒரு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. வீதியில் சிவனே என்று போகின்ற கொரோனா சனியை நாம் சங்கூதி வீட்டுக்குள் அழைத்து நடு ஹாலில் சம்மணம் போட்டு அமர இடம் கொடுக்கக் கூடாது.

நமது முன்சோறு மேதாவிகள் உணவுப் பொதிகளை கொடுக்கும் பொழுது அனைவரும் சிரித்துக் கொண்டுதான் வாங்குவார்கள். அப்படி வாங்கும் நபர்களில் ஒருவருக்கு அல்லது விகாராதிபதி ஒருவருக்கு வேறொரு தொற்றாளர் மூலம் நோய்த் தொற்று வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நோயாளர்கள் உடனே நமது உலர் உணவுப்பொதி வழங்குனர்கள் மூலமே தொற்று பரவியது என்று சொல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?

முஸ்லிம் சமூகத்தை மறந்த தொப்பி ஜுப்பா அணைந்த நமது தேச பற்றாளர்கள் முகம் மூடாமல் இருக்கிறார்கள். கைகளில் கையுறையும் இல்லை. உலர் உணவுப்பொதிகளை சுகாதார பரிசோதகர் முன்னிலையில் பொதி செய்யவும் இல்லை. பங்கீடு செய்யப்படும் உணவுப் பொதிகளில் நோய்த்தொற்று இல்லை என்ற உத்திரவாதமும் இல்லை.

ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை இவர்களை செய்யச் சொல்லி யாருமே கேட்கவும் இல்லை. கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இப்படியான செய்கை விவேகமானதும் இல்லை.

ஒரு எந்த முறையில் சேவையை தொடர முடியும்? சிந்தியுங்கள். ஆலோசனை கூறுங்கள். முன்னெடுங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team