அரசாங்கத்தின் இனத்துவ மேலாதிக்கம்: எதிர்வினைகள் ஏன் எழவில்லை? - Sri Lanka Muslim

அரசாங்கத்தின் இனத்துவ மேலாதிக்கம்: எதிர்வினைகள் ஏன் எழவில்லை?

Contributors
author image

Fauzer Mahroof

ஒரு அரசாங்கத்தின் கருத்தியல்கள்தான்( Ideologies) அந்த அரசாங்கத்தினை வழிப்படுத்துகிறது, செயற்படுத்துகிறது, சட்டங்களை, விதிகளை உருவாக்கிறது. இதனை புரிந்து கொண்டால் இலங்கை அரசு/ அரசாங்கத்தின் செயற்பாடுகளை, அதன் இனவாத மேலாதிக்க நிகழ்ச்சி நிரலை புரிந்து கொள்ள முடியும். முதலில் இப்போதாவது இலங்கை முஸ்லிம் சமூகம் இதனை சரியாகப் புரிந்து , தனக்குள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் இப்போது நடப்பது , இலங்கை இனவாத பேரினவாத ஆதிக்கத்தில் முதல் தடவையும் அல்ல, இதுதான் இறுதியும் அல்ல. இலங்கையின் ஏனைய சிறுபான்மை மக்களுக்கும் இதுதான் கடந்த நிகழ்கால வரலாறு. எதிர்காலமும் நெருக்கடியானதுதான். இப்போது பட்டியலில் முஸ்லிம்கள் முதலில்…

இலங்கை அரசு/அரசாங்கத்தின் கருத்தியல் உள்ளடக்கத்தினை புரிந்து கொள்ள முற்படாது, அல்லது அதனை ஒரு முக்கிய அம்சமாகக் கருதாது, இந்த அரசியல் சூழலையும் திட்டங்களையும், நடைமுறைகளையும் காலத்திற்கு காலமான ஒவ்வொரு நிகழ்வினையும்்அர்த்தப்படுத்துவது/ விமர்சிக்க முயல்வது “ குருடன் யானை பார்த்த கதைக்கு ஒப்பானதே”.

நாம் மீண்டும் மீண்டும், இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்ல விரும்புவது – இன்றையஇலங்கை அரசு/ அரசாங்கத்தினை வழிப்படுத்தும் கருத்தியல்களைத் தெரிந்து கொள்ள , அதன் ஆழ அகலத்தையும் அதன் பாரதூரத்தினையும் புரிந்து கொள்ள, அதன் அரசியலை – கருத்தியல் , கோட்பாட்டு தளத்தில் கற்றுக் கொள்வது முக்கியமாகும்.

இந்தக் கற்றலை இலங்கையில் உள்ள எந்த முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளிடமிருந்தும் உங்களால் கற்க முடியாது. அவர்களுக்கு தெரிந்தது பாராளுமன்ற சந்தர்ப்பவாத அதிகார அரசியல் மட்டுமே. ஒடுக்கப்படும் மக்களுக்கான அரசியல் என்பதை இந்த கட்சிக் கூடாரங்களுக்கு வெளியிலேயே – இலங்கை முஸ்லிம் சமூகம் கற்றுக் கொள்ள முடியும்.

இப்போது பாருங்கள்… கடந்த காலங்களிலும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு அநீதி நடக்கிறது என புலம்பீனீர்கள். இப்போது அநீதி நடக்கிறது என்றே புலம்புகிறோம். இதிலிருந்து மீள்வதற்கான உருப்படியான ஏதாவது திட்ட நடைமுறைகளை இலங்கை முஸ்லிம் சமூகம் ஏற்படுத்தியுள்ளதா? தமது சிந்தனை/ செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களை செய்திருக்கிறதா என்பதை பாருங்கள்.

இந்த குறைந்த பட்ச புரிதல், விளக்கம் கூட இல்லாத ஒரு சமூகமாகவே இலங்கை முஸ்லிம் சமூகம் இன்றும் தன்னை நடத்துகிறது என்பதற்கான தெளிவான சாட்சியமே , இன்றைய ஜனாசா விவகாரத்தில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வெளிப்படுத்தல்கள். மற்றும் கையறு நிலையும். ஒரு சமூகத்தின் எதிர்வினைகளிலிருந்துதான் அந்த சமூகத்தின் உள்ளார்ந்த ஜீவனை புரிந்து கொள்ள முடியும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், இன்றைய இக்கட்டான ”கொரானா இனவாத அரசியல் சூழலில், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்து வரும் கருத்தாடல்களில் , குரல்களில் பெரும்பாலானவை புலம்பல்களாகவும் , உணர்ச்சி ததும்பும் சொல்லாடல்களாகவும், அரசியல் கட்சிசார் அக்கப்போராகவும் மட்டுமே இருக்கின்றன…

சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும், தொடர்பு சாதனங்கள் வழியாகவும் நாம் நடாத்தும் இந்த வழமையாக அரசியல் உணர்ச்சிகளும், கட்சிசார் அரசியல் அக்கப்போரும் எந்தப் பயனையும் தந்து விடப்போவதில்லை.

அரசியலை ஒரு கற்கத்துறையாக அணுகி படிப்பதும், இன்றைய இலங்கை அரசின்/ அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டினை , அரசியல் அறிவுடன் கோட்பாடு சார்ந்து புரிந்து கொள்வதுமே இன்று முதற்பணி.அடுத்து சர்வதேச, தென்னாசிய ( இந்திய) அரசியலை புரிந்து கொள்வதும்..

இல்லையேல், காலத்திற்கு காலம் ஒவ்வொரு வடிவத்தில் எழும் இந்த அடக்குமுறைகளுக்கும், பாராபட்சங்களுக்குமான பதில், புலம்பல்களும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளாவே இருந்து விடும். இன்னும் இதனை விரித்துச் சொன்னால் , இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்து கோட்பாட்டு தளத்தில், அதன் சிந்தனைகளில் இருந்து , அண்மைக்காலமாக (கடந்த 20 வருட கால ) இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறை , இனத்துவ மேலாதிக்கம் குறித்த பலமான எதிர்வினைகள் வரவே இல்லை என உறுதியாக எம்மால் சொல்ல முடியும்.

ஊர்களில் ஒரு மரபுத் தொடரை நம் முன்னோர் சொல்வர். ”புத்தியுள்ள புள்ளைக்கு செவ்வரத்தம் பூ நஞ்சில்லை “ என்று.-

Web Design by Srilanka Muslims Web Team