கொழும்பில் பணி புரியும் மலையக இளைஞர்களுக்கான அறிவித்தல் » Sri Lanka Muslim

கொழும்பில் பணி புரியும் மலையக இளைஞர்களுக்கான அறிவித்தல்

IMG_20200403_145359

Contributors
author image

Editorial Team

கொரோனா´ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பு மற்றும் ஏனையப் பகுதிகளிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு இக்காலப்பகுதியில் வருவோர் உரிய தரப்புகளுக்கு தகவல்களை வழங்குமாறு மலையக பிரதேசத்தில் கடமையாற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர்..

இதேவேளை ´கொரோனா´ வைரஸ் தொற்று அபாய வலயத்திலிருந்து தலவாக்கலைக்கு வந்து – எவ்வித தகவல்களையும் வழங்காமல் ஒளிந்திருந்த இருவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள்ளேயே நேற்று (02) முதல் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

புத்தளத்தை சேர்ந்த ஒருவரும், கொழும்பில் தொழில் புரியும் மற்றுமொரு நபருமே தலவாக்கலையில் இவ்வாறு மறைந்திருந்தனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுகாதார பரிசோதனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே அவர்கள் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பில் தொழில் புரிந்த நபரின் வீட்டுக்கு தன்னுடன் பணிபுரிந்த புத்தளத்தை சேர்ந்த நபரையும் அழைத்துக்கொண்டே அவர் இப்பகுதிக்கு வந்துள்ளார்.

தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் எழுவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் லக்மால் த சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் ஏனையப் பகுதிகளிலிருந்து தோட்டப்பகுதிகளுக்கு இக்காலப்பகுதியில் வருவோர் உரிய தரப்புகளுக்கு தகவல்களை வழங்குமாறு கோருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Web Design by The Design Lanka