துவேசத்தை விதைக்கிறார்களா முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்? - Sri Lanka Muslim

துவேசத்தை விதைக்கிறார்களா முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள்?

Contributors
author image

Mujeeb Ibrahim

அன்புள்ள இலங்கை முஸ்லிம் சமுதாயத்திற்கு,

• நம்மை நோக்கி இனவாத ரீதியாக விரல்கள் நீட்டப்படுவது உண்மை, இருந்தாலும் இந்த இக்கட்டான சூழலில் நாம் நிறைய மடத்தனங்களை செய்து வருகிறோம் என்பது கசப்பான உண்மை. இனவாதி இட்டுக்கட்டுகிறான் என்று நம்பப்படுகிற சில சம்பவங்கள் பின்னர் உண்மையாகி நம்மை தலை குனிய வைக்கின்றன.

உதாரணமாக கர்ப்பிணி தாய் கொரோனா தொற்றாளராக ஊர்ஜிதமானது!

• மேற்சொன்ன சம்பவத்தை ஆரம்பத்தில் பொய் என Whatsapp இல் வழமை போல ஆர்வக்கோளாறு சோனக அரசியல்வாதி பரவ விட்டிருந்தார். இவர் வாயை மூடிக்கொண்டிருந்தாலே எமது சமூகத்திற்கு பெரும் புண்ணியம் கிடைத்துவிடும்.

• இந்த சூழலில் எல்லோரும் கருத்துச்சொல்ல வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. வைத்தியர்கள், பாதுகாப்பு தரப்பினர், அரசாங்கம் என்கிற பிரதான முகாந்திரங்களில் இருந்து போதுமான அறிவுறுத்தல்கள் வருகின்றன.

• இந்த துரதிஷ்ட சூழலிலும் இனவாத பரப்புரைகள் நடப்பது உண்மை. அதற்காக பெரும்பான்மை மக்கள் எல்லோருமே இனவாதிகள் அல்ல.

• அடுத்தது 69 லட்சம் வாக்குகளை பெற்ற ஜனாதிபதியின் ஆட்சி இருக்கும் போது அதற்கு எதிராக வாக்களித்த மக்களும் பல லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்.

• அதற்காக வைத்தியர்களை, பாதுகாப்பு தரப்பினரை, சுகாதார உத்தியோகத்தர்களை அரசியல் கண்ணாடி போட்டு எல்லோரும் ஆளுந்தரப்பு ஆட்கள் என்ற மெளட்டீக பார்வை பார்க்க வேண்டாம்.

• இவ்வாறான மடத்தனமான சிந்தனைகளால் துவேசத்தை விதைக்கும் சோனக அரசியல்காரர்களின் கதைகளை கேட்டு கடைசியில் மடப்பட்டம் கேட்கவும் வேண்டாம்.

• இந்தக்காலத்தில் சமூக ஊடக பாவனை உங்களுக்கு மன உளைச்சலை தந்தால் அதனை ஏற்படுத்துகின்றவர்களை உங்களது Whatsup list இல் இருந்து அகற்றுவதோ, Facebook இலிருந்து அகற்றுவதோ நிவாரணத்தை தராது.

• மாறாக இந்த நிலமைகளை பொறுமையாக கையாள முடியாது போனால் நீங்கள்தான் இந்த சமூக ஊடகங்களில் இருந்து உங்களை விலக்கி கொள்ளவேண்டும்.

• முஸ்லிம்களுக்குள் தீவிரவாதம் பரவுகிறது, அந்த சமூகத்திற்குள் அடிப்படைவாதம் வளர்கிறது என்றெல்லாம் இனவாதிகள் பிரச்சாரம் செய்த போது நாமும் ஆழ அகலம் தெரியாமல் கடுமையாக defend பண்ணிக்கொண்டு வந்தோம்.

• ஈற்றில் ஈஸ்டர் தாக்குதல் நம் அனைவரது முகத்திலும் கரியை பூசிவிட்டு போனது.

• ஆகையால் சாரம்சம் என்னவென்றால் இந்த அனர்த்த சூழலில் துறைசார்ந்தவர்கள் தங்களது கடமையினை செய்வார்கள் நாம் மடமையினை செய்யாமல் ஒத்துழைப்போம்.

• இந்த குறிப்புகள் சிலருக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும், ஆனால் இதுதான் யதார்த்தம்.

நான் whatsup குழுமங்களில் இல்லை, இயலுமானவர்கள் இந்த குறிப்புகளை அவ்வாறான குழுக்களில் பகிர்ந்து விடுங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team