றம்ஸி ராசிக்கின் கைது மனதை மிகவும் குடைந்து கொண்டே இருக்கிறது - Sri Lanka Muslim

றம்ஸி ராசிக்கின் கைது மனதை மிகவும் குடைந்து கொண்டே இருக்கிறது

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Izzathun Niza

மிக தைரியமானதும், வெளிப்படையானதுமான எழுத்துக்கள் அவரது. எங்களுக்குள்ளேயே பேசி விமர்சித்துக் கொண்டிருந்த பல விடயங்களை மிக தைரியமாக பெரும்பாண்மை மக்களிடையே பேசியவர் எழுதியவர்.

விடயங்களை வெளிப்படையாகவும் தெளிவாகவும் பேசுபவர் எழுதுபவர்.
பெரும்பாண்மை மக்களிடையே இருக்கின்ற எம் சமூக மார்க்க ஒழுங்குகள் பற்றிய குழப்பங்களையும், இரு சமூகங்களிடையே ஏற்பட்டிருக்கின்ற தவறான புரிந்துணர்வுகளையும் தெளிவாக பேசவும் எழுதவும் வேண்டும் அவர்களுடன் உரையாட ஆரம்பிக்க வேண்டும் என்பதை தொடர்ந்தும் வலியுறுத்தி எழுதி வந்தவர்.

சாக்குப்போக்கான காரணங்களையும் நடுநிலையாக செயற்படுவோம் மறைமுகமாக வேலை செய்வோம் என காலம் காலமாக காரணங்களை மாத்திரம் சொல்லிக்கொண்டே வரும் பல இஸ்லாமிய அமைப்புகளையும் தலைவர்களையும் காரசாரமாக கேள்வி கேட்பவர்.

கடந்த வருடம் சரியாக இதே நாட்கள்தான் என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து பெரும்பாண்மை மக்களின் சரமாரியான கேள்விகளுக்கும் நம் சமூகத்தில் உள்ள சில அயோக்கியர்களது செயற்பாடுகளுக்கும் இடையில் ஒரு கட்டத்தில் ஒரு வகையான fed up மனநிலையில் ஒரு பதிவு இட்டிருந்ததும் அதற்கு நானும் ‘give some break for your writings and take rest if you feel fed up’ என்ற வகையிலான எனது கருத்தையும் பதிவிட்டதும் கூட இதை எழுதும் போது நினைவிற்கு வந்து போகிறது. அப்பொழுதும் கூட அந்த மன உளைச்சலை கடந்து வந்து தனது பணியை மேலும் சிறப்பாக செய்து வந்தவர்.

இந்த நாட்டில் அனைத்து இன மக்களுக்குமிடையே சரியான புரிந்துணர்வும் அவர்களுக்கான உரிமைகளும் உறுதிப்படுத்தப்படாதவிடத்து மேலோட்டமாக எழும் ஒப்பந்தங்களும் விட்டுக்கொடுப்புகளும் கோஷங்களும் இன ஐக்கியத்திற்கும் ஆரோக்கியமான இலங்கையின் எதிர்காலத்திற்கு ஒரு போதும் வழி வகுக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தவர்.
பல பெரும்பாண்மை சகோதரர்களோடு ஆரோக்கியமான விமர்சனங்களையும் விளக்கங்களையும் தொடர்ந்தும் இவர் வழங்கி வந்தமையை இவரது முகனூலிலே கூட தெளிவாக காணலாம்.

இந்த நிலையில் இவரது சில பதிவுகள் தொடர்பான குற்றச்சாட்டும் அதை தொடர்ந்தான இவரது கைதும் மிக ஆச்சரியத்தையும் கவலையையும் தருகிறது.

கடந்த வருடமும் இதே மாதிரியாக இந்த நாட்டின் நலனுக்காக தொடர்ந்து எழுதி
மிக தைரியமாக தனது
எழுத்துக்களால் பசுந்தோல் போர்த்திய ஓனாய்களாக இருந்த பலரை இந்த சமூகத்திற்கு அடையாளம் காட்டிய இன்னொரு சகோதரரும் இதே போல் கைதாகியதும் நாம் அறிந்ததே.

நாட்டு நலனையும் நாட்டு மக்களின் நலனையும் இன மதங்களை கடந்து வலியுறுத்திய இத்தகைய மனிதர்கள் மிக அவசரமாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அவர்களது எழுத்தும் எழுத்துரிமையும் முடக்கப்படுவது இந்த நாட்டின் வளரும் எதிர்கால சந்ததிதினருக்கு ஒரு ஆரோக்கியமான உதாரணம் அல்ல. வெளிப்படையாகவும் தைரியமாகவும் எழுதும் பேசும் பலர் இத்தகைய விடயங்கள் மூலம் ஸ்தம்பித்து போயுள்ளது நமக்கு நேர்ந்திருக்கும் துரதிஷ்டமே.

எப்படியிருப்பினும் இந்த வகையில் சட்டமும் நீதியும் இவரது விடயத்தில் சரியான முறையில் அணுகி நீதியை நிலை நாட்டும் என்பதை நம்புவதை தவிர வேறு வழியில்லை.

அதே நேரம் தேசிய மீடியாக்கள் அல்லது சமூக ஊடகங்கள் என்பவை தங்களது வழமையான பாணியில் கண்டும் காணாமல் கொரோனா செய்தியை சொல்லிக்கொண்டிருக்கின்றன.

ஊ டக அராஜகத்திற்கும் அடக்குமுறைக்கும் காவல் நிலையங்களுக்கும் சிறைக்கும் என தனது எழுத்தின் மூலமும் அந்த எழுத்துக்களின் கனதி மூலமும் பல கடினங்களையும் அச்சுறுத்தல்களையும் தாண்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்தவள் என்ற வகையில் சகோதரர் றம்ஸி ராஸீக் அவர்களது குடும்பத்தின் கடினமான நாட்களை புரிந்து கொள்வதோடு எனது பிரார்த்தனைகளையும் சேர்த்துக் கொள்கிறேன்.

மிக தைரியமாகவும் தெளிவாகவும் இறைவன் மீதான நம்பிக்கையுடனும் இருக்குமாறும் அவரது குடும்பத்தினரிடம் எதிர்பார்க்கிறேன்.

நாட்டு நலனை மாத்திரமே இலக்காக கொண்ட அந்த உறைக்கும் எழுத்துக்கள் அத்தனை சீக்கிரம் மடிந்து போய் விடக்கூடாது.

Web Design by Srilanka Muslims Web Team