இலங்கையை ஆட்டிப்படைத்த மற்றுமொரு தொற்றுநோய்: மரணம் 1.25 லட்சம் - Sri Lanka Muslim

இலங்கையை ஆட்டிப்படைத்த மற்றுமொரு தொற்றுநோய்: மரணம் 1.25 லட்சம்

Contributors
author image

M.I.முபாறக் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

இலங்கையை ஆட்டிப்படைத்த மற்றுமொரு தொற்றுநோய்:
மரணம் 1.25 லட்சம்: பாதிப்பு 15 லட்சம்:
கண்டி-கேகாலையில் உக்கிரம்:
ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சல்:
ஒவ்வொருவருக்கும் காய்ச்சல்:
ஒவ்வொரு வீட்டிலும் 1 அல்லது 2 மரணம்…
……………………………………………………………………..
தொற்றுநோய்கள் புதியவை அல்ல எமது நாட்டுக்கு.பல தடவைகள்..பல்வேறு பெயர்களில் அவற்றை எதிர்கொண்டிருக்கிறது எமது நாடு.

ஸ்பெயின் வைரஸ்…அதன் தாக்கம்…அதனால் ஏற்பட்ட உயிழப்பு…பலியானோரின் எண்ணிக்கை…
இப்படி எல்லாவற்றையும் பார்த்தோம் இதற்கு முன்னுள்ள பதிவில்.

இப்போது பார்க்கப்போவது மற்றுமொரு தொற்றுநோய்.86 வருடங்களுக்கு முன் நாட்டை புரட்டிப் போட்ட நோய் அது.

இன்று இலங்கையில் முற்றாக ஒழித்துக்கட்டப்பட்ட நோய் அது.அதுதான் மலேரியா.

அது எமக்கு ஏற்படுத்திய பேரழிவு லேசுபட்டதல்ல.திடீர் திடீரென வரும்.கொத்துக் கொத்தாக உயிர்களை பறிக்கும்.ஓய்ந்துவிடும்.

இப்போதுதான் ஓரளவு நிம்மதி எமக்கு அதில் இருந்து.

பல தடவைகள் எம்மைத் தாக்கியுள்ளது.அதில் ஒரு தடவை தாக்கியதை-அதனால் ஏற்பட்ட அவலத்தைப் பார்ப்போம் இங்கு.

1934 இன் இறுதிப் பகுதி அது.பிரிட்டிஷ் ஆட்சி.

ஏற்படுகிறது பெரும் வரட்சி.அதனைத் தொடர்ந்து பெருவெள்ளம்.ஒக்டோபரில்…

அந்த வெள்ளமே காரணம் மலேரியாவின் பரவலுக்கு.தலைதூக்குகிறது நவம்பரில்…

கேகாலை மாவட்டம்தான் அதன் பிறப்பிடம்.

வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமான ரப்பர்,தேயிலைத் தோட்டங்களில் இருந்தும் லயன் வீடுகளில் இருந்துமே பெருக்கெடுக்கின்றன மலேரியா நுளம்புகள்..

வெள்ளத்தைத் தொடர்ந்து தேங்கிய நீர்.சுத்தமற்ற லயன் வீட்டுச் சூழல்கள்.இவையே காரணம் நுளம்புகளின் பெருக்கத்துக்கு..

மிக வேகமாகப் புரட்டிப் போடுகிறது கேகாலையை.டிசம்பரில் மாத்திரம் 3027 பேர் பலி.அதில் 2800 குழந்தைகள்.

1935 ஜனவரியில் மேலும் உக்கிரம்.முதல் இரண்டு வாரங்களில் 1976 பேர் பலி.அவர்களுள் 1470 பேர் குழந்தைகள்.

அந்த மாவட்டத்தில் ஒன்றரை மாதத்தில் மாத்திரம் 3500 குழந்தைகள் பலி.அதனைத் தொடர்ந்து மேலும்…

அங்கிருந்து கண்டி,கொழும்புக்கு….

இப்படி நாட்டின் பல இடங்களுக்கும் தாவுகின்றன இந்த நுளம்புகள்.

கண்டியின் நிலைமைதான் மிகப் பரிதாபம்.

ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சல்.வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் காய்ச்சல்.ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் அல்லது இருவர் பலி.

உடல்களைப் புதைக்க முடியவில்லை.புதை குழியைத் தோண்டுவதற்கு இயலவில்லை.

காரணம்?

எல்லோருக்கும் காய்ச்சல்.குழியைத் தோண்டுவதற்குத் தெம்பில்லை.மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்கும் வழியில்லை.எல்லோரும் படுக்கையில்.

அடுப்பெரிந்து நீண்ட நாட்கள்.எழுந்து நிற்க சக்தி இல்லை..யார் போய்ச் சமைப்பது?

வறுமை ஒருபுறம்..காய்ச்சல் மறுபுறம்.இரண்டுமே காரணமாகின்றன அடுப்பங்கரை காய்வதற்கு…

உணவும் தட்டுப்பாடு.மருந்தும் தட்டுப்பாடு.

உணவு வழங்கவும் ஆளில்லை.மருந்து வழங்கவும் ஆளில்லை.

மரணத்துக்குக் காரணம் காய்ச்சலா அல்லது பசியா?

இப்படிக் கேட்கும் அளவுக்கு நிலைமை உக்கிரம்.

வைத்தியத் துறையோ கடும் பொடுபோக்கு.மலேரியா உக்கிரமடைய இதுவே பிரதான காரணம்.

வைத்தியர்கள் முதலில் செய்தது என்ன தெரியுமா?

இந்த நோய் பற்றிய செய்தியை மூடி மறைத்ததுதான்.

செய்திகளை ஊடகங்களுக்கு வழங்குவதில்லை.உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கிறது கொழும்பு பொது வைத்தியசாலை.

அந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுள் மூன்றில் இரண்டு மடங்கு மலேரியா நோயாளிகள்.

இதனால் தடுமாறுகிறார்கள் வைத்தியர்கள்.முற்றாக மூடி மறைக்கிறார்கள் உண்மையை.

இந்தச் செய்தி தாமதமாகவே சென்றடைகிறது அப்போதைய இலங்கை ஆளுநர் சிறிமத் ரெஜினோல்ட் எட்வார்ட் ஸ்டப்ஸிற்கு.

ஆளுனருக்கோ கடும் ஆத்திரம்.விமர்சிக்கிறார் வைத்தியர்களின் இந்தத் தீர்மானத்தை.

தயாராகிறார் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்வதற்கு.வைத்தியர்களோ அதற்கு முட்டுக்கட்டை.அவருக்கும் மலேரியா தொற்றும் என்று எச்சரிக்கிறார்கள்.

எதையும் பொருட்படுத்தவில்லை.நடப்பது நடக்கட்டும்.களத்தில் இறங்கிவிட்டார்.

களத்தில் நின்றே கவனிக்கிறார் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தையும்.

மலேரியாவைக் கட்டுப்படுத்த முன்னுக்கு வருக்கிறது இராணுவம்.அதை விரும்பவில்லை வைத்தியர்கள் .

ஆளுநரோ இப்போது களமிறக்குகிறார் இராணுவத்தை.வைத்தியர்களின் விருப்பத்துக்கு மாறாக…

மறுபுறம் களமிறங்குகிறது இளைஞர் அணி ஒன்று.பின்நாளில் பிரபல்யமாகப் பேசப்பட்ட இடதுசாரி அரசியல்வாதிகள் அவர்கள்.

என்.எம்.பெரேரா,கொல்வின் ஆர்.டி.சில்வா.பிலிப் குணவர்தன,ரொபேர்ட் குணவர்தன..இப்படியொரு பட்டாளம்.

மிகப் பெரியது இவர்களின் பங்களிப்பு.

மலேரியாவைக் கட்டுப்படுத்துதல்-பசியைப் போக்குதல்.

களமிறங்குகிறார்கள் இந்த இரு நோக்கோடு..அதற்கான பொருட்களோடு…

மருந்துகள்-உணவுகள் வீடுகள் தோறும் விநியோகம்.என்.எம்.பெரேராவின் தோள்களில் பருப்பு மூட்டைகள்.ஒவ்வொரு வீடாக விநியோகம்.

இதனால் அவருக்கு பட்டப் பெயர் ”பருப்பு மஹாத்தயா” என்றானது.

Mr. Dhal என அழைத்தார்கள் வெள்ளையர்கள்.

கலங்கி நின்றார்கள் கண்டியின் அவலம் கண்டு.முடியுமான அளவு உதவினார்கள்.

1936 ஆம் ஆண்டு தேர்தலில் இவர்கள் வெற்றி பெறுவதற்கும் இந்த நிவாரணப் பணியே காரணம்.

இவ்வாறு முழு நாட்டையும் சுற்றி வந்தது இந்த மலேரியா.

7 மாதங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பலி.80 ஆயிரம் என்கிறது இன்னொரு தகவல்.

அப்போதைய சனத்தொகை 55 லட்சம்.மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் 15 லட்சம்.

ஆயுர்வேத வைத்தியமே முற்றுப்புள்ளி வைக்கிறது இந்த நோய்க்கு.

நாட்டின் பல இடங்களில் நிறுவப்பட்டன ஆயுர்வேத வைத்தியசாலைகள்..தற்காலிக வைத்தியசாலைகளாக பாடசாலைகள் பல…சிகிச்சைகள் தீவிரம்.

முடிவுக்கு வருகிறது மலேரியா 1935 ஜூலையில்….

மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்ட நாடாக இப்போது எம் நாடு.மிக்க மகிழ்ச்சி….

அதைப்போல்..கொரோனாவும் முற்றாக ஒழிவதற்குப் பிராத்திப்போம்…அதற்கு ஏற்ப செயற்படுவோம்.

[ஊடகவியலாளர் எம்.ஐ.முபாறக்]

Web Design by Srilanka Muslims Web Team