சுடலை ஞானமும் பலமிழந்த அரசியலும் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எனது இவ்வார வீரகேசரி கட்டுரை –

ஜனாஸா எரிப்புக்கு எதிராக சிவில் அமைப்புக்கள் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்கின்றன, அதில் ஒரு வழக்கில் சுமந்திரன் ஆஜராகப் போகின்றாா் எனத் தெகவல்கள் வெளியான பிறகு, அதாவது –
தவறுதலாக எரிக்கப்பட்ட ஒரு தாய் உட்பட 4 முஸ்லிம் நோயாளிகளின் உடல்கள் சுடலையிலடப்பட்ட பின்னரே….
நமது முஸ்லிம் தலைவா்கள், தளபதிகள் விழித்தெழுந்திருக்கின்றார்கள்.

ஆனாலும், முஸ்லிம் சமூகம் இந்த சமூக அக்கறையை மதிக்கின்றது, காத்திரமான முயற்சிகளை எடுக்குமாறு வேண்டி நிற்கின்றது.

முழுவடிவம் –
——–

சுடலை ஞானமும்
பலமிழந்த அரசியலும்

(ஏ.எல். நிப்றாஸ் – வீரகேசாி)
Ahamed Nifras

மரண வீடுகளுக்கு சென்று, உயிரற்ற உடல்களைப் பார்க்கும் வேளையிலும், இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளும் போதும், ‘இந்த வாழ்க்கை நிலையற்றது’ என்ற எண்ணமும், ‘இறப்பதற்கிடையில் நன்மைகளைச் செய்து விட வேண்டும்’ என்ற ஞானமும் நமக்கு வருவதுண்டு.

ஆனால், எல்லாம் முடிந்து, வீட்டுக்குத் திரும்பி வழமையான உலக இன்பங்களுள் மூழ்கிவிட்டால் இந்த ஞானம், இருந்த இடம்தெரியாமல் போய்விடும்.

இதனைத்தான் சுடலை ஞானம் என்று சொல்வார்கள். அதேபோன்று, ஒரு காரியத்தை செய்ய வேண்டிய காலம் கடந்துபோய், இழப்புக்களை எல்லாம் அனுபவித்த பிறகு கடைசிக் கட்டத்தில் ஒரு விடயம் பற்றி எழுகின்ற அக்கறையையும் சுடலை ஞானம் என்றே உவமானம் செய்வர்.

அந்த வகையிலான, ஒரு சுடலை ஞானம் இப்போது முஸ்லிம் அரசியல் பெருவெளியில் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. பொதுவாகவே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் மேற்குறிப்பிட்ட இருவகைகளிலும் ‘சுடலை ஞானிகள்’ போல செயற்படுவதை வழக்கமாகக் கொண்டவர்களான முஸ்லிம் அரசியல்வாதிகள், கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பது பற்றி இப்போதுதான் உரக்கப் பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

முன்னதாக. ஒருகட்டத்திற்குப் பிறகு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமல் வாழாவிருந்த இவர்கள், இது விடயத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் களத்தில் இறங்கிய பின்னர், பிழையான மருத்துவ ஆய்வுகூட அறிக்கையால் ஒரு முஸ்லிம் தாய் அநியாயமாக சுடலையில் எரிக்கப்பட்ட பின்னர், விழித்தெழுந்திருக்கின்றார்கள்.

உலக ஒழுங்கு

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை எரிக்கவும் முடியும், புதைக்கவும் முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அதையே வழிமொழிந்திருந்தது. ஆனால், நிலத்தில் புதைத்தால் நிலத்தடியில் வைரஸ் பரவுமா என்பதை ஆய்ந்தறிந்து நிரூபிக்காமலேயே, முஸ்லிம்களின் உடல்களையும் எரிப்பது என்ற முடிவுக்கு சுகாரதார அமைச்சு வந்தது.

‘உடல்களை அடக்கமும் செய்யலாம்’ என்ற உலக ஒழுங்கிலிருந்து சீனாவைப் போல இலங்கையயும் விடுபட்டு முஸ்லிம்களின் சடலங்களையும் எரிக்க தீர்மானம் எடுத்ததன் பின்னணி குறித்து முஸ்லிம் சமூகத்திற்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக, இது சுகாதாரத் துறையினர் மீது திணிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்மானமா என்ற சந்தேகம் பல முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் உள்ளது.

இலங்கையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சுகாதார நோக்கத்திற்காக மட்டுமேயன்றி, வேறு எந்த அரசியல், சமூக, இனத்துவ காரணங்களுக்காகவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்குமாக இருந்தால், அது ஏற்றுக் கொள்ள முடியாததும், இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, நல்லடக்கத்தை விரும்புகின்ற கத்தோலிக்க சமூகத்திற்கும் செய்கின்ற பெரும் அநீதியாகவே அது அமையும்.

பலமற்ற அரசியல்

இந்தத் தீர்மானம் அரசியல் செல்வாக்கினால் எடுக்கப்பட்டதாயினும் இல்லாவிட்டாலும், இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் தோற்றுப் போனமைக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பலவீன நிலையே அடிப்படைக் காரணமாகும்.

உலக நியதிகள் எல்லாம் முஸ்லிம்களுக்குச் சாதமாக இருக்கின்ற ஒரு பின்புலச் சூழலில், முஸ்லிம்களுக்கான அரசியலும் குறைந்தபட்சம் தமிழ்த் தேசிய அரசியலைப் போலாவது ‘வல்லமைமிக்கதாக’ இருந்திருக்குமென்றால், முஸ்லிம்களின் மனம் புண்படும் விதத்தில் தான்தோன்றித்தனமான ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்காது. (இங்கு, பலமான அரசியல் என்பது, ராஜபக்ச தரப்புக்கு வாக்களித்தல் அல்ல)

முஸ்லிம்களின் அரசியல் பலவீனமடைந்தமையால் முஸ்லிம் சமூகம் இழந்த ஆகக் கடைசி உரிமையே இதுவாகும். ஆனால், முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல் தலைமைகள் என்று சொல்லிக் கொள்வோர் பலமிழந்து, செல்லாக்காசாகிப் போனதன் விளைவாக முஸ்லிம் சமூகம் இழந்தவைகளின் பட்டியலில், ஜனாஸா எரிப்பு விவகாரம் முதலும் அல்ல, கடைசியாக இருக்கும் என்றும் கூற முடியாது.

திசைமாறிய கட்சிகள்

(எம்.எம்.மொஹிதீனால் முன்மொழியப்பட்டு சேகு இஸ்ஸதீன் போன்றோரின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட) முஸ்லிம்களின் தனித்துவ அடையாள அரசியல் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு அதற்குரிய பாதையில் பயணிக்கவில்லை. சுருக்கமாகச் சொன்னால், இணக்க அரசியல் என்ற கோதாவில், பெருந்தேசியக் கட்சிகளின் கிளைக் கட்சிகளைப் போலவே முஸ்லிம் காங்கிரஸும் அதன் பிறகு உருவாகிய மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட இதர முஸ்லிம் கட்சிகளும் செய்து கொண்டிருக்கின்றன.

தலைவரின் மரணித்திற்குப் பிறகு, சந்திரிக்காவில் மையங் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல், 2005 தொடக்கம் 2015 வரை மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்தியிருந்தது. பிறகு 2019 வரை ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை சுற்றிச் சுழல்வதாக காணப்பட்டது. இப்போது கோத்தாபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோரை நோக்கி நகர்ந்திருக்கின்றது.

ஆக மொத்தத்தில், மேற்குறிப்பிட்ட ஆட்சியாளர்களுக்கு தேவையானதைச் செய்வதற்காகவே முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் முட்டுக் கொடுத்திருக்கின்றன. இதற்கு கைமாறாக, ஒரு சிலர் ‘வெகுமானங்களை’ பெற்றதாக சொல்லப்படுகின்றமை நமக்கு நிச்சயமில்லை. ஆனால், கட்சித் தலைவர்களுக்கு ஒரு முழு அமைச்சுப் பதவியும், கட்சியில் மேலும் இருவர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகளும் கிடைத்தன.

முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த அபிவிருத்திகளை தவிர்த்துப் பார்த்தால் உரிமை அரசியலில் கடந்த 20 வருடங்களில் முஸ்லிம்களின் எந்த பிரத்தியேக உரிமைகளையும் இக்கட்சிகள் பெற்றுத்தரவில்லை. எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இயந்திரமாக கட்சிகள் பயன்படுத்தப்பட்டனவே தவிர, சமூக உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எந்த முஸ்லிம் கட்சியும் பரிணமிக்கவில்லை.

தமிழர் அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பிலும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அக்கட்சியும் தமிழர்களுக்கு பெரிதாக எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது வேறுவிடயம். ஆனால், அமைச்சுப் பதவிகளில் அமரவில்லை என்றாலும் கூட முஸ்லிம்களை விட உரிமை அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னோக்கி சென்றிருப்பதை யாரும் மறுக்கவியலாது.

சில முஸ்லிம் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரணிலோடு உறவில்லை. இன்னுமொரு காலத்தில் ராஜபக்சக்களை எதிர்த்து அரசியல் செய்கின்றன. ‘வைத்தால் குடும்பி – அடித்தால் மொட்டை’ என்ற போக்கையே கடைப்பிடிக்கின்றன. ஆனால், தமிழ்த் தேசியம் அவ்வாறில்லை. த.தே.கூட்டமைப்பானது ஆட்சியாளர்களை எதிர்க்கவும், சமூகத்திற்காக அடுத்த கணமே அவர்களுடன் நேருக்கு நேர் நின்று பேசவும் தயாராக இருக்கின்றது.

அப்படியான ஒரு திராணியை முஸ்லிம் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ வளர்த்துக் கொள்ளவில்லை. யாருக்கும் வால் பிடிக்காமல், நக்குண்டு நாவிழக்காமல், பெருந்தேசியத்தின் கொல்லைப் புறங்களில் வெகுமதிகளுக்காக காத்துக் கிடக்காமல், சமூகத்தின் பிரச்சினைகளை மையப்படுத்திய தனித்துவ அடையாள அரசியலை செய்திருந்தால், இந்த நிலைமை முஸ்லிம்களுக்கு வந்திராது. இவ்விடயத்தில், முஸ்லிம் மக்களும் மறைமுகமாக பெருந்தவறைச் செய்திருக்கின்றனர்.

பதவியும் அதிகாரமும் இருந்த காலத்தில் முஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகள் அதிகபட்சமாக அவற்றை சமூகத்திற்காக பயன்படுத்தவில்லை. பயன்படுத்த நினைக்கின்ற நேரத்தில் அவர்களிடம் அதிகாரமில்லை. ஆனால், கடந்த காலத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகளும், தமக்கிடையே வசைபாடிக் கொண்டிருக்காமல், மக்கள் வழங்கிய ஆணையை மக்களுக்காவே சரியாகப் பயன்படுத்தியிருந்தால் முஸ்லிம் சமூகத்தின் தலைவிதி வேறுவிதமாக இருந்திருக்கும்.

இவ்வாறு ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களில் உள்ள முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சுய அடையாளமும், பலமும் இழந்து போனமைக்கு பிரதான பொறுப்புக் கூற வேண்டியவர் அஷ்ரபுக்குப் பிறகு தலைமைத்துவத்திற்கு வந்த றவூப் ஹக்கீம் ஆவார். ஆனால், முஸ்லிம் அரசியலின் வழித்தடத்தை மாற்றியமைத்த அவர் மட்டுமன்றி, அதற்குப் பிறகு கட்சி தொடங்கிய றிசாட் பதியுதீன், அதாவுல்லா, ஹசன்அலி மற்றும் ஹிஸ்புல்லா உள்ளடங்கலாக ஏனைய முஸ்லிம் முன்னாள் எம்.பி.க்கள் அனைவருமே பொறுப்பாளிகள் என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட வேண்டியுள்ளது.

அந்த வகையில், கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடந்த இரு தசாப்தகால முஸ்லிம் அரசியல் தோல்வி கண்டுள்ளது அல்லது எதிர்பார்த்த வெற்றியை நோக்கி பயணப்படவே இல்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது. இதன் கடைசி விளைவே, கொரோனாவினால் மரணத்த முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய முடியாத கைசேத நிலையாகும்.

ஜனாஸா எரிப்பு

கொரோனாவினால் உயிரிழக்கும் சடலங்களை எரிப்பது என்ற ஒழுங்குவிதியின் கீழ் இலங்கையில் இதுவரையில் 9 பேரின் உயிர்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதில் நான்கு பேர் முஸ்லிம்கள் ஆவர். அதில் கடைசியாக எரியூட்டப்பட்ட தாய்க்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என இப்போது தெரியவந்துள்ளது. ஆனால், இந்தத் தருணம் வரை முஸ்லிம் சமூகம் தொடர்பில் பேரினவாதக் கட்சிகள் இரக்கம் காட்டவில்லை, முஸ்லிம்களின் உணர்வை மதிக்கவில்லை.

ஏனெனில், எல்லா பெருந்தேசிய தலைவர்களும் முஸ்லிம்களை கிட்டத்தட்ட ஒரேவிதமான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். முஸ்லிம் கட்சிகள்தான் தங்களுக்கு இடையில் கோத்தபாய ராஜபக்ச – சஜித் பிரேமதாச என்று பிரிந்து நிற்கின்றீர்கள். ஆனால் அவர்களின் கணக்கில், முஸ்லிம்களின் வாக்குகள் சிங்களவர்களின் வாக்குகளை ‘குறைநிரப்புச் செய்பவை’ மட்டுமே என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். ஏனெனில் இவர்களைப் போல அவர்கள் அரசியல் அறிவிலிகள் இல்லை.

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவோ சஜித் பிரேமதாசவோ ஜனாசா எரிப்பு விவகாரம் பற்றி முஸ்லிம்களுக்காக கடந்த வாரம் வரை பேசவில்லை. ராஜபக்சவை ஆதரரிப்பதே முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்று கூறியவர்களால் கூட, ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுக்க முடியாமல் போய்விட்டது.

சிவில் அமைப்புக்கள்

முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்ட பிறகு பிரதமர் மற்றும் அதிகாரிகளுடன் முஸ்லிம் கட்சிகள் நடாத்திய சந்திப்பு தோல்வியில் முடிந்தது. அத்துடன், தனியாக சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனால் எதிரணி முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, ஆளும் தரப்பில் உள்ள அரசியல்வாதிகளும் விரக்தியுற்றனர்.

ஆனால், அவர்கள் அதனைத் தடுப்பதற்கு சட்ட ரீதியாகவோ அல்லது இராஜதந்திர ரீதியாகவோ தொடர் நடவடிக்கைகளை எடுக்காமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஜம்மியத்துல் உலமா சபை போன்ற அமைப்புக்களும் போதுமான நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

52 நாள் நெருக்கடி காலத்தில் நீதிமன்றம் சென்ற முஸ்லிம் கட்சிகள், கறுத்த கோட் அணிந்து மன்றுக்கு வந்த அரசியல்வாதிகள் யாரும் கடந்த சில நாட்கள் வரையும் இந்த ஜனாசா எரிப்புக்காக நீதிமன்றத்தை நாடவில்லை என்பது கவனிப்பிற்குரியது.

இவ்வாறு முடங்கிக் கிடந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்போதுதான் தூங்கியவனை யாராவது தட்டியெழுப்பினால் திடுக்கிட்டு எழுவது போல, விழித்தெழுந்து, மீண்டும் செயற்பாட்டுக் களத்திற்கு வந்திருக்கின்றனர்.

அதாவது, முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதாகவும் அதில் ஒரு வழக்கில் தமிழ் அரசியல்வாதியான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.என்.சுமந்திரன் ஆஜராகின்றார் என்றும் தகவல்கள் வெளியாகிய பிறகு…. கொரோனா தொற்றாத ஒரு முஸ்லிம் பெண் அநியாயமாக சுடலையில் இடப்பட்ட பிறகு…. இதுபற்றி பேசவும் நடவடிக்கையும் எடுக்கவும் தொடங்கியிருப்பதாக தெரிகின்றது.

அந்த வகையில், குரல்கள் இயக்கம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில், இலங்கையின் முக்கிய மூன்று சமூக செயற்பாட்டாளர்கள் கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிரான மனுவை தாக்கல் செய்துள்ளனர். அத்துடன், முஸ்லிம் கவுன்சிலின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதிலேயே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார்.

அதன்பின்னர், புறக்கோட்டை பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளர் சார்பிலும் ஒரு அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜராகவுள்ளதாக தெரிகின்றது. இதன்பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய அரசியல்வாதிகள் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருக்கின்றனர்;.

(பிந்திக் கிடைத்த தகவலின்படி, இதன்பிறகு, மு.கா.வின் சார்பில் முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்)

இதற்கிடையில், கொரோனாவினால் மரணிப்போரை தகனம் செய்ய வலியுறுத்தும் வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி இரு கத்தோலிக்கர்களும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இவ்விவகாரம் இன்னும் பலம் பெற்றிருப்பதுடன், உடல்களை எரிப்பது முஸ்லிம்களுக்கு மட்டுமேயுரிய பிரச்சினையல்ல என்பதும் குறிப்புணர்த்தப்பட்டுள்ளது.

தலைவர்களின் நடவடிக்கை

இந்நிலையில். ராஜபக்சக்களின் எல்லா ஆட்சிக்கும் துணைநின்ற தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். காட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். ‘கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு எதிரான போராட்டம் தொடரும்’ என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக ராஜபக்ச அரசாங்கத்தை கடிந்து கொள்ளாத அதாவுல்லா இவ்விதம் கூறியுள்ளமை, முஸ்லிம் தரப்புக்கு குறிப்பாக அதாவுல்லாவின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட பதிலின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்றாலும், இதுவே உண்மையாக இலங்கை முஸ்லிம்களின் மனக் குமுறலும் ஆகும்.

இதேவேளை, மு.கா. தலைவரும் சட்ட முதுமானியுமான றவூப் ஹக்கீம், ‘சுமந்திரனுக்கு எங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும், நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம்’ என்றும் முகநூல் நேரலையில் குறிப்பிட்டிருந்தார். இது தவிர, ஓரிரு உள்ளுராட்சி சபைகளில் கண்டனத் தீர்மானங்கள், கையெழுத்து பெறுதல் போன்றனவும் இடம்பெறுகின்றன.

ஆனால் உண்மையில், முதல் இரு சிவில் அமைப்புக்களும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்கின்றன, அதில் ஒரு மனு சார்பில் எம்.ஏ.சுமந்திரன் கட்டணம் எதுவும் பெறாமல் ஆஜராகப் போகின்றார் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கி, தேர்தல் பற்றிய பேச்சுக்கள் மேலெழுந்த நிலையிலேயே முஸ்லிம் அரசியல்வாதிகள் இது விடயத்தில் ஞானம் பெற்றதாக கூற முடியும்.

சுமந்திரன் விவகாரம்

இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். அதாவது, பெரிய பெரிய வழக்குகளில் ஆஜராகும் பல முஸ்லிம் சட்டத்தரணிகள் எல்லோரும் தமது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகள் விரக்திடைந்து முடங்கிக் கிடந்த நிலையில், தமிழ் சமூகத்தில் இருந்து ஒருவர் கட்டணம் எதுவும் இன்றி வழக்காட முன்வருகின்றார் என்றால், அவரது நல்லெண்ணத்தை மதிப்பதுடன் அவரைக் கொண்டு வழக்கை வெல்ல முடியுமா என்று சிந்திக்க வேண்டுமே தவிர தேவையற்ற ஆராய்ச்சிகள்; நேர விரயமே அன்றி வேறொன்றுமில்லை.

உண்மையில், ஜனாஸா எரிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மனுக்கள், நிஜமான அரசியல் பலமும் நாதியும் அற்ற ஒரு சமூகம் நீதி தேவதையிடம் சமர்ப்பித்திருக்கி;ன்ற கருணை மனுக்களை போன்றவையாகும்.

அந்த வகையில் இவ்விடயத்தில் பொறுப்பைச் சுமந்தவர்களான முஸ்லிம் அரசியல் தலைமைகள், உலமா சபைபோன்ற அமைப்புக்களை விட ஒரு கணமாவது முன்னதாக செயற்படத் தொடங்கிய சிவில் அமைப்புக்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

சுடலை ஞானம்போல சற்றுக் காலம் கடந்துதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் இது விடயத்தில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கின்றார்கள் என்றாலும், அதை இச்சமூகம் மதிக்கின்றது.
அது காத்திரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றது.

பிரபலமான ஆங்கிலப் பழமொழி கூறுவதைப் போல, எதையுமே செய்யமால் சும்மா இருப்பதை விட ஏதாவது ஒன்றைச் செய்வது மேலாகும்.

அந்த வகையில், நாம் எதிர்பார்க்கும் நீதி கிடைக்கவில்லை என்றாலும் கூட, ஆகக் குறைந்தது நாம் நம்மாலான முயற்சியைச் செய்தோம் என்ற ஆறுதலாவது முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கும்;. அதற்காகவாவது முயற்சிக்க வேண்டியுள்ளது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசாி – 17.05.2020)

Web Design by Srilanka Muslims Web Team