“இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து” » Sri Lanka Muslim

“இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து”

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், காக்கையன்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், இலக்கம் இல் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“கத்தோலிக்க சகோதரரான செல்லத்தம்பு அண்ணன் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளராகவும், இந்து சகோதரர் நந்தன் முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளராகவும், சிங்கள சகோதரர் ஜயதிலக்க வட மாகாண சபை உறுப்பினராகவும், இந்தப் பிரதேசத்தின் உள்ளூராட்சி சபை உறுப்பினராக குணம் ஐயா போன்ற இன்னும் பலர், உள்ளூராட்சி சபைகளில் பிரதித் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் எமது கட்சியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டனர். இதன் மூலம், வடக்கிலே பிரிந்துகிடந்த தமிழ், முஸ்லிம், சிங்கள உறவை “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” கட்டியெழுப்பியிருகின்றது என்ற உண்மை புலப்படுகின்றது. எமது கட்சி அனைத்து இனங்களையும் அரவணைக்கின்றது என்பதையும் இது கட்டியங்கூறி நிற்கின்றது.

அரசியலில் எதையெதை எல்லாமோ செய்ய சக்தி இருந்ததோ, அத்தனையையும் இந்தப் பிரதேசத்துக்குச் செய்துள்ளோம். மீண்டும் இந்தப் பிரதேசத்துக்கு நீங்கள் வந்து சுவாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்ததோடு, வாழ்க்கைக்குத் தேவையான கட்டமைப்புக்களை அமைத்துக் கொடுத்தோம். அதேபோன்று, சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், நாம் எடுத்த முயற்சியின் பலனாக, இன்று இந்தப் பிரதேசத்தின் பாதை புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இடம்பெறத் தொடங்கியமை, எமது பணிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறோம். தமிழ் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்ததோடு, அவர்களுக்கான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முடிந்தளவில், மிக நேர்மையாக செய்திருக்கின்றோம்.

எம்மைத் தோற்கடிக்க வேண்டுமென்ற சூழ்ச்சி, இப்போது உக்கிரமாக இடம்பெறுகின்றது. சமுதாயத்துக்காக பேசுகின்ற தலைமைகளை வீழ்த்த நினைக்கும் சக்திகளே, எமக்கெதிரான செயற்பாடுகளில் தீவிரம் காட்டியுள்ளன.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதில் இன்பம் கண்டு, அதன்மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை சுவீகரிக்கும் கூட்டத்துக்குப் பின்னால் அலைந்துதிரிபவர்கள் பற்றி நாம் என்னதான் கூறுவது? அவர்களின் மனம் எப்படி இதற்கெல்லாம் இடங்கொடுக்கின்றது?

இந்தச் சமுதாயத்தை துன்பப்படுத்துவதையும், துவம்சம் செய்வதையும் குறிக்கோளாகக்கொண்டு, திட்டமிட்டு இயங்கும் இந்தச் சக்திகள், எம்மை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளுக்கு நீங்கள் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. ஊர்களும் ஊரவர்களும் ஒன்றுபடுவதன் மூலமே இவற்றை முறியடிக்கலாம்” என்று கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team