20 வது அரசியலமைப்பு திருத்தம்; முஸ்லிம்களுக்கு சாதகமா? » Sri Lanka Muslim

20 வது அரசியலமைப்பு திருத்தம்; முஸ்லிம்களுக்கு சாதகமா?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

( ஏ.எச்.எம்.பூமுதீன் )

20 ஆவது திருத்த சட்டமூலம் குறித்த மனுக்கள் மீதான இரண்டாவது நாள் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. நீதிமன்ற தீர்ப்பு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளது.

உத்தேச சட்டமூலத்தில் 4 விடயங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

20 வது திருத்தம் என்பது ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்றது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பது என்பதை அழுத்தமாக அன்று கூறியவர் மர்ஹூம் – முகா ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப்.
அதனையே தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமும் கூறுகின்றார்.

ஹக்கீம் மட்டுமன்றி – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா ஆகியோரின் உறுதியான நிலைப்பாடும் அதுதான்.

இந்தப் பின்னணியில் தான் – முகா தலைவர் ஹக்கீம் – 20 இற்கு எதிராக நீதிமன்றம் சென்றது ஏன் ? என்ற கேள்வி எழுகின்றது.

19 வது அரசியலமைப்பு திருத்தம் – பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கி – சில , பல முக்கிய விடயங்களில் பிரதமரின் ஆலோசனையையும் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை ஜனாதிபதிக்கு விதித்திருந்தது. அது ஒரு புறமிருக்க…

19 வது அரசியலமைப்பு திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இதில் அரசியல் தலையீடுகளுக்கு இடமே இருக்கவில்லை. இதனால் , தாம் நினைத்தபடி செயற்படும் சூழல் ஆணைக்குழுக்களுக்கு கிட்டியது.

பதவி உயர்வு , இடமாற்றம் , நியாயமான பதவிகள் நியமனம் எல்லாமே ஆணைக்குழுக்களில் உள்ளவர்கள் நினைத்தமாதிரியே நடந்தேறின. ஆகக் குறைந்தது ஒரு சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிளைக் கூட இடமாற்ற முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது / காணப்பட்டது.

இதனால், அதிகளவில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்களே. இதனை முகா தலைவர் ரவூப் ஹக்கீம் நன்கு அறிவார்.

20 வது திருத்தத்தில் இந்த ஆணைக்குழுக்களின் அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ- ஒரு அரசியல்வாதி. அதனால் , மற்றொரு அரசியல்வாதி -ஜனாதிபதியை சந்தித்து நியமனம் , இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு குறித்து பேசி தீர்வினைக் காணக்கூடியதாக இருக்கும்.இது 20 வது திருத்தத்தில் உள்ளடக்கப்படுகின்றது.

20 இற்கு எதிராக நீதிமன்றம் சென்ற ரவூப் ஹக்கீம் – ” நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து 20 இற்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பதை கட்சி தீர்மானிக்கும்” என்கிறார். அப்படியானால் , எதற்காக 20 இற்கு எதிராக நீதிமன்றம் சென்றார் ? 20 இல் உள்ள குறைபாடு அல்லது முஸ்லிம் சமூகத்துக்குள்ள பாதகமான ஷர்த்துக்கள் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி – இதற்காகத்தான் 20 இற்கு எதிராக நீதிமன்றம் செல்கிறேன் என்றல்லவா கூற வேண்டும்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் என்ற தனிப்பட்ட அஜெந்தாக்களுக்காக  தான்தோன்றித்தனமாக முஸ்லிம் சமுகத்தை இன்னும் இன்னும் முட்டாளாக்க – பலிக்கடாவாக்க முயலக் கூடாது.

முகா எம்பீக்களை அழைத்து – 20 இற்கு ஆதரவளிப்போம் என்று கூறிய ஹக்கீம் – திடீரென உயர்பீடத்தினரின் அனுமதி இன்றி தன்னிச்சையாக தீர்மானித்து நீதிமன்றம் சென்றது பெரும் ஐயத்தை இன்று கட்சிக்குள்ளும் ஆதரவாளர்கள் மத்தியிலும் புத்திஜீவிகள் மத்தியிலும் மிக ஆழமாக தோற்றுவித்துள்ளது.

பல்கலைக்கழக முஸ்லிம் பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் , உலமாக்கள் போன்றோர் – ஹக்கீமின் இந்த செயற்பாடு தொடர்பில் பெரும் அதிருப்தி கண்டுள்ளனர்.

மஹிந்த மற்றும் கோட்டாபய அரசை எடுத்ததெற்கெல்லாம் எதிர்க்கும் மனோநிலையை ஹக்கீம் மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எதிர்ப்பது என்றால் – அதில் ஒரு நியாயம் , தர்மம் – ஒரு லொஜிக் இருக்க வேண்டும் என்கின்றனர்.

20 இற்கு எதிராக ஹக்கீமைப் போன்று – ரிஷாத் பதியுதீனும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என கூறும் ஹக்கீமின் ஒரு சில நெருக்கமானவர்கள் – எதற்காக – 20 இல் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான எந்த ஷர்த்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள் இல்லை.

20 வது திருத்தம் தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் அமைதியான அல்லது புத்திசாதுர்யமான நிலைப்பாடு மேற்சொன்ன முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் முஸ்லிம் சமுகத்தினரால் வெகுவாக பாராட்டப்படுகின்றது.அதேபோன்றே அதாவுல்லா மீதான பார்வையும் இருக்கின்றது.

ஒரு பேச்சுக்கு – தற்போதைய அரசாங்கம் இனவாதம் – துவேசம் நிறைந்தது என்று கூறி நியாயம் கற்பிக்க முனைந்தால் – சஜித் தரப்பு என்ன செய்கிறது என்ற கேள்வி மறுபக்கம் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.

தேசியப் பட்டியல் விடயத்தில் அநியாயம் செய்தது மட்டுமன்றி – அதாவுல்லா மற்றும் அலிசப்ரி ஆகியோரின் ஆடை விடயத்தில் சஜித் தரப்பு உச்சக்கட்ட துவேஷத்தை அள்ளிக் கொட்டியதை எந்த ரீதியில் பார்ப்பது. வெளிப்படையாகக் கூறப்போனால் ஜனாதிபதி கோட்டாபய அரசு – சஜித் தரப்புடன் ஒப்பிடுகையில் எவ்வளவோ மேல்.

ஆக – முஸ்லிம் சமுகத்துக்கு எதிரான எந்தவொரு ஷர்த்துக்களையும் கொண்டிராத – முஸ்லிம் சமுகத்திற்கு அதிக சாதகங்களை ஏற்படுத்தித் தரக் கூடிய 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பது என்பது – இன்னும் இன்னும் பெரும்பான்மை இனத்தவரோடு முஸ்லிம் சமுகத்தை மோத விடுவதற்கான காய்நகர்த்தலாகவே பார்க்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka